துடிதுடிக்க வைத்த கொடூரம்


துடிதுடிக்க வைத்த கொடூரம்
x
தினத்தந்தி 15 July 2018 9:30 PM GMT (Updated: 15 July 2018 12:19 PM GMT)

‘தினத்தந்தி’ உள்பட சில பத்திரிகைகளிலும், ‘தந்தி’ டி.வி. உள்பட சில தொலைக்காட்சிகளிலும் கடந்த 12–ந்தேதியும், தொடர்ந்து சில நாட்களும் வெளிவந்த ஒரு காட்சி பார்ப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தது.

‘தினத்தந்தி’ உள்பட சில பத்திரிகைகளிலும், ‘தந்தி’ டி.வி. உள்பட சில தொலைக்காட்சிகளிலும் கடந்த 12–ந்தேதியும், தொடர்ந்து சில நாட்களும் வெளிவந்த ஒரு காட்சி பார்ப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தது. அநியாயமாக கொன்றுவிட்டார்களே, தள்ளிவிட்டு கொன்றுவிட்டார்களே என்று துடிதுடிக்க வைத்தது. கோவையில் உள்ள நரசீபுரத்தில் இருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் 19 வயதான மாணவி லோகேஸ்வரி. இந்த கல்லூரியில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் முதல் உதவி பயிற்சி அளித்தார்கள். 

தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் இந்த பயிற்சியை அளிப்பதாக போலி பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் தலைமையில் ஒருசிலர் மாணவர்களுக்கு பயிற்சியை அளித்தனர். ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் மாடியிலிருந்து எப்படி குதித்து உயிர் தப்புவது? என்ற பயிற்சி அளிக்கப்பட்டது. 2–வது மாடியிலிருந்து ஒவ்வொரு மாணவியாக கீழே குதித்து வலையில் விழுமாறு பயிற்சியாளர் ஆறுமுகம் கூறினார். அப்போது, ‘‘வேண்டாம், எனக்கு பயமாக இருக்கிறது’’ என்று பக்கவாட்டு சுவரை இறுக பற்றிக்கொண்டு உட்கார்ந்து இருந்த லோகேஸ்வரியை, ஆறுமுகம் தள்ளிவிட்டதால் முதல் மாடியில் இருந்த தடுப்பு மீது தலைகீழாக விழுந்ததால் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இப்படியொரு பயிற்சியாளரையா வைத்திருக்கிறார்கள்? என்று எல்லோருமே ஆதங்கப்பட்டார்கள். ஆனால், உள்துறை அமைச்சகம் இதை மறுத்துவிட்டது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் கமல் கிஷோர் கூறுகையில், கோவை அருகே உள்ள கல்லூரியில் பயிற்சி அளித்த ஆறுமுகம் எங்களால் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் அல்ல என்றும், இதுபோன்ற பயிற்சிகளை அளிக்க சில வரைமுறைகளை வைத்து இருப்பதாகவும், மாடியில் இருந்து குதிக்கச் சொல்வது எங்கள் பயிற்சி திட்டத்திலேயே கிடையாது என்றும் தெரிவித்தார். இப்போது விசாரணையில் தேசிய பேரிடர் மேலாண்மையின் போலி ‘லெட்டர் ஹெட்’டில் ஒரு கடிதத்தை தயாரித்து மத்திய அரசாங்கம் இத்தகைய பயிற்சிகளை அறிவிப்பதாக கூறி கல்லூரியை ஏமாற்றியிருக்கிறார். பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.50 வசூலித்து இருக்கிறார். இதுபோல இந்த போலி பயிற்சியாளர் பல கல்லூரிகளில் தனது ஏமாற்று வேலையை அரங்கேற்றி இருக்கிறார். ஆக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அனுமதியில்லாமல், வழிகாட்டுதல் இல்லாமல், மேற்பார்வை இல்லாமல் இதுபோன்ற பாதுகாப்பு பயிற்சிகளை கல்லூரிகள், பள்ளிக்கூடங்களில் நடத்துவது உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும். கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் இதுபோன்ற போலிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்தவித பயிற்சி என்றாலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரி கல்வித்துறை, பள்ளிக்கூட கல்வித்துறை மூலமாக தகவல் வந்தால் மட்டும் இத்தகைய பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கவேண்டும். அங்கு இருந்து தகவல் வந்தாலும் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். எந்த பயிற்சி அளித்தாலும் உள்ளூர் போலீசார், தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிக்காக உள்ளூர் ஆஸ்பத்திரி ஆகியோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் நடத்தப்படவேண்டும்.

Next Story