இது ஒரு பாடம்


இது ஒரு பாடம்
x
தினத்தந்தி 24 Aug 2018 10:00 PM GMT (Updated: 2018-08-24T18:24:09+05:30)

காவிரியின் குறுக்கே உள்ள முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருப்பதை பார்க்கும் விவசாயிகள், ‘இது தண்ணீர் அல்ல, நாங்கள் வடிக்கும் கண்ணீர்’ என்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

காவிரியின் குறுக்கே உள்ள முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருப்பதை பார்க்கும் விவசாயிகள், ‘இது தண்ணீர் அல்ல, நாங்கள் வடிக்கும் கண்ணீர்’ என்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை தன் மடியில்வைத்து தாலாட்டிக்கொண்டு ஓடும் காவிரி, 177 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருச்சி மாவட்டம் முக்கொம்பில் உள்ள மேலணைக்கு வருகிறது. இந்த மேலணையை கட்டிய பெருமைக்கு சொந்தக்காரர் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயே ராணுவ பொறியாளர் ஆவார். ‘தென்னிந்திய நீர்ப்பாசன தந்தை’ என்று அழைக்கப் படும் ஆர்தர் காட்டன், கல்லணையின் அடித்தளம் மற்றும் அணை கட்டப்பட்டுள்ள முறையைக்கண்டு வியந்து ஆழம் காணமுடியாத மணல்படுகையில் எவ்வாறு அடித்தளம் அமைப்பது? என்ற தொழில் நுட்பத்தை தமிழர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று புகழாரம் சூட்டினார். அந்தநேரத்தில் முக்கொம்புக்கு வரும் காவிரிநீர் கடலில் கலந்து வீணாகிக்கொண்டிருப்பதை தடுக்க இந்த மேலணையை கட்டியவர் அவர்தான். 

1834–ம் ஆண்டு இந்த அணை கட்டும் பணி தொடங்கப்பட்டு 1836–ல் முடிக்கப்பட்டது. 45 மதகு களுடன் கட்டப்பட்ட இந்த அணை பெருகி ஓடிவரும் காவிரி நீரை தடுத்து ஒரு பகுதியை பாசனத்துக்காக காவிரியாகவும், மற்றொரு பகுதியை கொள்ளிடமாக பிரித்து அனுப்புகிறது. இப்போது 9 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடத்தில் வீணாக தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த 2005–ம் ஆண்டு அக்டோபரில் காவிரியில் 3 லட்சம் கனஅடிக்குமேல் தண்ணீர் வந்தபோது இந்த முக்கொம்பு மேலணை ஆட்டம் கண்டது. அப்போதே இந்த அணையின் உறுதித்தன்மையை நிபுணர்கள் பரிசீலித்து இருக்கவேண்டும். 13 ஆண்டுகளாக அப்படி நடவடிக்கை எடுக்காததன் விளைவுதான் இந்த 9 மதகுகள் உடைந்து கொள்ளிடத்தில் தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது என்கிறார், காவிரி டெல்டா விவசாயிகளின் நலசங்க தலைவர் மன்னார்குடி ரங்கநாதன். 

தமிழ்நாட்டில் மொத்தம் 116 அணைகள் இருக்கின்றன. இந்த அணைகள் எல்லாம் கட்டப்பட்டு நீண்ட நெடிய ஆண்டுகளாகிவிட்டது. இவற்றில் 100 ஆண்டுகளுக்குமேல் பழமையான அணைகளும் உண்டு. எனவே, முக்கொம்பு அணை உடைந்ததை ஒரு பாடமாகக் கொண்டு, அனைத்து அணைகளின் உறுதித்தன்மையையும் ஆராய ஆங்காங்கு நிபுணர் குழுக்கள் அமைக்கப்படவேண்டும். எந்தெந்த அணை பலவீனமாக இருக்கிறது? என்பதைக்கண்டு உடனடியாக அதை சீர்செய்ய முடியுமா? என்று பார்த்து, இல்லையெனில் புதிய அணைகள் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதற்கு பெரும் பொருட்செலவாகும் என்றாலும், மத்திய அரசாங்கத்தின் உதவியையும் கேட்கலாம். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி துணையையும் நாடலாம். இப்போது முக்கொம்பு சேதத்தை உடனடியாக நேரில்சென்று பார்வையிட்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடைந்த அணையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கொள்ளிடத்தில் ஒரு பகுதியில் ரூ.325 கோடி மதிப்பில் ஒரு கதவணையும், மற்றொரு பகுதியில் ரூ.85 கோடி மதிப்பில் மேலும் ஒரு கதவணையும் கட்டப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பு மிகவும் வரவேற்புக்குரியது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை மிக வேகமாகத் தொடங்கி, எவ்வளவு விரைவில் நிறைவேற்ற முடியுமோ, அவ்வளவு விரைவில் நிறைவேற்றவேண்டும். 

Next Story