பொருளாதார வளர்ச்சிக்கு பலனா?, பாதிப்பா?


பொருளாதார வளர்ச்சிக்கு பலனா?,  பாதிப்பா?
x
தினத்தந்தி 2 Sep 2018 10:30 PM GMT (Updated: 2 Sep 2018 12:19 PM GMT)

இந்திய பொருளாதார வரலாற்றில் 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதியை யாரும் மறக்க முடியாது.

யாருமே எதிர்பார்க்காத வகையில் எல்லோருக்கும் அதிர்ச்சிதரும் வகையில் அன்று நள்ளிரவு முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி டெலிவி‌ஷனில் அறிவித்தார். நாட்டில் ஊழல், கருப்புபணம், கள்ளநோட்டு, தீவிரவாதிகளுக்கு பணப்பட்டுவாடா போன்ற சமூகவிரோத செயல்களை அடியோடு ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் கடந்த 29–ந்தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில், இதையெல்லாம் அடியோடு மறுக்கும்வகையில் ஒரு பரபரப்பான புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாளில் ரூ.15 லட்சத்து 41 ஆயிரம் கோடி மதிப்பில் அந்த நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி மதிப்புக்கான ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது. அதாவது 99.3 சதவீத ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டன. 0.7 சதவீதம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிக்கு திரும்ப வந்துசேரவில்லை. ரூ.10 ஆயிரத்து 720 கோடி மட்டுமே வங்கிக்கு வந்துசேரவில்லை. கருப்பு பணமான ரூ.3 லட்சம் கோடி வராது என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.10 ஆயிரத்து 720 கோடி மட்டுமே வராததை பார்த்தால், இவ்வளவுதான் கருப்பு பணமா? என்று வியக்க வைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இவ்வாறு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிதாக 500, 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க கடந்த 2 நிதி ஆண்டுகளில் ரூ.12 ஆயிரத்து 877 கோடி செலவாகி இருக்கிறது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தவுடன் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அன்றாட செலவுக்கு ரூபாய் இல்லாமல், ஏ.டி.எம். வாசல்களிலும், வங்கிகளின் வாசல்களிலும், தபால் அலுவலக வாசல்களிலும் நீண்ட வரிசையில் நின்றனர். கூலி வேலை செய்யும் ஏழை தொழிலாளர்களுக்கு தினக்கூலி கொடுக்க கையில் பணம் இல்லாமல் அவர்கள் வேலைவாய்ப்பு பறிபோனது. ஏராளமான சிறு–குறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டது. ஒட்டுமொத்த பொருளாதாரமும் 1.5 சதவீதம் குறைந்ததால், ஆண்டுக்கு ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டுகிறார். ஆனால் மத்திய அரசாங்க தரப்பில் கூறப்படுவதோ, இவ்வாறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு கருப்பு பணத்தை முழுமையாக ஒழித்துவிட்டது, தீவிரவாதிகளுக்கு பணப்பட்டுவாடா கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது, டிஜிட்டல் பரிமாற்ற முறை வெகுவேகமாக வளர்ந்துள்ளது, புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பல பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால், கள்ளநோட்டு அச்சடிப்பது என்பது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. போலி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, வரி வரம்புகள் விரிவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பில் பயன்கள் இருந்தாலும், பாதிப்புகள்தான் அதிகமாக இருந்தது. நோக்கம் நல்ல நோக்கம்தான். ஆனால் செயல்படுத்தியதை இன்னும் முன்னெச்சரிக்கையோடு செய்திருக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.


Next Story