நீலகிரி மாவட்டம் வழிகாட்டுகிறது!


நீலகிரி  மாவட்டம் வழிகாட்டுகிறது!
x
தினத்தந்தி 1 Aug 2018 9:30 PM GMT (Updated: 1 Aug 2018 4:54 PM GMT)

உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களின் ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

லகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களின் ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் உள்நாட்டில் மட்டுமல்ல, கடல் வளமும் பாதிக்கப்பட்டு வருவதன் விளைவாக மீன்வளம் அழிந்து கொண்டே போகிறது. இந்தியாவில் ஏற்கனவே 20 மாநிலங்கள் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடைவிதித்துள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி வினியோகம், விற்பனை பயன்பாட்டிற்கு தடை இருக்கிறது. ஏற்கனவே கடந்த 2016–ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிளாஸ்டிக்கழிவு மேலாண்மை விதிகள் 50 மைக்ரான்களுக்கு மேலான பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதித்து மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை 2 ஆண்டுக்குள் தடைசெய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் அதை நிறைவேற்ற முடியவில்லை. 

இந்தநிலையில், சட்டசபையில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘2019–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடைசெய்யப்படுகிறது’ என்று அறிவித்தார். ஜனவரி 1–ந்தேதிவரை காலஅவகாசம் இருக்கிறது என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா காத்திருக்கவில்லை. ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கலெக்டராக இருந்த சுப்ரியா சாகு, மிகதுணிச்சலாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடைசெய்தார். அவர் பிறப்பித்த உத்தரவு பல ஆண்டுகள் நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றிக்காட்டியது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் எல்லாம் வியந்தனர். ஆனால், காலப்போக்கில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு தலையெடுத்தது. நீலகிரி மலையில் பல பகுதிகளில் அழகைக் கெடுத்தது. தற்போது முதல்–அமைச்சரின் உத்தரவை நிறைவேற்றும் முதல் மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிக்காட்டியிருக்கிறார் இன்னசென்ட் திவ்யா. இந்த மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 35 ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனையை தடைசெய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த தீர்மானங்கள் அந்த மாவட்ட கெஜட்டில் அறிவிக்கையாக வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூர எறியும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பிளேட்டுகள், ஸ்பூன்கள், முள்கரண்டிகள், ஸ்டிராக்கள், தெர்மாகோல் பிளேட்டுகள், தொப்பிகள், பெட்சீட்கள், கையுறைகள் உள்பட அனைத்து பொருட்கள் மட்டுமல்லாமல், பேப்பர் கப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தத்தடையை மீறும் சில்லரை விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்தடையை அந்தமாவட்ட நிர்வாகம் மிகத்தீவிரமாக அமல்படுத்த தொடங்கிவிட்டது. குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு இந்த அறிவுரை வழங்கப்படுகிறது. சின்னஞ்சிறிய மாவட்டமான நீலகிரி மாவட்டம் வழிகாட்டிவிட்டது. இப்போது மேலும் பல மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் பணிகளை ஒவ்வொரு கட்டமாக தொடங்கிவிட்டனர். முதல்–அமைச்சர் அறிவித்தபடி, ஜனவரி 1–ந் தேதிவரை காத்திருக்காமல், உடனடியாக அனைத்து மாவட்ட கலெக்டர்களும் இதுபோன்ற முழுமையான தடையை பிறப்பித்து, தங்கள் மாவட்ட கெஜட்டில் வெளியிடவேண்டும். ஜனவரி 1–ந்தேதி பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழகம் பிறக்கட்டும்.

Next Story