தாங்க முடியாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு


தாங்க முடியாத பெட்ரோல், டீசல்  விலை  உயர்வு
x
தினத்தந்தி 29 Aug 2018 10:00 PM GMT (Updated: 29 Aug 2018 5:15 PM GMT)

பொதுமக்களுக்கு தற்போது பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பது, அன்றாட செலவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு தற்போது பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பது, அன்றாட செலவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்றாட போக்குவரத்து செலவு மட்டுமல்லாமல், பொருட்களின் விலை ஏற்றமும், இறக்கமும் அன்றைய பெட்ரோல்–டீசல் விலையை பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. இப்போது அன்றாடம் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோலிய நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை இருக்கிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.32 ஆகவும், டீசல் ரூ.73.78 ஆகவும் இருந்தது. மற்ற ஊர்களிலும் இந்த விலையை சுற்றியே இருந்தது. தற்போது பெட்ரோல்–டீசல் விலை அதிகமாக உயர்ந்து கொண்டேயிருக்கிறது. 

பெட்ரோலும், டீசலும் உள்நாட்டு உற்பத்தி மூலம் பெருமளவில் கிடைப்பதில்லை. நமது நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துதான் சமாளிக்கிறோம். எனவே, சர்வதேச கச்சா எண்ணெய் விலையையும், ரூபாய் நோட்டின் மதிப்பையும் வைத்துதான் பெட்ரோல்–டீசல் விலை அமைகிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயர்ந்தால், நமது இறக்குமதி செலவு ரூ.823 கோடி அதிகரிக்கும். இதுபோல, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 ரூபாய் குறையும்போதும் இறக்குமதி செலவு ரூ.823 கோடி உயர்கிறது. ஒரு பீப்பாய் எண்ணெய் 80 அமெரிக்க டாலராக இருந்தபோதுகூட, பெட்ரோல்–டீசல் விலை இவ்வளவு அதிகமாக இல்லை. ஆனால் தற்போது குறிப்பாக நேற்று காலை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 74.15 அமெரிக்க டாலராக இருந்தபோதும், முன்பைவிட அதிகமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ரூபாய் நோட்டு மதிப்பு பெருமளவில் சரிந்துவிட்டதுதான். 

நேற்று ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் நோட்டு மதிப்பு 70.48 ஆகும். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது ஒருபக்கம் இருந்தாலும், மாநில அரசு விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியும், மத்திய அரசு விதிக்கும் கலால் வரியும் பெட்ரோல்–டீசல் விலையை இவ்வளவு அதிகமாக உயர்த்துகிறது. இதுமட்டுமல்லாமல், சுங்க சாவடி கட்டணம், டீலர் கமி‌ஷன், போக்குவரத்து செலவு போன்றவற்றையெல்லாம் சேர்த்துத்தான் பொதுமக்களின் தலையில் இந்த விலை உயர்வு சுமத்தப்படுகிறது. தற்போது மத்திய அரசாங்கம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.19.48–ம், டீசலுக்கு ரூ.15.33 காசுகளும் கலால் வரியாக வசூலிக்கிறது. இதுதவிர, தமிழகஅரசு பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் மதிப்புக் கூட்டுவரியாக வசூலிக்கிறது. பெட்ரோல்–டீசல் விலை உயர்வால் தமிழக அரசுக்கு இந்த வரிமூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயின் தொகையாவது வரி விகிதத்தில் குறைக்க முடியுமா? என்று பார்க்கவேண்டும். மத்திய அரசாங்கமும் கலால் வரியை 2017–ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெட்ரோல்–டீசல் விலை இதைவிட குறைவாக உயர்ந்த நேரத்திலும், லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்ததுபோல, இப்போது குறைக்க முடியுமா? என்பதையும் பார்க்க வேண்டும். இவ்வளவு விலை உயர்வை பொதுமக்களால் நிச்சயம் தாங்கமுடியாது. எனவே, உடனடியாக பெட்ரோல்–டீசல் விலையை குறைக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கமுடியும்? என்பதை மத்திய–மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

Next Story