மோடியின் ராஜதந்திரம்


மோடியின் ராஜதந்திரம்
x
தினத்தந்தி 12 Aug 2018 10:30 PM GMT (Updated: 2018-08-12T22:30:33+05:30)

அமெரிக்க ஜனாதிபதியாக 4 முறை பதவி வகித்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் கூறிய ஒரு பழமொழிதான், ‘அரசியலில் எதுவும் தற்செயலாக நடந்து விடுவதில்லை, அப்படி நடந்தால் நிச்சயமாக அந்த நாளில் தீவிரமாக திட்டமிடப்பட்டது என்று நீங்கள் உறுதியாக சொல்லலாம்’ என்பதாகும்.

அந்தவகையில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரின் வெற்றியானது, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரின் ராஜதந்திரத்தாலும், முறையான திட்டமிடலாலும் உறுதிப்படுத்தப்பட்டதாகும். பா.ஜ.க.வுக்கு மக்களவையில் அறுதி பெரும்பான்மை இருக்கிறது. அதனால் எந்த மசோதா என்றாலும் மக்களவையில் நிறைவேற்ற முடிந்தது. ஆனால், மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கும் சரி, பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளை சேர்த்தும் சரி பெரும்பான்மை கிடையாது. எதிர்க்கட்சிகளுக்குத்தான் பெரும்பான்மையான இடங்கள் இருக்கின்றன. அதனால்தான் பா.ஜ.க. கொண்டுவந்த பல மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் நிறைவேற்றப்பட முடியாமல் இருக்கின்றன.

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக ஹரிவன்ஷும், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஹரிபிரசாத்தும் போட்டியிட்டனர். மொத்தம் 245 உறுப்பினர்களைக்கொண்ட மாநிலங்களவையில் ஒரு இடம் காலியாக உள்ளது. பூர்வாங்கமாக போடப்பட்ட கணக்கில் காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறுவதாக இருந்தது. ஆனால் காங்கிரஸ் பக்கமோ, பா.ஜ.க. பக்கமோ இதுவரை சாயாமல், நடுநிலை வகித்துக்கொண்டிருந்த 9 உறுப்பினர்களைக்கொண்ட பிஜு ஜனதாதளம் கட்சித்தலைவரான ஒடிசா முதல்–மந்திரி நவீன்பட்நாயக்கை, காங்கிரஸ் கட்சியின் சார்பில் யாரும் தொடர்புகொள்வதற்கு முன்பு, பிரதமர் நரேந்திரமோடியும், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவும், உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கோரியதால் அவர்களுக்கு ஓட்டளித்துவிட்டார்கள். இதுபோல, 13 உறுப்பினர்களைக்கொண்ட அ.தி.மு.க.வையும் தங்களுக்கு ஓட்டுபோட செய்வதில், அ.தி.மு.க. உறுப்பினர்களில் சிலருக்கு சிலபல மனக்குறைகள் இருந்தாலும், அவர்களோடு பா.ஜ.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுபோட வைத்து விட்டனர். மனக்கசப்பில் இருந்த சிவசேனா கட்சியை சரிகட்டி அந்த கட்சியின் 3 எம்.பி.க்களை ஆதரவாக ஓட்டுபோட வைத்தார்கள். இப்படி, ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதுபோல, 125 உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்று பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் வெற்றிவாகை சூடிவிட்டார்.  

காங்கிரஸ் கட்சிக்கு வரவேண்டிய 16 ஓட்டுகள் சரியான முயற்சிகள் எடுக்கப்படாததால் வரவில்லை. 3 உறுப்பினர்களைக் கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைமையோடு காங்கிரஸ் பேசவில்லை. அவர்கள் அவைக்கு வராமல் புறக்கணித்து விட்டனர். 3 காங்கிரஸ் எம்.பி.க்கள், 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள், கலைஞர் கருணாநிதி மறைவால் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி என 2 தி.மு.க. எம்.பி.க்கள், சமாஜ்வாடி கட்சியின் 3 எம்.பி.க்கள், பா.ஜ.க.வைவிட்டு விலகி நிற்கும் காஷ்மீரை சேர்ந்த மக்கள் தேசிய கட்சியின் 2 எம்.பி.க்கள், நாகா மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர் ஆகியோர் அவைக்கு வரவில்லை. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 2 எம்.பி.க்கள் ஓட்டெடுப்பை புறக்கணித்துவிட்டனர். வெற்றிபெற வாய்ப்பு இல்லாத பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்றதும், வெற்றி பெறவேண்டிய காங்கிரஸ் தோல்வியை தழுவியதும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிவிட்டது. இது பயிற்சி ஆட்டமா? (வார்ம் அப் மேட்ச்), டெஸ்ட் போட்டியா? என்பதை 2019 நாடாளுமன்ற தேர்தலில் தான் பார்க்க வேண்டும்.

Next Story