தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி


தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி
x
தினத்தந்தி 30 July 2018 10:30 PM GMT (Updated: 2018-07-30T21:52:52+05:30)

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது அங்கு இருக்கும் தொழில் வளர்ச்சியை அடிப் படையாக வைத்துத்தான் உருவாகிறது.

தொழில் வளர்ச்சி மேம்படும் நேரத்தில், உள்கட்டமைப்பு வசதிகள் தானாக மேம்படும். உற்பத்தியும் பெருகும், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். அந்த உற்பத்தியினால் வணிகம் பெருகுகிற நேரத்தில், சுற்றிலும் இருக்கிற மக்களின் வாழ்வாதாரமும் உயரும். அரசுக்கும் வருமானம் கிடைக்கும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிற நேரத்தில், கல்விவளர்ச்சியும் மாநிலத்தில் அதிகமாக இருக்கும். இவ்வாறு மாநிலம் வளம்பெற வேண்டுமென்றால் தொழில்வளர்ச்சி பெருகவேண்டும். தொழில் வளர்ச்சியில் அரசு மட்டும் தொழிற்சாலைகளை உருவாக்குவதால் வளர்ச்சி அடைந்துவிடமுடியாது. தனியார் முதலீடுகள் தங்குதடையின்றி வரவேண்டும். தனியார் முதலீடுகள் வரவேண்டுமென்றால் தொழில் நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இருக்கவேண்டும். தமிழ்நாட்டில் தொழில் தொடங்கச்சென்றால் எல்லா அனுமதியும், எவ்வித எதிர்பார்ப்புகளும், தடங்கல்களும் இல்லாமல் தாமதமின்றி எளிதாக கிடைக்கும் என்ற நம்பிக்கை மாநிலத்தில் உள்ள தொழில் அதிபர் களுக்கும், இந்தியா முழுவதிலும் உள்ள தொழில் அதிபர்களுக்கும், சர்வதேச தொழில் முனைவோருக்கும் ஏற்படவேண்டும். அத்தகைய எளிதாக தொழில் நடக்கும் சூழ்நிலை தமிழ்நாட்டில் குறைந்துவருவது மிகவும் கவலையளிக்கத்தக்க வகையில் இருக்கிறது.

சமீபத்தில் உலக வங்கியின் துணையோடு, மத்திய அரசாங்க தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை, நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் எளிதில் தொழில் நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை எந்த மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது என்ற வகையில் ஒரு தரவரிசை பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில், ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது. தெலுங்கானாவும், அரியானாவும் மிகநெருங்கிய வித்தியாசத்தில் 2–வது, 3–வது இடங்களில் இருக்கிறது. ஜார்கண்ட் 4–வது இடத்திலும், குஜராத் 5–வது இடத்திலும், சத்தீஷ்கார் 6–வது இடத்திலும், மத்தியபிரதேசம் 7–வது இடத்திலும், கர்நாடகம் 8–வது இடத்திலும், ராஜஸ்தான் 9–வது இடத்திலும், மேற்குவங்காளம் 10–வது இடத்திலும் இருக்கிறது. முதல் 10 மாநிலங்கள் என்ற பட்டியலிலும் தமிழ்நாடு இல்லை. தென்மாநிலங்கள் பட்டியலிலும் கடைசி இடத்தில் இருக்கிறது என்ற வகையில் தமிழ்நாடு எங்கே இருக்கிறது? என்று தேடிப்பார்த்தால் மிகவும் வருத்தத் திற்குரிய நிலையில் 15–வது இடத்தில் இருக்கிறது.

இந்தப்பட்டியல் அங்குள்ள தொழிலாளர் கிடைப்பது, சுற்றுச்சூழல் ஒப்புதல் கிடைப்பது, பத்திரப்பதிவு நடப்பது, ஒற்றைச்சாளர செயல்பாடு, கட்டுமான அனுமதிக்கிடைப்பது, ஆய்வுகள் நடப்பது என்பது போன்ற பல அம்சங்கள் அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பல தொழிற்சாலைகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவிற்கு செல்கிறது என்று வருத்தப்படும் சூழ்நிலையில், இந்தப்பட்டியலிலும் 15–வது இடத்தில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதில் சிறிய ஆறுதல், கடந்த ஆண்டு 18–வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்த ஆண்டு தட்டுத்தடுமாறி 15–வது இடத்திற்கு வந்திருக்கிறது என்பதுதான். ஆனால், இந்த முன்னேற்றம் நிச்சயமாக போதாது. சிறந்த நிர்வாகம், சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் முன்னணியில் தமிழ்நாடு இருப்பது மகிழ்ச்சியளிப்பது போல, தொழில்முனைவோர் ஓடி, நாடி, தேடி தமிழ் நாட்டிற்கு வரும்வகையில் என்னென்ன வகையில் உகந்தசூழ்நிலைகளை உருவாக்கவேண்டுமோ?, அதையே தலையாய கடமையாகக்கொண்டு செயல்படுத்தி தொழில் வளர்ச்சியில் புதுயுகம் படைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story