வெளியே வரும்போது திருந்தியவர்களாக வரவேண்டும்


வெளியே வரும்போது திருந்தியவர்களாக வரவேண்டும்
x
தினத்தந்தி 20 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-20T22:33:04+05:30)

இந்திய தண்டனை சட்டம் உள்பட பல்வேறு சட்டங்களை மீறுபவர்கள், கிரிமினல் குற்றங்கள், மோசடி–ஏமாற்று போன்ற குற்றங்கள், தேசதுரோகம், கொலை, வழிப்பறி, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களுக்கான வழக்குகளில் ஈடுபடுபவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட பின்னர் நீதிமன்றம் கொடுக்கும் தண்டனையை நிறைவேற்றுவதுதான் சிறைச்சாலை.

ந்திய தண்டனை சட்டம் உள்பட பல்வேறு சட்டங்களை மீறுபவர்கள், கிரிமினல் குற்றங்கள், மோசடி–ஏமாற்று போன்ற குற்றங்கள், தேசதுரோகம், கொலை, வழிப்பறி, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களுக்கான வழக்குகளில் ஈடுபடுபவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட பின்னர் நீதிமன்றம் கொடுக்கும் தண்டனையை நிறைவேற்றுவதுதான் சிறைச்சாலை. ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை’ என்பது அரசியல்வாதி களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் தங்கள் தவறுக்காக வருந்தி, திருந்தி, வெளியே வரும்போது, ‘புதுவாழ்வு தொடங்கப்போகும் தூயமனிதர் களாக தங்கள் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் பயனுள்ளவர்களாக வெளியே வரவேண்டும்’ என்பதுதான் சிறைச்சாலையில் அடைப்பதற்கான நியதியாக இருக்கவேண்டும். அந்தவகையில் தற்போது கொடூர குற்றங்கள் அல்லாத மற்ற குற்றங்களில் தண்டனைப்பெற்று சிறையில் உள்ளவர்கள், அவர்கள் தண்டனை காலத்தில் பாதிகாலத்திற்குமேல் சிறையிலேயே கழித்துவிட்டால், அவர்களை விடுதலை செய்யலாம் என்று மத்திய மந்திரிசபை கூடி முடிவு செய்துள்ளது. மூத்த குடிமக்கள், பெண்கள், 3–ம் பாலினத்தவர், உடல் ஊனமுற்றோர், நோயாளிகள் ஆகியோர் இந்தப்பிரிவில் அடங்குவார்கள். இதை 3 கட்டங்களாக செயல்படுத்த உள்ளனர். 

தூக்குத்தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டவர்கள், வரதட்சணை கொலை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் மற்றும் பொடா, தடா, போக்சோ, பணபரிவர்த்தனை மோசடி, அன்னிய செலாவணி மோசடி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களில் தண்டனை பெற்றவர்கள் இதில் அடங்கமாட்டார்கள். 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களும், 3–ம் பாலினத்தவரும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், தங்களுக்கு விதிக்கப் பட்ட தண்டனை காலத்தில் பாதிக்குமேல் சிறையிலேயே கழித்திருந்தால் விடுதலை செய்யப்படுவார்கள். இதுபோல 70 சதவீதத்திற்குமேல் உடல் ஊனமுற்ற வர்களை விடுதலை செய்யவும் முடிவு செய்யப்பட் டுள்ளது. இதுமட்டுமல்லாமல், கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 66 சதவீதத்திற்குமேல் தண்டனை காலத்தை கழித்த அனைத்து கைதிகளையும் விடுதலை செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்துள்ளது. 

தமிழ்நாட்டில் மொத்தம் 138 சிறைச்சாலைகள் உள்ளன. இதில் 22 ஆயிரத்து 792 கைதிகளை அடைத்து வைக்கமுடியும். தற்போது 14 ஆயிரத்து 98 கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். இதில் விசாரணை கைதிகள் மட்டும் 6 ஆயிரத்து 972 பேர் ஆவார்கள். ஏற்கனவே கடந்த மாதம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவுசெய்த ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 1,758 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்படும் கைதிகளுக்கு தண்டனை கொடுப்பது மட்டுமே சிறைத்துறையின் நோக்கமாக இருக்கக்கூடாது. தண்டனை காலத்தில் அவர்கள் மனதை முழுமையாக மாற்றும்வகையில், அவர்கள் திருந்துவதற்கான வழிகளை அடையும் வகையில், நீதி போதனைகள் நடத்தவேண்டும். கைதிகள் சிறையிலிருந்து வெளியே வரும்போது, சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இல்லாமல், பயனுள்ளவர்களாக வரவேண்டும். இதுபோல, அவர்கள் மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு தொழிலை கற்றுக்கொடுத்து, வெளியேவந்து தங்கள் பிழைப்புக்கு தாங்களே தொழிலை தொடங்கும்வகையில் பயிற்சியை கொடுக்கவேண்டும். மேலும் அதற்கான அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும். இது அரசின் கடமை மட்டுமல்ல, சமுதாயத்தின் கடமையுமாகும். 

Next Story