தமிழ்நாட்டுக்கு பெருமை


தமிழ்நாட்டுக்கு பெருமை
x
தினத்தந்தி 5 Aug 2018 9:30 PM GMT (Updated: 2018-08-05T22:34:07+05:30)

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு பின்தங்கிவிட்டது. தொழில் முனைவோர்கள் எல்லாம் தமிழ்நாட்டைவிட்டு வெளியே செல்கிறார்கள் என்று செய்திகள் வந்துகொண்டிருந்த நேரத்தில், இப்போது தமிழ்நாட்டுக்கு பெருமையளிக்கும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு பின்தங்கிவிட்டது. தொழில் முனைவோர்கள் எல்லாம் தமிழ்நாட்டைவிட்டு வெளியே செல்கிறார்கள் என்று செய்திகள் வந்துகொண்டிருந்த நேரத்தில், இப்போது தமிழ்நாட்டுக்கு பெருமையளிக்கும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது. பயன்பாடு மற்றும் பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சிலின் சிந்தனைக்குழு (திங்க் டேங்க் நே‌ஷனல் கவுன்சில் பார் அப்ளைடு அண்டு எக்கனாமிக் ரிசர்ச் 2018), மாநிலங்களில் முதலீட்டுக்கான சாத்தியக்கூறுகள் பற்றி இந்த ஆண்டுக்கான ஆய்வை சமீபத்தில் நடத்தியது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் தொடங்குவதற்கு என்னென்ன பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன?. தொழில் முனைவோர் எளிதில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன? என்பதை 6 அம்சங்களின் அடிப்படையில் இந்தியா முழுவதிலும் இந்த ஆய்வை நடத்தியது.

தொழில் தொடங்க நிலம் மற்றும் தொழிலாளர்கள் கிடைப்பது, அங்கே உள்கட்டமைப்பு வசதி, பொருளாதார சூழ்நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை, நிர்வாகம் மற்றும் இந்த ஆய்வுக்காக தொழில் அதிபர்கள் மகிழ்ச்சியுடன் வழங்கும் பதில் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்தியா முழுவதிலும் உள்ள 1,049 தொழில் அதிபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் டெல்லி முதல் இடத்திலும், தமிழ்நாடு 2–வது இடத்திலும், குஜராத், அரியானா, மராட்டியம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் முறையே 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10–வது இடங்களில் இருக்கின்றன. 

கடந்த ஆண்டைவிட, தமிழ்நாடு 4 இடங்களைத் தாண்டி 2–வது இடத்திற்கு வந்திருக்கிறது. அப்படியென்றால், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நல்ல சூழ்நிலை இருக்கிறது என்பதுதான் பொருள். சட்டம்–ஒழுங்கு ஒரு பெரிய பிரச்சினை என்று ஆய்வில் தொழில் அதிபர்கள் கூறியுள்ளார்கள். சட்டம்–ஒழுங்கு பராமரிப்பில் தமிழ்நாடு முதல்இடத்தில் இருக்கிறது. தொழிலாளர்களை பொறுத்தமட்டில், தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. தொழிலாளர்களால் பிரச்சினை ஏற்படாது என்றால்தான் தொழில் தொடங்கவருவார்கள். மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. அரசு நிர்வாகம் அரசின் ஸ்திரத்தன்மையில் கடந்த ஆண்டு 5–வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இப்போது முதல் இடத்தில் இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் கூறிய கருத்துகளில் ஒன்றான, ‘பலவீனத்தை நீக்க வேண்டுமானால், பலத்தை பற்றி சிந்திக்கவேண்டும். உனக்குள் இருக்கும் எல்லையற்ற ஆற்றலை பற்றி சிந்திக்கவேண்டும்’ என்ற வகையில், தமிழக அரசு உடனடியாக தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கான எல்லையற்ற ஆற்றல் எவை, எவை? என்பதை சிந்தித்து அதை மேம்படுத்தி, உள்நாட்டு தொழில்அதிபர்கள் என்றாலும் சரி, வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் என்றாலும் சரி, தொழில் தொடங்கவேண்டும் என்று நினைத்தால் தமிழ்நாடுதான் அவர்கள் கண்களுக்கு தெரியவேண்டும் என்ற நிலையை உருவாக்கவேண்டும். இந்தளவு தொழில் தொடங்க உகந்தமாநிலமாக தமிழ்நாட்டை கொண்டுவந்த தொழில்துறை நிச்சயமாக பாராட்டுக்குரியது. இதே வேகத்தோடு அடுத்த ஆண்டு ஜனவரி 23, 24–ந்தேதிகளில் சென்னையில் நடக்க இருக்கும் உலகளாவிய தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஏராளமான தொழில்முனைவோரை அழைத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க செய்யவேண்டும்.

Next Story