அனைத்து பிரசவங்களும் சுகப்பிரசவங்கள்


அனைத்து பிரசவங்களும் சுகப்பிரசவங்கள்
x
தினத்தந்தி 20 Aug 2018 9:30 PM GMT (Updated: 2018-08-20T17:55:14+05:30)

தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்புவிகிதம் 2016–ம் ஆண்டு கணக்குப்படி உயிருடன் பிறந்த 1,000 குழந்தைகளுக்கு 17 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மிழ்நாட்டில் அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில்தான் நடக்கவேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாக, 99.9 சதவீதத்துக்கும் மேலான பிரசவங்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. பிற மாநிலங்களில் இது மிகவும் குறைவு. மீதமுள்ள 0.1 சதவீத பிரசவங்கள் வீடுகளில் நடந்துகொண்டு இருக்கிறது. அதிலும் பல பிரசவங்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே வீட்டிலேயே இயற்கையாக நடந்துவிடுகின்றன. இந்தநிலையில், ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டாம், வீட்டிலேயே மரபுவழியாக பிரசவம் பார்த்துக்கொள்ளலாம். வீட்டில் பிரசவம் பார்த்தால் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யவேண்டியதில்லை. இயற்கையான பிரசவம் நடக்கும் என்றும் சில தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, யு–டியூபில் வீடியோவை பார்த்துக்கொண்டே திருப்பூரில் ஆசிரியை கிருத்திகாவுக்கு அவரது கணவர் கார்த்திகேயன் பிரசவம் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்த பெண் உயிர் இழந்துவிட்டார். இதேபோல, தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த கண்ணன் என்ற என்ஜினீயர் தனது மனைவி மகாலட்சுமிக்கு  வீட்டிலேயே பிரசவம் பார்த்த தகவலும் வெளிவந்துள்ளன. 

இப்போது புதிதாக அந்தக்காலத்தில் எல்லாம் ஆஸ்பத்திரியிலா பிரசவம் நடந்தது?. வீட்டில்தான் தாய்மார்களும், பாட்டிமார்களும், மருத்துவச்சிகளும்தானே பிரசவம் பார்த்தார்கள். அப்போதெல்லாம் சிசேரியன் அறுவை சிகிச்சை நடந்ததா? என்று புதிதாக ஒரு கருத்து வெளியிடப்படுகிறது. அந்தக்காலங்களில் பிரசவம் என்பது மறுபிறவியாக கருதப்பட்டது. நாட்டை ஆண்ட ராஜாக்களின் மனைவியான ராணிகளே பிரசவத்தில் உயிரிழந்த வரலாறும் இருக்கிறது. மேலும் அந்தக்காலத்து பெண்கள் உடல் உழைப்பில் வல்லவர்கள். வீட்டிலேயே குனிந்து பெருக்குவது, ஆட்டுஉரலில் மாவு ஆட்டுவது, நெல் குத்துவது உள்பட ஏராளமான வேலைகளையும், இப்போதுபோல உபகரணங்கள் மூலம் செய்ததில்லை. அந்தக்காலத்தில் பாட்டிமார்களுக்கு நாட்டு வைத்தியம் நிறையத்தெரியும். அன்றைய காலக்கட்டத்தில் பிரசவத்தின்போது இறப்பு விகிதம் நிச்சயமாக அதிகமாக இருந்திருக்கக்கூடும். அப்போதெல்லாம் இப்போதுபோல பிரசவத்தின்போது தாய்மார்கள் இறப்பு விகிதம், குழந்தைகள் இறப்பு விகிதம் போன்ற புள்ளிவிவரங்கள் இல்லை. இப்போது தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்புவிகிதம் 2016–ம் ஆண்டு கணக்குப்படி உயிருடன் பிறந்த 1,000 குழந்தைகளுக்கு 17 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இதுபோல தாய்மார்கள் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரசவங்களில், தமிழ்நாட்டில் 62 ஆக குறைந்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் 3 தவணைகளில் ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. பாட்டி வைத்தியத்தையும் அரசு மருத்துவமனைகளில் மறந்துவிடவில்லை. கர்ப்பமான காலத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை உளுந்து தைலம், குந்திரிக தைலம், உரை மாத்திரை உள்பட 11 சித்த மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. என்றாலும், அனைத்து பெண்களுக்கும் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் நடக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணிநேரமும் பிரசவம் பார்க்கும் வசதிகள் டாக்டர்கள், பணியாளர்கள் இருப்பது மேம்படுத்தப்படவேண்டும். மீதமுள்ள 0.1 சதவீத பெண்களும் அரசு மருத்துவமனைகளிலேயே பிரசவம் பார்க்க வரும் நிலையை உருவாக்கவேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்துக்கான கட்டணம் வெகுவாக குறைக்கப்படவேண்டும். தேவையில்லாமல் சிசேரியன் நடப்பதை கட்டுப்படுத்தவேண்டும்.

Next Story