ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனையா?


ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனையா?
x
தினத்தந்தி 16 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-16T22:38:50+05:30)

எந்த உணவை சாப்பிட்டால் நல்லது, எதை தவிர்த்தால் உடல்நலத்துக்கு நல்லது? என்று மக்கள் ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

டாக்டரிடம் எந்த நோய்க்கு சென்றாலும் மருந்துகள் மட்டும் கொடுப்பது மட்டுமல்லாமல், எத்தகைய உணவை சாப்பிடவேண்டும், எந்த உணவுகளை தவிர்க்கவேண்டும் என்ற நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள். கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளவர்களிடம் நீங்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும், மீன் சாப்பிடுவது நல்லது, அதிலும் சிறியரக மீன்கள் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது என்று கூறுவார்கள். இதய நோய்க்கான சிகிச்சை பெறுபவர்களைக் கூட மீன் சாப்பிட ஆலோசனை வழங்குகிறார்கள். அந்தவகையில், இப்போதெல்லாம் பொதுமக்களிடம் மீன் சாப்பிடவேண்டும் என்ற உணர்வு மேலோங்கிவிட்டது. மீன் கடைகளிலும் சரி, வியாபாரிகளிடமும் சரி, கூடையில் வைத்து மீன் விற்பவர்களிடமும் சரி, கடலில் படகில் சென்று மீன்பிடித்துக்கொண்டு கரைக்கு வந்து இறக்கும்போதும் சரி, மீனுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது. 

அப்படிப்பட்ட நிலையில், மீனை வெகுநாட்களாக கெடாமல் வைத்திருக்க பார்மலின் என்ற ரசாயன பொருளை தடவி விற்கப்படுகிறது என்ற செய்தி சிலதினங்களுக்கு முன்வந்ததை கண்டு மக்கள் பீதி அடைந்துபோய் இருக்கிறார்கள். அந்த பார்மலின் ரசாயன பொருள் பிரேதங்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்துவதற்காக பயன்படுத்துவதாகும். இத்தகைய பார்மலின் மீன்கள் மீது தடவப்பட்டு வருகிறது என்று செய்தி வருவதை மீன்வளத்துறை அமைச்சர் மறுத்திருக்கிறார். ஆனால், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு தீவிர சோதனைகள் நடந்து வருகிறது. இந்த பார்மலின் ரசாயன பொருளால் உடலுக்கு பெரிய தீங்கு ஏற்படுகிறது. கண்ணில், தொண்டையில், தோலில், வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. வெகுநாட்கள் பார்மலின் தடவிய பொருட்களை சாப்பிட்டால் சிறுநீரகம், ஈரல் போன்ற பாதிப்பு மட்டுமல்லாமல், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது, பொதுமக்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. இதைத்தடுக்க, மீன்வளத்துறையும், உணவு பாதுகாப்புத்துறையும் மிகத்தீவிரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு பரிசோதனைகள் இதற்கான கருவிகள் மூலம் மேற்கொள்ளப்படவேண்டும். மீன் வியாபாரிகளும் தங்களிடம் விற்பனைக்கு வரும் மீன்கள் இவ்வாறு பார்மலின் தடவிய மீன்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்த ரூ.3 ஆயிரம் விலையிலான இந்த பரிசோதனை கருவிகளை வாங்கிக்கொள்ளலாம். 

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மையங்கள் இருக்கும் நாகப்பட்டினம், தூத்துக்குடி, மாதவரம் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள வாணியஞ்சாவடியில் இருக்கும் முதுநிலை மீன்வள படிப்பு சம்பந்தமான மையத்திலும் இந்த கருவியை வாங்கிக்கொள்ளலாம் என்றும், இங்கு பரிசோதனை செய்யும் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது என்றும் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், மீன் மார்க்கெட்டுகள், மீன் வியாபாரிகள், மீனவ நலச்சங்கங்கள், அதிக அளவு மீன்கள் வாங்கும் பொதுமக்கள்கூட இந்த கருவிகளை வாங்கி எளிய முறையில் பரிசோதனை செய்து, பார்மலின் ரசாயனம் தடவாத மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளதை உறுதி செய்துகொள்ளலாம். இத்தகைய பார்மலின் ரசாயனத்தை தடவி மீன் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story