இந்தி திணிப்பு முயற்சியா?


இந்தி திணிப்பு முயற்சியா?
x
தினத்தந்தி 17 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-17T22:22:40+05:30)

‘இந்தியன் ரெயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரே‌ஷன்’ என்று கூறப்படும் இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம், ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

‘இந்தியன் ரெயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரே‌ஷன்’ என்று கூறப்படும் இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம், ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். பொதுவாக இது ஐ.ஆர்.சி.டி.சி. என்று அழைக்கப்படுகிறது. 1999–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ந் தேதி அன்று தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா வளர்ச்சி ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், டிக்கெட் வழங்கும் சேவையிலும் செயல்படுகிறது. ஆன்லைன் மூலம் இந்த நிறுவனத்தில் எந்த பயணியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். செல்போனை கையில் வைத்துக்கொண்டே எந்த ரெயிலுக்கு வேண்டுமானாலும் டிக்கெட் பதிவு செய்யமுடியும். ஆனால் இந்த டிக்கெட் முன்பதிவுக்கான இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தியை பயன்படுத்தி மட்டுமே மக்கள் பதிவு செய்யும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சரி இந்தி வேண்டாம், ஆங்கிலத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வோம் என்று இணையதளத்தை பயன்படுத்துவதற்காக புறப்படும் இடம், சேரும் இடம் ஆகியவற்றை ‘டைப்’ செய்தால் இந்தியில்தான் முதலில் ஊர் பெயர்கள் வருகின்றன. அதன்பிறகுதான் ஆங்கில பெயர்கள் வருகின்றன. இந்திக்கு என இணையதளத்தில் தனியாக ஒரு பிரிவு இருக்கும்போது, ஆங்கில இணையதள பிரிவில் தேவையில்லாமல் இந்தி திணிக்கப்படுவது நிச்சயமாக ஏற்புடையதல்ல.

பொதுமக்கள் இந்தியா முழுவதிலும் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்கும்போது, அந்தந்த மொழிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தி கொடுப்பதுதான் சாலச்சிறந்ததே தவிர, தேவையில்லாமல் இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க, ஒட்டுமொத்த பிறமொழி மக்களும் பயன்படுத்தும் ரெயில்வே இணையதளத்தை பயன்படுத்தக்கூடாது. ஆங்கிலமும் தெரியாமல், இந்தியும் தெரியாமல், தாய்மொழி மட்டும் தெரிந்த சாதாரண பாமர மக்களுக்கு தற்போது ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் அவர்களாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்துவது நிச்சயமாக முடியாது. யாருடைய உதவியாவது கேட்டுத்தான் பயன்படுத்த வேண்டியநிலையில் இருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம், ‘இந்தி பேசவோ, எழுதவோ படிக்க தெரியாத தமிழ்நாட்டு மக்கள்மீது இவ்வாறு அவர்களுக்கு தெரியாத இந்தி மொழியை திணிப்பது சரியல்ல’ என்று ரெயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

தமிழ்நாட்டில் எப்போதும் இந்தி திணிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்வதற்காக தமிழ் உள்பட மற்ற மொழிகளிலும் வசதி செய்து கொடுக்கப்படவேண்டும். இங்கே ரெயில் டிக்கெட்டுகளே தமிழிலும் வந்திருக்கும்போது, இணையதள வசதியையும் தமிழிலும் இருக்கவேண்டும் என்பதை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தில் இந்த பிரச்சினையை கிளப்பி இந்தி பேசாத மற்ற மாநில எம்.பி.க்களின் துணையோடு உடனடியாக தமிழில் இந்த வசதி ரெயில்வே இணையதளத்தில் ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். நாட்டு மக்கள் அனைவரையும் இணையதளத்தை பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கும் வகையில், ‘டிஜிட்டல் இந்தியாவை’ தீவிரப்படுத்தும் நேரத்தில் தடைக்கற்களாக இருக்கும் இந்த இந்தி திணிப்பு முயற்சியை உடனடியாக நிறுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story