சத்துணவு மையங்களுக்கு முட்டை கொள்முதல்


சத்துணவு மையங்களுக்கு முட்டை  கொள்முதல்
x
தினத்தந்தி 30 Aug 2018 10:00 PM GMT (Updated: 2018-08-30T22:42:21+05:30)

கடந்த 21–ந்தேதி தமிழக அரசு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பயனாளிகளான மாணவர்களுக்கு வழங்க மாநில அளவில் மண்டல வாரியாக, அதாவது 6 மண்டலங்களுக்கு 6 மாதகாலம் அக்மார்க் தரத்திலான கோழி முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிக்கையை வெளியிட்டது.

டந்த 21–ந்தேதி தமிழக அரசு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பயனாளிகளான மாணவர்களுக்கு வழங்க மாநில அளவில் மண்டல வாரியாக, அதாவது 6 மண்டலங்களுக்கு 6 மாதகாலம் அக்மார்க் தரத்திலான கோழி முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிக்கையை வெளியிட்டது. தமிழ்நாட்டில் கோழிப்பண்ணைகள் வைத்துள்ள முட்டை உற்பத்தியாளர்களிடம் இருந்து, மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுவதாகவும், இவை 5–9–2018 அன்று காலை 11.30 மணிக்கு சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட இயக்குனர் மற்றும் குழும இயக்குனர் அலுவலகத்தில் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்தியாவுக்கே முன்னோடியாக 1–7–1982 அன்று மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரால் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. 1–ம் வகுப்பு முதல் 10–வது வகுப்புவரை படிக்கும் 51 லட்சத்து 96 ஆயிரத்து 780 மாணவ–மாணவிகள் சத்துணவுத் திட்டத்தின்கீழ் தற்போது மதிய உணவு சாப்பிட்டு வருகிறார்கள். 1989–ம் ஆண்டு, தி.மு.க. தலைவர் மறைந்த கலைஞர் ஆட்சியில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் மதிய உணவில் முட்டை சேர்க்க உத்தரவிட்டார். வாரத்திற்கு ஒருநாள் முட்டை என்று தொடங்கிய இந்தத்திட்டம், ஜெயலலிதாவால் வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை என்றும், மீண்டும் கருணாநிதி ஆட்சியில் தினமும் முட்டை என்றும் விரிவுபடுத்தப்பட்டது. இதற்கான முட்டை கொள்முதல் பல மாற்றங்களைக்கண்டு, கடைசியாக ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சத்துணவுக் கூடங்களுக்கும் சப்ளை செய்யும் வகையில் ஆண்டுதோறும் டெண்டர் விடப்பட்டு வந்தது. 

இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜூலை வரை முட்டை சப்ளை செய்யவேண்டும் என்று ஏற்கனவே டெண்டர் விடப்பட்டிருந்தது. இதுவரையில் முட்டை சப்ளை செய்துவந்த வருமான வரி சோதனைக்கு ஆட்பட்ட கிறிஸ்டி பிரைடு கிராம் இன்டஸ்டிரி நிறுவனம் உள்பட 6 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த டெண்டரில் எந்த நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஒரு முட்டையின் விலை ரூ.4.34 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதலுக்காகவே அரசு ரூ.403 கோடி செலவழித்துள்ளது. இவ்வாறு ஒரே நிறுவனம் மாநிலம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு சப்ளை செய்யும் முறையை மாற்றி, தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டல வாரியாக 6 மாதகாலத்திற்கு முட்டை சப்ளை செய்ய தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த முறை மிக முக்கியமாக கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள்தான் தனியாகவோ, கூட்டமைப்பாகவோ, சங்கமாகவோ விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் கடந்த 3 ஆண்டுகளில், ஆண்டுதோறும் ரூ.10 கோடி அளவில் மொத்த விற்பனை செய்திருக்கவேண்டும். ஒரு மண்டலத்தில் தேவையான முட்டைகளில் 60 சதவீத முட்டைக்கான உற்பத்தித்திறன் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தகுந்த அம்சங்களாகும். இதன் மூலம் கோழி வளர்ப்பு தொழில் நிச்சயமாக ஊக்குவிக்கப்படும். இந்த மண்டல வாரியான கொள்முதல் வரவேற்கத்தகுந்தது என்றாலும், அடுத்த முறை மாவட்ட வாரியாக கொள்முதல் என்று கொண்டுவந்தால், சின்னஞ்சிறு கிராமங்களில் இருந்துகூட முட்டைக்கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

Next Story