மத்திய–மாநில மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்


மத்திய–மாநில மருத்துவ காப்பீட்டு  திட்டங்கள்
x
தினத்தந்தி 19 Aug 2018 10:30 PM GMT (Updated: 19 Aug 2018 11:48 AM GMT)

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம்.

பொதுவாக இந்த உரையில், ஒவ்வொருவருடைய வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவிப்புகள் இருக்கும். அந்தவகையில் அடுத்த ஆண்டு மே மாதவாக்கில் தேர்தலை சந்திக்கப்போகும் நிலையில், இந்தமுறை பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் கடைசி உரை என்பதால் நிச்சயமாக முக்கியமான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2 முக்கிய அறிவிப்புகளை மோடி வெளியிட்டார். பல நாட்களாக அவர் சொல்லிக்கொண்டு வரும் ஏழை–எளிய மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் செப்டம்பர் 25–ந்தேதி தொடங்கப்படும் என்றும், 2022–ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு ஒரு ஆண் அல்லது பெண்ணை அனுப்பும் வகையிலான விண்கலத்தை செலுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த சாதனையைப்புரியும் 4–வது நாடாக இந்தியா திகழும் என்றும் அறிவித்தார்.

தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் இந்தியாவில் உள்ள 10 கோடியே 74 லட்சம் ஏழை–எளிய குடும்பங்களை சேர்ந்த 50 கோடி மக்கள் பயன்பெறும் திட்டமாகும். ஒவ்வொரு குடும்பத்திலும் 5 பேர் பயன் அடைவார்கள். இதன்மூலம் ஒவ்வொரு குடும்பமும் ரூ.5 லட்சத்துக்கு மருத்துவ சிகிச்சைகளை நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அல்லது மத்திய அரசாங்கம் அங்கீகரித்த தனியார் மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்ளலாம். நாடு முழுவதிலும் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தில் சேருவதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஏற்கனவே முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஏழை–எளிய குடும்பங்களுக்கும் மருத்துவ சிகிச்சை காப்பீட்டு தொகை வழங்கி வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வீதமும், சில சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ.2 லட்சம் வீதமும் காப்பீடு உள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.25 லட்சம்வரையில் தமிழக அரசு தனியாக வழங்குகிறது. தமிழகஅரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1½ கோடி பேர் பயன் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசாங்கத்தின் வரைமுறைகளை பார்த்தால் 77 லட்சம் பேர் மட்டுமே அந்த வரம்புக்குள் வருகிறார்கள். அதேநேரத்தில் தமிழகஅரசு திட்டத்தில் காப்பீட்டு தொகை குறைவு. மத்திய அரசாங்கத்தின் திட்டத்தில் அதிகம். இந்த இரு திட்டங்களையும் ஒருங்கிணைத்தால் பலன் மிகுதியாகும். தமிழக அரசின் திட்டத்துக்கு பங்கம் இல்லாமல், மத்திய அரசின் திட்டத்தில் பங்கேற்க தயார் என்று தமிழகஅரசு சம்மதித்துள்ளது. தமிழகஅரசு திட்டத்தில் சேர்ந்து, மத்திய அரசாங்க திட்டத்தின்கீழ் பலன்பெறும் 77 லட்சம் மக்களுக்கும் 60 சதவீதம் பிரிமிய தொகையை மத்திய அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது. இந்தநிலையில், இரு அரசுகளும் கலந்துபேசி 1½ கோடி தமிழக மக்களும் முழுமையான பலன்பெற மத்திய அரசு நிதியைபெறவும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள எந்த தனியார் மருத்துவமனை என்றாலும் உடனடி சிகிச்சை பெறமுடியும் என்ற வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


Next Story