தலையங்கம்

பேச்சுவார்த்தையா?, வேலைநிறுத்தமா? + "||" + Thalaiangam pages in Talks The strike

பேச்சுவார்த்தையா?, வேலைநிறுத்தமா?

பேச்சுவார்த்தையா?, வேலைநிறுத்தமா?
சிலநாட்களுக்கு முன்பு லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தது. நாடுமுழுவதிலும் 462 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அந்தவழியாக போகும் வாகனங்களிடமிருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் 41 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, இந்த சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தி கட்டணத்தைக்கட்டி, ரசீது வாங்கிக்கொண்டு மீண்டும் பயணத்தை தொடர வெகுநேரமாகிறது. இதனால் எரிபொருளும் வீணாக செலவாகிறது, காலதாமதமும் ஆகிறது. எனவே, சுங்கக்கட்டணமாக அவ்வப்போது ஒவ்வொரு பயணத்தின்போதும் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பதிலாக, நாங்கள் ரூ.18 ஆயிரம் கோடியை ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணமாக கட்டி விடுகிறோம்.


பெட்ரோல்-டீசல் விலையை தினமும் நிர்ணயிப்பதற்கு பதிலாக, 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும். இதை சரக்கு சேவைவரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மோட்டார் வாகனங்களுக்கான 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வு ரத்து செய்யவேண்டும் என்று சொல்லி, நாடு முழுவதிலும் உள்ள ஏறத்தாழ 70 லட்சம் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் மட்டும் 4½ லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் சரக்கு சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. அரசாங்கத்துக்கும் ஏராளமான வருமான இழப்பு ஏற்பட்டது. லாரி உரிமையாளர்களுக்கும் பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டது. 8 நாட்கள் போராட்டம் நடந்தது. 8 நாட்களும் மத்திய அரசாங்கம் கவலைப்படவில்லை. லாரி உரிமையாளர்களுக்கும் ஒரு சலிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், மத்திய தரைவழி போக்குவரத்து துறை செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர். அவர்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லை.

பெட்ரோல்-டீசலை சரக்கு சேவைவரி வளையத்துக்குள் கொண்டு வருவது கடினம் என்று மத்திய அரசாங்கம் கூறிவிட்டது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை நாங்கள் முழு சுங்கக்கட்டணத்தையும் செலுத்தி விடுகிறோம் என்ற கோரிக்கைக்கு, ஒரு குழு அமைத்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3-ம்நபர் காப்பீடு கட்டணம் குறைப்பது தொடர்பாக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தோடு பேச்சுவார்த்தை நடத்தச்சொல்லி முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு நிச்சயமாக 8 நாட்கள் வேலைநிறுத்தம் தேவையில்லை. பேச்சுவார்த்தை நடத்தியே ஒரேநாளில் இந்த முடிவுகளை கேட்டு பெற்றிருக்கலாம். எனவே, இந்த வேலைநிறுத்தத்தால் பெரிய லாரி அதிபர்களுக்கு அதிக பாதிப்பில்லை என்றாலும், ஒரு லாரி மட்டும் வைத்து, தாங்களே டிரைவர்களாக பணியாற்றும் லாரி உரிமையாளர்களுக்கு பெரிய பாதிப்புதான். 8 நாட்களும் அவர்களுடைய அன்றாட வருமானமும் போய்விட்டது. இந்த லாரி தொழிலை நம்பி, ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் அன்றாடம் கூலி வாங்கிக்கொண்டு இருந்தார்கள், அவர்களுக்கும் பெரிய பாதிப்பு.

பொதுமக்களுக்கும் விலைவாசி உயர்வு, அரசுக்கும் வரிவருவாய், சுங்கக்கட்டண வருவாய் போன்ற பல வருமான இழப்புகள் ஏற்பட்டது. கடந்த 6 ஆண்டுகளில், 7 முறை வேலைநிறுத்தம் நடைபெற்றிருக்கிறது. ஒவ்வொரு முறையும் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படாததால்தான், சங்கிலித்தொடர்போல லாரிகள் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. எதிர்காலத்தில் எந்தப்பிரச்சினையென்றாலும் அரசாங்கம் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபடநினைக்கும் சங்கங்களும் கூடுமானவரையில் பேச்சுவார்த்தையிலேயே எல்லாப்பிரச்சினைகளையும் தீர்க்க முன்வரவேண்டும்.


தொடர்புடைய செய்திகள்

1. பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
இன்று பொங்கல் திருநாள். தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருவெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் நன்னாள்.
2. சிறு, குறு வர்த்தக நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள்
பொதுவாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகளவில் தொடங்கப்பட்டால்தான் கீழ்மட்டத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்கமுடியும், உற்பத்தியும் பெருகும்.
3. வாஜ்பாய் வழியில் கூட்டணி
ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும்நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறப்போகின்றன?, பா.ஜ.க. கூட்டணியில் எந்த கட்சிகள் எல்லாம் இடம்பெறப்போகின்றன? என்ற பரபரப்பில் தமிழக மக்கள் இருக்கிறார்கள்.
4. இந்த நிவாரணம் போதாது
2018–ம் ஆண்டை எதிர்காலத்தில், இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து நினைத்துப்பார்த்தாலும் கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தை யாராலும் மறந்துவிட முடியாது.
5. வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு
எல்லா வழிகளும் ரோமபுரியை நோக்கி என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல, தமிழ்நாட்டில் எல்லோருடைய பார்வையும் 23, 24–ந்தேதிகளில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நோக்கித்தான் இருக்கிறது. இது 2–வது மாநாடாகும்.