வாஜ்பாய் மறைவு; வற்றாத சோகம்


வாஜ்பாய் மறைவு; வற்றாத சோகம்
x
தினத்தந்தி 16 Aug 2018 10:00 PM GMT (Updated: 2018-08-16T22:45:29+05:30)

வாஜ்பாய் மறைவால் பாரத மாதா மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே கண்ணீர் விட்டு கதறுகிறது.

அரசியலில் எளிமையும், நிர்வாகத்தில் தூய்மையும், நேர்மையும், செயல்பாட்டில் வேகமும், மக்கள்மீது பேரன்பும் கொண்ட பாரத மாதாவின் பாசமிகு மகன், பொதுவாழ்க்கையின் ஜாம்பவான் அடல் பிகாரி வாஜ்பாய். தன் 93–வது வயதில் இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். அவரது மறைவால் பாரத மாதா மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே கண்ணீர் விட்டு கதறுகிறது. இந்தியாவில் சாதி–மத வேறுபாடின்றி அரசியல் வேறுபாடின்றி, வடக்கு–தெற்கு என்ற வேறுபாடின்றி ஒட்டுமொத்த மக்களாலும் விரும்பப்பட்டவர் வாஜ்பாய். மொரார்ஜி தேசாய் மந்திரி சபையில் வெளி விவகாரத்துறை மந்திரியாக இருந்த வாஜ்பாய், 3 முறை இந்தியாவின் பிரதமராக உலகமே பாராட்டும் வகையில் பணியாற்றினார். 

1996–ம் ஆண்டு முதல்முறையாய் அவர் ஆட்சி 13 நாட்கள் தான் நீடித்தது. மீண்டும் 1998–ம் ஆண்டு பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று வாஜ்பாய் பிரதமர் ஆனார். 2–வது முறையாக பிரதமராக இருந்தநேரத்தில்தான் ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் பாலைவனத்தில் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனை உலகத்தையே அதிசயிக்க வைத்தது. அதேநேரத்தில் பாகிஸ்தானோடு நல்லுறவை வளர்க்கும் வகையில் டெல்லி–லாகூர் பஸ் போக்குவரத்தை தொடங்கினார். ஒருபக்கம் நல்லெண்ணம் என்றாலும், மறுபக்கம் பாகிஸ்தானின் ஆட்டத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கினார். கார்கில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவல் நடத்தியபோது, போர் தொடங்கி பாகிஸ்தானை படுதோல்வி அடைய செய்தார். கூட்டணி கட்சியான அ.தி.மு.க. திடீரென்று தனது ஆதரவை வாபஸ் பெற்றதினால் 13 மாதங்களில் ஆட்சியை இழக்கும்நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சில மாதங்களில் மீண்டும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 5 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் வாஜ்பாய். இந்தமுறையும் வாஜ்பாய் தன்னுடைய முத்திரையை எல்லா துறைகளிலும் பதித்தார். காஷ்மீர்–கன்னியாகுமரியை இணைக்கும்வகையில், ‘‘தங்க நாற்கர சாலை திட்டம்’’ என்ற மகத்தான திட்டம் நிறைவேறியது இந்த காலத்தில்தான். தமிழ்நாட்டின்மீது அதிக அன்பு கொண்டவர் வாஜ்பாய். 

1–5–2004 அன்று அவர் பிரதமராக இருந்தநேரத்தில் ‘தினத்தந்தி’ பத்திரிகைக்காக டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தலைமை செய்தியாளர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு தனி பேட்டி அளித்தார். அப்போது, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை தான் வைத்திருப்பதை வெளிக்காட்டினார். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது தன் முன்னுரிமை பணிகளில் ஒன்று என்ற வாஜ்பாய், கங்கை–காவிரியை இணைப்பதற்காக ஒரு பணிக்குழுவை அமைத்து வரைபடம் எல்லாம் தயாரிக்க ஏற்பாடு செய்ததை குறிப்பிட்டார். வாழும்போதே இந்தியாவின் உயரிய விருதான ‘‘பாரத ரத்னா’’ விருதைப் பெற்று புகழ் சேர்த்தவர் வாஜ்பாய். அவருடைய கனவை நனவாக்கும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் கங்கை–காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் ‘தங்க நாற்கர சாலைக்கு’ அவரது பெயரை சூட்டினால் என்றென்றும் அவர் புகழ் பாடும். வாஜ்பாய் மறைவு; வற்றாத சோகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட்டது. அவர் நினைவு என்றைக்கும் இந்திய மக்கள் நெஞ்சில் நிற்கும். நெஞ்சம் மறப்பதில்லை; அது வாஜ்பாயின் நினைவை இழப்பதில்லை.

Next Story