தாய்ப்பால் ஊட்டுவதில் தமிழ்நாடு பின்தங்கிவிட்டதா?


தாய்ப்பால் ஊட்டுவதில் தமிழ்நாடு பின்தங்கிவிட்டதா?
x
தினத்தந்தி 17 Aug 2018 10:30 PM GMT (Updated: 17 Aug 2018 5:11 PM GMT)

மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நம்நாடு’ படத்தில், ‘பாலூட்டும் அன்னை, அவள் நடமாடும் தெய்வம்’ என்றொரு பாடலை பாடுவார்.

றைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நம்நாடு’ படத்தில், ‘பாலூட்டும் அன்னை, அவள் நடமாடும் தெய்வம்’ என்றொரு பாடலை பாடுவார். ஆக, தாய்தான் உலகில் எல்லோருக்கும் முதல் கடவுள். தாயின் பெருமையே தாய்மைதான். தாய்மையின் சிறப்பே பாலூட்டுவதுதான். தாய் என்பவள் ஒருசொல் காவியம், ஈரெழுத்து மந்திரம். பெண்களுக்குத் தாய்மை என்பது மாபெரும் வரம். முதல் குழந்தை பிறக்கும்போது குழந்தை மட்டும் பிறப்பதில்லை, தாயும் பிறக்கிறாள். ஏனெனில், பெண் வேறு, தாய் வேறு. தன்னையே குழந்தைக்காக ஒப்படைக்கும் உன்னத குணத்தைத்தருவது தாய்மை. ‘ஓலைக்குடிசையில் ஒழுகும் மழையில் குழந்தை நனையாமல் இருக்க முதுகையே கூடாராமாக்கினாள் தாய். ஆனாலும் குழந்தை நனைந்தது தாயின் இருசொட்டுக் கண்ணீரால்’ என்றொரு கவிதை தாய்மையைப்பற்றிப் பேசுகிறது. 

குழந்தைகள் வளர்வதற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் அளிப்பது தாய்ப்பால். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது வெறும் உணவை மட்டும் ஊட்டுவதில்லை, அன்பையும் ஊட்டுகிறாள். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படுவதற்கு தாய்ப்பால் இன்றியமையாத ஒன்று. குழந்தைகள் எளிதாக செரிமானம் செய்யவும், வயிற்றுப்போக்கு வராமல் சத்துக்களை அளிக்கவும் ஏற்ற அருமருந்து தாய்ப்பால். முதல் 6 மாதங்களுக்குத் தண்ணீர்கூடத் தேவையில்லை, தாய்ப்பாலே போதும் என்று மருத்துவம் குறிப்பிடுகிறது. இதை அனுசரித்தே தமிழக அரசு பணியிலிருக்கும் பெண்களுக்கு பேறுகால விடுப்பை 9 மாதமாக அதிகரித்து ஆணை பிறப்பித்திருக்கிறது. ஆனால் தாய்மையை போற்றும் தமிழ்நாடு, ‘குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் மிகவும் பின்தங்கியிருக்கிறது’ என்ற அதிர்ச்சிகரமான தகவல், தேசிய சுகாதாரம் மற்றும் குடும்பநல ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. 

குழந்தை பிறந்தவுடன் 6 மாதம்வரை தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதுபற்றி எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், கடைசி இடத்தில் நாகலாந்தும், மேகாலயாவும் இருக்கிறது. அந்த பட்டியலில் அந்த இரு மாநிலங்களுக்கு முன்பு கடைசி இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் 48.3 சதவீதம் பெண்கள்தான் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள். இதற்கு காரணம், தமிழ்நாட்டில் நிறைய பெண்கள் அரசிலும், தனியார் நிறுவனங்களிலும், முறைசாரா என்ற பட்டியலில் கூலிவேலை, விவசாய வேலைகளிலும் இருக்கிறார்கள். பாலூட்டுவதை ஊக்குவிக்கும் வகையில்தான் பஸ்நிலையம் உள்பட பல பொது இடங்களில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பாலூட்டும் அறைகளை தொடங்கி வைத்தார். ஏராளமான பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவேண்டும் என்று நினைத்தாலும், அவர்களுக்கு சரியான சத்துணவு இல்லாமல், பால் சுரக்காமல், புட்டிப்பால் தேடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பமான காலத்தில் ரூ.12 ஆயிரம் உதவி அளிக்கும் தமிழகஅரசு, குழந்தை பிறந்த பிறகு பாலூட்டும் வகையில், தாய்க்கு சத்தான உணவுகளை சாப்பிடும் வகையில் உதவித்தொகை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாகரிக பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவது தங்கள் இளமைக்கும், அழகுக்கும் பாதிப்பு என்று நினைக்கும் அவலமும் இருக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு பாலூட்டுவதன் அவசியம்கருதி ஒரு விழிப்புணர்வை மீண்டும் முழுவீச்சில் ஏற்படுத்தவேண்டிய ஒரு கட்டாயம் இப்போது உருவாகிக்கொண்டிருக்கிறது. பாலூட்டுவதன் அவசியம் மட்டுமல்லாமல், அதற்கான வசதிகளையும் தாய்மார்களுக்கு பணிபுரியும் இடங்களில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மட்டுமல்லாமல், சமுதாயமும் ஏற்படுத்தவேண்டும்.

Next Story