மேகதாது அணை கட்ட மீண்டும் முயற்சி


மேகதாது  அணை  கட்ட மீண்டும்  முயற்சி
x
தினத்தந்தி 24 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-24T19:10:09+05:30)

12 காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் என்றால் காவிரி நதிதான். மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தால்தான் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.

12 காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் என்றால் காவிரி நதிதான். மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தால்தான் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மேட்டூர் அணையின் உயரம் 124 அடி என்றாலும், பாதுகாப்பு கருதி 120 அடி உயரம் வரைதான் தண்ணீர் தேக்கிவைப்பது வழக்கம். மொத்தம் 93.45 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கமுடியும். நேற்று காலை 8 மணியளவில் மேட்டூர் அணையில் 120.40 அடி உயரத்தில், 94.11 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. வினாடிக்கு 75 ஆயிரத்து 170 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்துகொண்டிருந்தது. மேட்டூர் அணையைக்கட்டி 85 ஆண்டுகளில் இப்போது 39–வது முறையாக 120 அடி உயரத்திற்கு தண்ணீர் வந்திருக்கிறது. கடைசியாக 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில்தான் 120 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. நேற்று காலையில் வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டிருந்தது. 

காவிரியில் ஓடிவரும் தண்ணீர் இந்த டெல்டா மாவட்டங்களில் உள்ள 700 ஏரிகள், குளங்களை நிரப்புவதற்கு நிச்சயமாக உதவியாக இருக்கும். ஏற்கனவே பலமுறை காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது ஏராளமான தண்ணீர் கடலில்போய் வீணாக கலந்தது. இந்தமுறை நிச்சயமாக அந்தநிலை ஏற்படக்கூடாது. பெண்ணாறு, கோதையாறு, பாமினிஆறு ஆகிய ஆறுகளில் திருப்பிவிடப்படும் தண்ணீர் மூலம் நிறையகுளங்களை நிரப்பமுடியும். காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம் என்பார்கள். கொள்ளிடத்திலும் தண்ணீரை நிரப்பி, அங்கிருந்து வீராணத்திலும் தண்ணீரை முழுமையாக நிரப்பி, அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் சப்ளைக்காக திருப்பிவிட்டு தண்ணீரை சேமித்து வைக்கமுடியும். 

வெகுகாலமாக கர்நாடக மாநிலம் மேகதாது அணைகட்டுவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து நிறுத்திவைத்திருக்கிறது. மேகதாது என்ற பெயரில் ஏற்கனவே திட்டமிட்ட இடத்தைவிட்டுவிட்டு, வேறு இடத்தில் 82.4 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பெரிய அணையை கட்ட திட்டமிடுகிறார்கள். மேகதாதுவில் கர்நாடகம் அணைகட்டினால் நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீர் வராது. இப்போது திடீரென கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமி ஒரு அணுகுண்டை தூக்கிப்போட்டிருக்கிறார். நான் தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக செல்லப்போகிறேன். அரசியல் கட்சிகளையும், விவசாய சங்கபிரதிநிதிகளையும் சந்திக்கப்போகிறேன். மேகதாது அணைகட்டுவதால் அவர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை என்பதை எடுத்துக்கூறி, இதற்கு ஒப்புதல்தர அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தப்போகிறேன் என்றார். வீணாக காவிரி தண்ணீர் கடலில்போய் கலப்பதை தடுப்பதற்காக மேகதாதுவில் அணைகட்டலாம். தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை நிச்சயம் தருவோம் என்று கர்நாடகம் தரப்பில் கூறப்படுகிறது. இந்தஆண்டு கர்நாடகத்தில் பெருமழை பெய்தது. ஆக, அவர்களுக்கு போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைத்துவிட்டு, மீதமுள்ள தண்ணீரைத்தான் தமிழ்நாட்டிற்கு தருகிறார்கள். மழைகுறைவாக பெய்து மேகதாது அணையிலேயே எல்லா தண்ணீரையும் சேமித்துவிட்டால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருவதற்கு நிச்சயம் வாய்ப்பில்லை. எனவே, இப்போதுள்ள நிலையில் காவிரி தண்ணீர் வீணாகாத வகையில் முழுமையாக அனைத்து நீர்நிலைகளிலும் சேமித்து வைக்கவேண்டும். மேகதாது பற்றி கர்நாடகம் பேச்சு எடுக்க வாய்ப்பு கொடுக்காதவகையில், காவிரி தண்ணீர் கடலில்போய் கலக்காத நிலையையும் உருவாக்கவேண்டும்.

Next Story