பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்


பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்
x
தினத்தந்தி 23 July 2018 11:08 PM GMT (Updated: 2018-07-24T04:38:20+05:30)

இந்தியா முழுவதிலும் கடந்த 4 நாட்களாக லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நடத்தும் இந்த வேலைநிறுத்தத்தில், தமிழ்நாட்டிலும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழுமூச்சுடன் இறங்கியுள்ளது. நாடுமுழுவதும் ஏறத்தாழ 75 லட்சம் லாரிகள் ஓடவில்லை என்று உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 31-3-2018 அன்றைய கணக்கின்படி 5,85,303 சரக்கு வாகனங்கள் ஓடுகின்றன. இந்த வேலைநிறுத்தத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை என்று கூறப்படுகிறது. அரசுக்கு கிடைக்கவேண்டிய சுங்கக்கட்டணம், காப்பீடு கட்டணம் போன்றவை கிடைக்காததால் வருமான இழப்பு ஏற்படுகிறது. லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. பொதுமக்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அன்றாட பயன்பாட்டு பொருட்கள் வரத்தில் பாதிப்பு ஏற்படத்தொடங்கிவிட்டது.

லாரி உரிமையாளர்கள் 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டோ, சற்று குறைந்துகொண்டோ இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 2 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 847 வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவ்வளவு வாகன உரிமையாளர்களுமே பெட்ரோல்-டீசல் விலை அதிகமாக இருக்கிறது. இதற்கு மத்திய அரசாங்கத்தின் ஆயத்தீர்வையும், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியும் சேர்ந்து கொடுக்கும் அழுத்தம்தான் காரணம். இதைத்தவிர்க்க, சரக்கு சேவைவரி வரம்புக்குள் பெட்ரோல்-டீசலை கொண்டுவரவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையைத்தான் லாரி உரிமையாளர்களும் வலியுறுத்தி, பெட்ரோல்-டீசல் விலைமாற்றத்தை தினசரி என்பதற்கு பதிலாக, 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும் என்கிறார்கள். 3-வது நபர் இன்சூரன்சு கட்டணத்தை பொறுத்தமட்டில் ரெயில், விமான விபத்துகளில் இறப்பவர்களுக்குக்கூட ரூ.5 லட்சம்தான் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது. ஆனால் லாரிமோதி இறந்தால் மட்டும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வழங்கவேண்டியநிலை இருக்கிறது. அதிக விபத்துகளை ஏற்படுத்துவது என்ற கணக்கை எடுத்துக்கொண்டால், 48 சதவீத உயிரிழப்புகள் இருசக்கர வாகனங்களால் ஏற்படுத்தப்படுகிறது. 10.6 சதவீத உயிரிழப்புகள்தான் லாரிகளால் ஏற்படுகிறது. இதுபோன்ற பலகுறைபாடுகளை போக்க, இன்சூரன்சு சட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும் என்பது மற்றொரு கோரிக்கையாகும்.

இதுமட்டுமல்லாமல், நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஆங்காங்கு ஏராளமான சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் காலாவதியான சுங்கச்சாவடிகளும் இன்னமும் கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கின்றன. சுங்கச்சாவடிகளில் லாரிகள் நீண்டவரிசையில் நிற்கவேண்டிய நிலையில், வீணான எரிபொருள் சேதாரமும், தாமதமும் ஏற்படுகிறது. தற்போது இந்தச்சுங்கச்சாவடிகள் மூலமாக ஆண்டுக்கு ரூ.17,250 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்தநிலையை மாற்றும் வகையில் லாரி உரிமையாளர்களே ரூ.18 ஆயிரம் கோடி தந்துவிடுகிறோம். சுங்கச்சாவடிகளை அகற்றிவிடுங்கள். லாரி உரிமையாளர்கள் கட்டணம் தருவதால் கார் உள்பட மற்ற வாகனங்களுக்கு சுங்கச்சாவடி வரி வசூலிக்க வேண்டிய கட்டாயமில்லை என்கிறார்கள். 4 நாட்களாக நடக்கும் வேலைநிறுத்ததத்தால் ஏற்படும் பாதிப்புகள், வீணான வருவாய் இழப்புகளை தவிர்க்கும்வகையில், உடனடியாக மத்திய அரசாங்கம் லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். லாரி உரிமையாளர்களும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த வேலைநிறுத்தத்தை ஒருமுடிவுக்கு கொண்டுவர முன்வரவேண்டும்.


Next Story