கல்வித்துறைக்கு பெருமை


கல்வித்துறைக்கு பெருமை
x
தினத்தந்தி 31 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-31T22:22:38+05:30)

கல்வி சிறந்த தமிழ்நாடு என்று பாடினார் மகாகவி பாரதியார் அன்று. அதற்கேற்ப இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், ‘பெருந்தலைவர்’ காமராஜர் ஏராளமான பள்ளிக்கூடங்கள் திறக்க முழுமுயற்சியுடன் ஈடுபட்டார்.

ல்வி சிறந்த தமிழ்நாடு என்று பாடினார் மகாகவி பாரதியார் அன்று. அதற்கேற்ப இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், ‘பெருந்தலைவர்’ காமராஜர் ஏராளமான பள்ளிக்கூடங்கள் திறக்க முழுமுயற்சியுடன் ஈடுபட்டார். பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்கள் திறக்கவேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறை யோடு இருந்தார். அவர் காலத்திற்குப்பிறகு, தொடர்ந்து அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையிலான அனைத்து அரசாங்கங்களும் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு மேம்பாடு அடைய பாடுபட்டது. இப்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் கல்வி வளர்ச்சியில் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். ஆண்டுதோறும் கல்விக்கான ஒதுக்கீட்டுதொகை பட்ஜெட்டில் உயர்ந்துகொண்டே போகிறது. இந்த ஆண்டுகூட பட்ஜெட்டில் பள்ளிக்கூட கல்வித்துறைக்காக ரூ.27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம், உயர்கல்வி துறைக்காக ரூ.4 ஆயிரத்து 620 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது 18 முதல் 23 வயது வரையிலான கல்லூரி படிக்கும் வயதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. 2017–18–ம் ஆண்டுக்கான உயர்கல்வி தொடர்பான அகில இந்திய சர்வேயில் தமிழ்நாட்டில் 48.6 சதவீதம் மொத்த சேர்க்கை விகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டைவிட 1.7 சதவீதம் மாணவர் சேர்க்கை உயர்ந்திருக்கிறது. 

2017–18–ல் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 49.1 சதவீதமாகவும், மாணவிகள் சேர்க்கை விகிதம் 48.2 சதவீதமாகவும் இருக்கிறது. பிளஸ்–2 வகுப்பில் எப்போதுமே மாணவிகள் தேர்ச்சிவிகிதம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், பிளஸ்–2 படிப்பிலிருந்து உயர்கல்வி செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அந்தளவுக்கு இல்லாதது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு அடுத்ததாக இமாசலபிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், கேரளா என்று முதல் 5 மாநில பட்டியல் தெரிவிக்கிறது. இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் பட்டப்படிப்பில் 24 லட்சத்து 91 ஆயிரம் மாணவர்களும், முதுகலை படிப்பில் 4 லட்சத்து 38 ஆயிரம் மாணவர் களும் சேர்ந்து இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பி.எச்டி. ஆராய்ச்சி படிப்புக்கு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2010–11–ல் 7,995 என்ற நிலைமாறி, 2016–17–ல் 29 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளது. ஆக, உயர்கல்வித்துறைக்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கி, கூடுதலாக கல்லூரிகளை திறந்து அடுத்த ஆண்டில் 50 சதவீதத்திற்குமேல் சென்றால், உலகளாவிய பட்டியலுக்கு தமிழ்நாடு சென்றுவிட முடியும். மொத்த சேர்க்கை விகிதம் 50 சதவீதத்துக்கு மேல் சென்றால் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் உன்னத நிலைக்கு தமிழ்நாடு வந்துவிடும். 

தமிழ்நாட்டில் ஏராளமான பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக்குகள் போன்ற உயர்கல்விக்கூடங்கள் இருப்பதாலேயே இவ்வளவு வாய்ப்புகள் மாணவர் களுக்கு கிடைக்கின்றன. நிச்சயமாக இந்த சாதனை தமிழக அரசுக்கு குறிப்பாக கல்வித்துறைகளுக்கு பெருமை சேர்ப்பதாகும். மொத்த சேர்க்கை விகிதத்தில் சாதனை படைத்ததுபோல, பள்ளிக்கூட, கல்லூரி கல்வி தரத்தை மேம்படுத்தி, அவர்கள் கற்கும் கல்வி உடனடி யாக வேலைவாய்ப்பு தருவதற்கும், தொழில்களை தொடங்குவதற்கும், வாழ்க்கை முழுவதிலும் பயனளிக்கும் வகையிலும் இருக்கவேண்டும். மாணவர்களின் கல்வித்தரம் உயர வேண்டுமென்றால் அவர்களுக்கு கல்வி புகட்டும் ஆசிரியர்களின் திறமைகளும் மிளிரவேண்டும்.

Next Story