மேட்டூர் அணையில் திறந்துவிடும் தண்ணீரை சேமிக்க வேண்டும்


மேட்டூர் அணையில் திறந்துவிடும் தண்ணீரை சேமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 July 2018 9:30 PM GMT (Updated: 18 July 2018 5:03 PM GMT)

காவிரி டெல்டா மாவட்டங்களிலுள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிரிடும் விவசாய பெருங்குடி மக்களுக்கு மேட்டூர் அணை ஒரு பெரிய வரப்பிரசாதம்.

காவிரி டெல்டா மாவட்டங்களிலுள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிரிடும் விவசாய பெருங்குடி மக்களுக்கு மேட்டூர் அணை ஒரு பெரிய வரப்பிரசாதம். இந்த அணைக்கட்டுவதற்கான திட்டமிடல் 1834–ம் ஆண்டே தொடங்கியது. அதிலிருந்து 1924–ம் ஆண்டு வரை இதற்கான ஆய்வுகள்தான் நடந்ததே தவிர, 1925–ம் ஆண்டுதான் கட்டுமான பணிகள் தொடங்கின. அன்றைய காலக்கட்டத்தில் ரூ.4 கோடியே 80 லட்சம் செலவில் இந்த அணையைக்கட்டியதில் முக்கியப்பங்கு வகித்தவர், மேட்டூர் அணையின் சிற்பி என்று கூறப்படுபவரான ராயல் பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லீஸ் தான். அணையின் முழுகொள்ளளவு 93.47 டி.எம்.சி.யாகும். அணைக்கட்டி முடித்து முதல்முறையாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது, 1934–ம் ஆண்டு ஜூன் 12–ந்தேதியாகும்.

பொதுவாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று விவசாயிகளின் குரல் ஓங்கி ஒலிக்கும். இன்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் நிலையில், டெல்டா விவசாயிகள் இப்போது தண்ணீர் திறந்துவிடுவது எங்களுக்கு பலனளிக்காது, சற்று தள்ளிவைக்கலாம் என்கிறார்கள். காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன், ‘ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடையை நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், இப்போது தண்ணீர் திறந்துவிடப்படுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த மாதம் சம்பாசாகுபடி தொடங்கியபிறகு தண்ணீர் திறந்துவிடுவதே சாலச் சிறந்தது’ என்கிறார். ஆனால், 2013–ம் ஆண்டு ஆகஸ்டு 5–ந்தேதிக்கு பிறகு இப்போதுதான் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பி விடும் சூழ்நிலையில், தண்ணீர் திறந்துவிடாமல் நிச்சயம் இருக்க முடியாது.

தற்போது கர்நாடக மாநிலத்தில் அபரிமிதமாக பெய்யும் தென்மேற்கு பருவமழையில் அங்குள்ள அணைகள் எல்லாம் நிரம்பி, இனிமேலும் தேக்கிவைத்தால் ஆபத்து என்றநிலையில் தண்ணீரை திறந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டை வடிகாலாக கருதித்தான் திறந்துவிட்டாலும், தமிழக மக்களுக்கு நிச்சயமாக இந்தநேரம் இது பயனளிக்காது. ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. தண்ணீர்தான் கர்நாடகம் திறந்துவிட வேண்டும். ஆனால், இப்போது கர்நாடகத்தில் பெய்யும் மழையைப்பார்த்தால் இந்த அளவையெல்லாம் தாண்டி வந்துவிடும்போல் தெரிகிறது. தற்போது விவசாயத்திற்கு தண்ணீர் தேவையில்லை. குறுவை சாகுபடி முடிந்து, சம்பா சாகுபடி நேரத்தில்தான் தண்ணீர் தேவையாக இருக்கும். எனவே, தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்காமல், இப்போதே திட்டமிட்டு ஆங்காங்கு உள்ள சிறிய அணைக்கட்டுகள், குளங்கள், ஏரிகள் போன்ற அனைத்து நீர்நிலைகளிலும் சேமிக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும். உரியமுறையில் சேமித்தால் மாயனூர் தடுப்பு அணையில் 3 டி.எம்.சி.யும், திருச்சி மேல்  அணையில்  2  டி.எம்.சி.யும்,   கல்லணையில்    3டி.எம்.சி.யும், கீழணையில் 2½ டி.எம்.சி.யும், சேத்தியாத்தோப்பில் 1½ டி.எம்.சி.யும், சேமித்து வைக்க முடியும். இதேபோல மேட்டூரிலிருந்து ஈரோடு வரும் வரை இருக்கும் 10 தடுப்பு அணைகளில் 20 டி.எம்.சி தண்ணீரை சேமித்து வைக்கமுடியும். ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாக கடலில்போய் கலக்காத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதுமட்டுமல்லாமல், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு இல்லாமல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் அறிவிப்பு சட்டச்சிக்கலை உருவாக்கும். உடனடியாக அந்த ஆணையத்தின் ஒப்புதலையும் பெறவேண்டும் என்கிறார், மன்னார்குடி ரங்கநாதன்.

Next Story