பாலியல் வன்கொடுமை


பாலியல் வன்கொடுமை
x
தினத்தந்தி 21 Aug 2018 10:00 PM GMT (Updated: 2018-08-21T18:57:51+05:30)

தேசப்பிதா மகாத்மாகாந்தி நாட்டின் சுதந்திரத்திற்கு எவ்வளவு பாடுபட்டாரோ, அதற்கு இணையாக பெண்கள் பாதுகாப்பிலும் அதிக அக்கறையோடு இருந்தார்.

தேசப்பிதா மகாத்மாகாந்தி நாட்டின் சுதந்திரத்திற்கு எவ்வளவு பாடுபட்டாரோ, அதற்கு இணையாக பெண்கள் பாதுகாப்பிலும் அதிக அக்கறையோடு இருந்தார். ‘என்றைக்கு ஒரு பெண் கழுத்து நிறைய நகைகளை போட்டுக்கொண்டு தனியாக நள்ளிரவில் பாதுகாப்பாக நடந்து செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கிறதோ, அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றுபொருள்’ என்று கூறினார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும் பெண்கள் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டவர். இவ்வளவு காலமாகியும், பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லாதநிலை மட்டுமல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக கற்பழிப்பு சம்பவங்கள் நடப்பதும் வேதனை அளிக்கிறது. சமீபகாலமாக சிறு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆங்காங்கு நடக்கிறது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அக்கம்–பக்கத்தினர், வேலைசெய்பவர்கள், சொந்த உறவினர் என்று யாரையும் நம்பமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.கிருபாகரன் மிக வேதனையோடு, ‘ஒருகாலத்தில் இந்தியா ஆன்மிக நாடு, தெய்வீக நாடு’ என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது சிறு குழந்தைகள்கூட கொடூரமிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது, ‘கற்பழிப்பு பூமி’ என்று அழைக்கக்கூடிய கட்டாய சூழ்நிலை வந்துவிட்டது என்று மிகவருத்தத்தோடு தன் கருத்துகளை பதிவிட்டி ருக்கிறார். நீதிமன்றத்தில் அவர் கருத்து வெளியிட்ட அதேநாளில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் சிறுகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடியவர்களுக்கு அதிக பட்சமாக தூக்குதண்டனை விதிக்கும் வகையிலான மசோதா நிறைவேறியிருக்கிறது.

இந்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றபிறகு குற்றவியல் சட்டமாக (திருத்தம்) நடைமுறைக்கு வரும். இந்த சட்டத்தின்படி, 12 வயதுக்கு குறைவான குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்கு குறைந்தபட்சமாக 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை. அதிகபட்சமாக தூக்குதண்டனை அல்லது ஆயுள் முழுக்க தண்டனை விதிக்கப்படும். 12 வயதுக்கு குறைவான குழந்தைகளை பலபேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தால் ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு குறைவான சிறுமியை கற்பழித்தால் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ஆயுள்முழுக்க தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு மேற்பட்டவர் களை கற்பழித்தால் 10 ஆண்டு சிறைதண்டனை முதல் ஆயுள் தண்டனைவரை விதிக்கப்படும். இதில், பாராட்டத்தக்க அம்சம் என்னவென்றால், இதுபோன்ற வழக்குகளை 2 மாதத்திற்குள் புலன்விசாரணை செய்ய வேண்டும். கீழ்கோர்ட்டில் தண்டனை விதிக்கப்பட்டு, மேல் கோர்ட்டில் அப்பீல் செய்தால் 6 மாதத்திற்குள் பைசல் செய்யப்படவேண்டும் என்று இருக்கிறது. 

மரண தண்டனை விதிப்பதால் மட்டும் இந்த குற்றங்களை குறைத்துவிடமுடியாது. ஏற்கனவே மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர் களுக்கு தூக்குதண்டனை விதிக்கும் சட்டம் இருந்தாலும், அங்கு குற்றங்கள் குறையவில்லை. அரபு நாடுகளைத்தவிர உலகில் பெரும்பாலான நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்த சட்டத்தின் மூலம் மரண தண்டனை விதிப்பது பாலியல் வன்கொடுமை குற்றங்களை குறைக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும். ஆனால் இந்த கொடூரவிதமான எண்ணம் ஏற்படாமல் இருக்க மனரீதியான பக்குவங்களை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு இதுபோன்ற கொடூரர் களிடமிருந்து விலகி நிற்கவேண்டும் என்பதை பட்டும் படாமல், பள்ளிக்கூடங்களிலும், பெற்றோர்களும் கற்றுக்கொடுக்க வேண்டும். 

Next Story