இனி வித்தியாசமான பாகிஸ்தான்


இனி வித்தியாசமான பாகிஸ்தான்
x
தினத்தந்தி 26 July 2018 9:30 PM GMT (Updated: 26 July 2018 1:24 PM GMT)

இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஆரம்பத்திலிருந்தே இந்தியா மீது வெறுப்புணர்வோடு பாகிஸ்தான் இருந்துவருகிறது.

ந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஆரம்பத்திலிருந்தே இந்தியா மீது வெறுப்புணர்வோடு பாகிஸ்தான் இருந்துவருகிறது. மக்களாட்சி நாடு என்று பெயரளவுக்கு இருக்கிறதேதவிர, ராணுவத்தின் ஆதிக்கம் தான் அங்கே கொடிகட்டி பறக்கிறது. ராணுவத்தின் வழிகாட்டுதல்படிதான் பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்கூட ஆட்சி செய்ய முடியும். பலமுறை ராணுவ ஆட்சிதான் நடந்திருக்கிறது. இப்போது நடந்த தேர்தல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மாறி, மற்றொரு அரசாங்கம் ஆட்சி செய்யப் போவதில் 2–வது முறையாகும். பாகிஸ்தான் தேசிய சட்டசபை எனப்படும் நாடாளுமன்றம் 342 உறுப்பினர்களைக் கொண்டதாகும். இதில், 272 உறுப்பினர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 60 இடங்கள் பெண்களுக்கும், 10 இடங்கள் மதரீதியான சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப் பட்டுள்ளது. அவர்கள் 5 சதவீத ஒட்டுகளைப்பெற்ற அரசியல் கட்சிகளில் இருந்து விகிதாச்சார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2 தொகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கையால் வேட்பாளர்கள் இறந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்தத்தேர்தலில் முகமது அலி ஜின்னா தோற்றுவித்த அகில இந்திய முஸ்லிம் லீக் வழிவந்து, தற்போது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் இயங்கிவரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), 1967–ல் பூட்டோ தொடங்கிவைத்து, தொடர்ந்து பெனாசிர் பூட்டோ நடத்தி, இப்போது ஆசிப் அலி சர்தாரி நடத்தும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தொடங்கிய பாகிஸ்தான் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி மற்றும் சிறுசிறு கட்சிகள் போட்டியிட்டன. இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் முழு ஆதரவு அளித்து வருகிறது. நவாஸ் ஷெரீப் இந்தியாவோடு நல்லுறவை ஏற்படுத்தவேண்டும் என்று முயற்சி செய்தவர். ஆனால், இம்ரான்கான் முழுக்க முழுக்க இந்தியாவை எதிர்த்துத்தான் தனது பிரசார கருத்துகளை வெளியிட்டுவந்தார். தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாககூட, ‘‘நவாஸ் ஷெரீப், இந்தியாவோடு மென்மைபோக்கை கொண்டவர். இந்தியா, நவாஸ் ஷெரீப்பை விரும்புகிறது. மோடி, நவாஸ் ஷெரீப்பை விரும்புகிறார். ஆனால், அவர்கள் நமது ராணுவ படைகளை வெறுக்கிறார்கள். இம்ரான்கான் ஆட்சிக்கு வந்தால் அவர் பாகிஸ்தானுக்காக பாடுபடுவார் என்று பதறுகிறார்கள், காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது’’ என்று இந்தியா மீதான தனது எதிர்ப்பு உணர்ச்சியை பகிரங்கப்படுத்திவிட்டார். 

இப்போது தேர்தல் முடிவில் இம்ரான்கான் பெரும்பான்மை இடத்தை பிடிக்காவிட்டாலும், அதிக இடங்களைப்பிடித்து ஆட்சி அமைக்கும் நிலையில் இருக்கிறார். தேர்தல் அன்று அனைத்து வாக்கு சாவடிகளிலும் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப் பட்டிருந்தனர். இதற்குமுன்பு நடந்த தேர்தல்களில் வாக்குச்சாவடிக்கு வெளியேதான் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிற்பார்கள். ஆனால், இந்தமுறை வாக்குச்சாவடிக்கு உள்ளேயே ராணுவ வீரர்கள் நிறுத்தப் பட்டு, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் இம்ரான்கான் கட்சித்தவிர, மற்றக்கட்சி தேர்தல் ஏஜெண்டுகள் வெளியே விரட்டப்பட்டனர் என்று பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையமே கூறியிருக்கிறது. ஆக, இனி வித்தியாசமான பாகிஸ்தானைத்தான் பார்க்கமுடியும். நமது எல்லைகளில் இந்திய ராணுவத்தை பலப்படுத்தவேண்டும். பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, இந்திய எல்லைக்குள் ஊடுருவ செய்வதை தடுக்கவேண்டும். நம் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும். நவீனரக ஆயுதங்கள் வாங்கப்படவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச நாடுகளின் ஆதரவைப்பெறும் வகையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். 

Next Story