மறுசீரமைப்பும், மறுவாழ்வும்


மறுசீரமைப்பும், மறுவாழ்வும்
x
தினத்தந்தி 22 Aug 2018 10:00 PM GMT (Updated: 2018-08-22T18:43:48+05:30)

ராஜீவ்காந்தி இந்திய நாட்டின் ஒற்றுமையிலும், ஒருமைப்பாட்டிலும் மிகவும் அக்கறைகொண்டவர். ‘‘நம்மிடையே வித்தியாசமான கலாசாரங்கள் இருக்கின்றன.

ராஜீவ்காந்தி இந்திய நாட்டின் ஒற்றுமையிலும், ஒருமைப்பாட்டிலும் மிகவும் அக்கறைகொண்டவர். ‘‘நம்மிடையே வித்தியாசமான கலாசாரங்கள் இருக்கின்றன. நாம் வித்தியாசமான மதங்களை பின்பற்றுகிறோம். பல்வேறு மொழிகளை பேசுகிறோம். ஆனாலும், நாமெல்லாம் ஒன்றுதான். நாமெல்லாம் இந்தியர்கள்’’ என்று சொன்னது, சமீபத்தில் கேரளாவில் பெய்த பெருமழை, சேதங்களைகண்டு நாடு முழுவதும் ஒன்றாக எழுந்துநின்று உதவிக்கரம் நீட்டியது நிரூபித்தது. கேரளாவில் கடந்த 8–ந்தேதி தொடங்கிய மழை 10 நாட்கள் இடைவிடாமல் பெய்தது. கடந்த 87 ஆண்டுகளில் ஆகஸ்டு மாதத்தில் இப்படியொரு மழை பெய்ததில்லை. அந்த மாநிலத்தில் உள்ள 44 ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மொத்தமுள்ள 39 அணைகளும் நிரம்பிவழியும் நிலையில், 37 அணைகளின் மதகுகள் ஒரேநேரத்தில் திறக்கப்பட்டன. 

வரலாறு காணாத வகையில் எல்லா அணைகளும் ஒரேநேரத்தில் திறக்கப்பட்ட சூழ்நிலையில், எல்லா இடங்களிலும் வெள்ளநீர் புகுந்து ஏராளமான உயிர்சேதம், பொருட்சேதம், சொத்துக்கள், உடைமைகள், சாலைகள், வீடுகள் என்று சேதங் களுக்கு அளவேயில்லை. 14 லட்சத்துக்கு மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். கேரள அரசு மிகச்சிறப்பான முறையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டது. முப்படைகள், கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புபடை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று பலரும் ஒரேநேரத்தில் களம் இறங்கினர். மீனவர்கள் தங்கள் படகுகளுக்கான டீசல் செலவு, வாடகை வேண்டாம் என்றுகூறி, தண்ணீரிலேயே இங்கும் அங்கும் அலைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர், விமானங்கள் மூலமும் மீட்பு பணிகள் நடந்தது. ரெயில், பஸ், விமான போக்குவரத்துகள் அடியோடு நின்றுபோனது. மின்சார பாதிப்பு ஏற்பட்டதால் செல்போனில் பேசமுடியவில்லை. 

இந்தநிலையில், கேரளாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் மனிதாபிமானம் மேலோங்கி நின்றது. வெள்ளசேதத்தை விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் நரேந்திரமோடி, உடனடியாக 600 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டார். ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் பாதிப்பின் மதிப்பு பூர்வாங்கமாக ரூ.19,512 கோடி என்றநிலையில், இந்த தொகையைவிட அதிகமாகும் என்று கருதப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களும் தங்கள் அரசு சார்பில் போட்டிப்போட்டு நிவாரண உதவிகள் அளித்தன. அரசியல்கட்சிகளும் நிவாரண உதவிகளை அளித்துள்ளன. தமிழ்நாட்டில் இருந்து ரெயில் மூலம் குடிதண்ணீர் அனுப்பப்பட்டது. சாதி, மதம், இனம் எல்லாமே கேரளாவில் மறந்து போனது. மிகதீவிர இயற்கை பேரிடர் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இப்போது மழை நின்ற நிலையில், மறுசீரமைப்பு, மறுவாழ்வு பணிகள் தொடங்கியுள்ளன. இனிமேல்தான் முழுமையான சேதமதிப்பீடு தெரியும். தட்டம்மை, காலரா, வயிற்றோட்டம் போன்ற தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் பொறுப்பு கேரள அரசுக்கு இருக்கிறது. அணை நிர்வாகத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஒரு புதியகொள்கையை செயல்படுத்த மத்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமையை சமாளிக்க நிரந்தர நிதி உருவாக்கப்பட வேண்டும். மீட்புபணிகளில் உதவியதுபோல, மறு சீரமைப்பு பணிகள், மறுவாழ்வு பணிகளிலும் மத்திய அரசும், அனைத்து மாநில அரசாங்கங்களும், நாட்டு மக்களும் உதவவேண்டும். 

Next Story