தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 28 Aug 2018 10:00 PM GMT (Updated: 2018-08-28T22:35:19+05:30)

தி.மு.கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1969–க்குப்பிறகு அண்ணா மறைந்தவுடன், தி.மு.கழகத்தின் முதல் தலைவர் பொறுப்பை கலைஞர் கருணாநிதி ஏற்றார்.

தி.மு.கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1969–க்குப்பிறகு அண்ணா மறைந்தவுடன், தி.மு.கழகத்தின் முதல் தலைவர் பொறுப்பை கலைஞர் கருணாநிதி ஏற்றார். 50 ஆண்டுகாலம் ஒப்பாரும் இன்றி, மிக்காரும் இன்றி, தி.மு.க.வில் தன் பணியை ஆற்றினார். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, நெருக்கடி நிலையின்போதும் சரி, தி.மு.க. கட்டுக்கோப்பாக நிலைநிறுத்தப்பட்டதற்கு கலைஞர்தான் முக்கியக்காரணம். அதுபோல, அரசியல் வாழ்க்கையில் 50 ஆண்டுகள் பூர்த்திசெய்த அவரது மகன் மு.க.ஸ்டாலின் தி.மு.கழகத்தின் வளர்ச்சியோடு, பணிகளோடு தனது 14–வது வயது முதல்கொண்டே மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் சிறுவயதிலேயே பம்பரம்போல் சுழன்று கட்சி பணியாற்றியதை கண்ட பேரறிஞர் அண்ணா, ‘‘மு.க.ஸ்டாலின் மிகவும் புத்திசாலி, மிகவும் திறமைசாலி, தந்தையைபோல் வெற்றிபெறுவார்’’ என்று அந்தக்காலத்திலேயே புகழுரைத்தார். 

அண்ணாவின் சொல்லுக்கு ஏற்ப, கட்சியின் இளைஞரணியை உருவாக்கி சின்னஞ்சிறு குக்கிராமங்களில் இருந்து, சென்னை நகரம் வரை அனைத்து ஊர்களிலும் கட்சிப்பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார். நெருக்கடிநிலை நேரத்தில் திருமணமாகி 3 மாதங்களிலேயே அஞ்சாமல் சிறைக்குச்சென்று, ஒரு ஆண்டு சிறையில் கொடுமையை அனுபவித்தார். தி.மு.க. அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் முன்னணியில் இருந்து போராடி பலமுறை சிறைக்கும் சென்றிருக்கிறார். 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் 24 ஆண்டுகளாக தனது பணியை தொடர்ந்து வருகிறார். அடுத்த ஒரு ஆண்டில் சட்டமன்ற நெடும் பயணத்தில் ‘வெள்ளிவிழா’ காணப்போகிறார். சென்னை நகர மேயர், அமைச்சர், துணை முதல்–அமைச்சர் என்று ஆட்சிப்பணியில் அனுபவம்பெற்ற மு.க.ஸ்டாலின், கட்சிப்பணிகளிலும், துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல்தலைவர் என திறம்பட அனைவரும் மெச்சத்தக்க வகையில் பணியாற்றினார். இப்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், செயல்தலைவர் பணியை கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வந்தார்.

‘ஒரு தந்தை என்ற முறையில் ஸ்டாலின் முன்னேற்றத்துக்கு எந்தவிதக் கடமையையும் நான் ஆற்றவில்லை. ஆனால் ஒரு மகன் என்ற முறையில் தனது கடமைகளை சரிவர ஆற்றி என்னைப் பெருமைப்பட வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்’ என்று கலைஞர் மனமுவந்து பாராட்டி இருக்கிறார். மேலும், யானை மாலை போட்டதாலே மு.க.ஸ்டாலின் ஆளவந்துவிடவில்லை, கட்சியில் தன் கண் அயரா உழைப்பினாலும், தியாகத்தாலும், செயலாற்றும் திறனாலும்தான் இந்த பதவிக்கு வந்திருக்கிறார். ‘நமக்கு நாமே’ பயணத்தில் தமிழ்நாடு முழுவதும் வலம்வந்தவர். அவருக்கு தமிழ்நாட்டில் தெரியாத ஊரே இல்லை, தெரியாத தொண்டரே இல்லை என்றவகையில் கலைஞர்போல, அடிமட்ட தொண்டரையும் பெயர் சொல்லி அழைக்கும்வகையில் எல்லோருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார். கட்சியின் அடிமட்டத்திலிருந்து படிப்படியாக பல்வேறு பதவிகளைப்பெற்று, முத்திரை பதித்து இன்று தலைவராக ஆகியிருக்கும் மு.க.ஸ்டாலின், உடனடியாக 2 இடைத்தேர்தல், 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதைத்தொடர்ந்து 2021–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் என்று பல சவால்களை எதிர்நோக்கி இருக்கிறார். தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் அவரது பணியை தமிழகம் மிகுந்த எதிர்பார்ப்போடு உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. அவரது கடும் உழைப்பினால் அவரது உயர்ந்த நோக்கங்கள் நிறைவேறும் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள்.

Next Story