கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி இருக்கலாமே?


கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி இருக்கலாமே?
x
தினத்தந்தி 25 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-25T18:38:15+05:30)

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. பொதுவாக உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் ஆற்றவேண்டிய அடிப்படை பணிகளுக்கு சொத்துவரி போன்ற வரிகள் மூலமாக நிதி திரட்டுவது ஒருபக்கம்.

மிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. பொதுவாக உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் ஆற்றவேண்டிய அடிப்படை பணிகளுக்கு சொத்துவரி போன்ற வரிகள் மூலமாக நிதி திரட்டுவது ஒருபக்கம். மத்திய அரசாங்கத்தின் மானியங்களை பெற்று செலவழிப்பது மற்றொரு பக்கம். தமிழ்நாட்டில் கடைசியாக சென்னை மாநகராட்சியில் 1998–ம் ஆண்டுதான் சொத்துவரி சீரமைக்கப்பட்டிருந்தது. மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் 2008–ம் ஆண்டு சொத்துவரி சீரமைக்கப்பட்டிருந்தது. ஆக, சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகளாகவும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் 10 ஆண்டுகளாகவும் சொத்துவரி உயர்த்தப்படவில்லை.

பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துவரி சீரமைக்கப்படுவது வழக்கம். ஆனால், இவ்வளவு காலம் சொத்துவரி உயர்த்தப்படாமல் இருப்பதை நீதிபதி என்.கிருபாகரன் தான் முதலில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 21–ந்தேதியும், பிறகு இந்த ஆண்டு 17–ந்தேதியும் சுட்டிக் காட்டினார். 1998–ம் ஆண்டுக்குப்பின்னர் சொத்துவரியை ஏன் உயர்த்தவில்லை? என்ற கேள்வியை கேட்ட அவர், ஏற்கனவே இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகத்துறைக்கு அனுப்பிய அறிக்கையை பரிசீலித்து 2 வாரத்துக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்று ஆணையிட்டார். அவ்வளவுதான் அரசு அவசரகதியில் இயங்கியது. அடுத்த நாளே தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு சொத்துவரியை உயர்த்தி உத்தரவை பிறப்பித்துவிட்டது. இந்த உத்தரவுப்படி, அனைத்து வீடுகளுக்கும் இப்போது வசூலிக்கப்படும் சொத்துவரியிலிருந்து 50 சதவீதம் உயர்த்தவும், வீடுகள் அல்லாத மற்றகட்டிடங்களுக்கு 

100 சதவீதமும், இதுபோல வாடகைக்கு வீடுகள் விட்டிருந்தால் அத்தகைய வீடுகளுக்கு 100 சதவீதமும் உயர்த்த உத்தரவு பிறப்பித்துவிட்டது. இதுமட்டு மல்லாமல், சென்னையிலுள்ள சொத்துவரி கட்டுபவர்கள் மட்டும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதுபோல, சொத்துவரி கணக்கையும் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படப்போகிறார்கள். 

ஏற்கனவே மாநகராட்சியில் அனைத்து கட்டிடங்களுக்கான விவரங்கள் இருக்கும்போது, இவ்வாறு சொத்துவரி கணக்கையும் தாக்கல் செய்யவேண்டும் என்பது தேவையற்றதாகும். பொதுவாக, உள்ளாட்சி அமைப்புகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக சொத்துவரியை உயர்த்தி யிருந்தால், இப்படி ஒரேநேரத்தில் 50 சதவீதம், 100 சதவீதம் என்று உயர்த்தவேண்டியதில்லை. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் வரி வசூலிக்கும் போது, பூவில் அமர்ந்து தேனீக்கள் எப்படி மெதுவாக தேனை உறிஞ்சி எடுக்கிறதோ, அதுபோல வரி வசூலிக்கும்போது மக்களுக்கு வலிக்காமல் வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் 

50, 100 சதவீதம் என்று உயர்த்தினால் நிச்சயமாக பொதுமக்களுக்கு வலிக்கத்தான் செய்யும். வாடகை வீடுகளுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்வு என்றால், நிச்சயமாக வாடகை உயரத்தான் செய்யும். இதனால் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் குடியிருப்ப வர்களுக்கு நிச்சயமாக பெரும் பாதிப்பு ஏற்படும். அவர்களையும் பாதுகாக்கவேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால் 14–வது நிதிக்குழு பரிந்துரையின் பேரில் கடந்த நிதிஆண்டில் 2–வது தவணை தொகை, இந்த நிதிஆண்டின் முதல் தவணை தொகை என ரூ.3,588.21 கோடி மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை. எனவே, இந்த தொகையையும், இனிமேல் வரவேண்டிய தொகையையும் பெற உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்.

Next Story