மகிழ்ச்சியூட்டும் பொருளாதார வளர்ச்சி


மகிழ்ச்சியூட்டும் பொருளாதார வளர்ச்சி
x
தினத்தந்தி 3 Sep 2018 9:30 PM GMT (Updated: 2018-09-03T22:34:14+05:30)

பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரியால் கடந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது.

இப்போதும் அபரிமிதமான பெட்ரோல்–டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பின் சரிவு இவற்றால் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற அச்சம் எல்லோருடைய மனதிலும் வெகுவாக எழுந்தது. ஆனால், நாடு பின்தங்கிவிடவில்லை. பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை மத்திய அரசாங்க புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் இந்த நிதியாண்டில் அதாவது, 2018–19–ம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை) 8.2 சதவீதமாக குதிரை பாய்ச்சலில் முன்னேறியுள்ளது. இதேகாலக்கட்டத்தில் கடந்த ஆண்டு இந்தியா அடைந்த ஜி.டி.பி. என்று கூறப்படும் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி 5.6 சதவீதம்தான். இப்போது சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதம்தான். சரக்கு சேவைவரி போன்ற கட்டமைப்பு சீர்திருத்தங்கள் பலனை கொடுக்க தொடங்கிவிட்டது என்று மத்திய நிதித்துறை செயலாளர் கூறுகிறார். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உயருவதற்கு காரணம் விவசாயம் மற்றும் அதுதொடர்பான தொழில்களின் வளர்ச்சி கடந்த ஆண்டு 3 சதவீதமாக இருந்த நிலையில், இந்த காலாண்டில் 5.3 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதுபோல, உற்பத்தித்துறையில் 13.5 சதவீத உயர்வை கண்டுள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தித்துறையில் இதே காலகட்டத்தில் –1.8 சதவீத வளர்ச்சி விகிதம்தான் இருந்தது. உற்பத்தித்துறையும், விவசாயமும் வளர்ந்துள்ளதால், பொருளாதார வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்துள்ளது. இந்த இருதுறைகளும் வளர்ந்தால், நிச்சயமாக வேலைவாய்ப்பும் பெருகும். இதுபோல, கட்டுமானத்தொழிலும் கடந்த ஆண்டு முழுமையும் கணக்கிட்டால் நல்ல வளர்ச்சிதான். கட்டுமான தொழில் 8.7 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 11.5 சதவீதம் வளர்ச்சி அடைந்தநிலையில், இப்போது 8.7 சதவீதமாக குறைந்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த காலாண்டில் ரூ.33.74 லட்சம் கோடியாகும். கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ரூ.31.18 லட்சம் கோடிதான்.

இந்த முதலாம் காலாண்டில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு காரணம், அரசின் செலவு குறைந்து, தனியார் நிறுவனங்கள் முதலீடு அதிகரித்துள்ளதுதான். தனியார் நிறுவனங்கள் ஏராளமாக முதலீடு செய்து, புதிய புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு, ஏற்கனவே இருந்த தொழில்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு நல்ல நிலையை அடைந்தால்தான் வேலைவாய்ப்பு பெருகும். ஆனால், இந்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு முதல் காலாண்டு வளர்ச்சி விகிதமான 5.6 சதவீதத்தை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்பட்டதால் இவ்வளவு உயர்வு காணப்படுகிறது. இந்த நிதியாண்டில் வளர்ச்சி விகிதமான 7.5 சதவீத இலக்கை அடையவேண்டுமென்றால், இதே வளர்ச்சி விகிதம் நிலைநிறுத்தப்பட்டு, இதேபோல எல்லாத்துறைகளிலும் வேகமான முன்னேற்றத்தைக்காண தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தொடர்ந்து விவசாயம், சுரங்கதொழில், உற்பத்தி, மின்சாரம், கட்டுமான தொழில், வர்த்தகம், ஓட்டல்கள், நிதி சேவைகள், பொதுநிர்வாகம், ஜி.வி.ஏ. என்று கூறப்படும் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் மற்றும் பொருட்களின் உற்பத்தி ஆகியவற்றில் மத்திய அரசும், மாநில அரசும் ஒருமித்த முயற்சி வேகத்தை எடுக்கவேண்டும்.

Next Story