தொடங்கியது மேகதாது அணை முயற்சி


தொடங்கியது  மேகதாது அணை  முயற்சி
x
தினத்தந்தி 11 Sep 2018 10:30 PM GMT (Updated: 2018-09-11T22:46:34+05:30)

‘மழை விட்டாலும், தூறல் விடவில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல, காலம்காலமாக இருந்துவரும் காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைக்கப்பட்டுவிட்டது.

‘மழை விட்டாலும், தூறல் விடவில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல, காலம்காலமாக இருந்துவரும் காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைக்கப்பட்டுவிட்டது. இனி எந்த பிரச்சினையும் தலையெடுக்காது என்று தமிழக மக்கள், குறிப்பாக விவசாயிகள் உறுதியாக நம்பிக்கொண்டிருந்த நேரத்தில், கடந்த பல ஆண்டுகளாக கர்நாடக அரசு முயற்சி எடுத்துக்கொண்டிருந்த மேகதாது பிரச்சினை இப்போது மீண்டும் உயிர்பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் ரூ.5 ஆயிரத்து 912 கோடி செலவில் ராமநகர் மாவட்டம், கனகபுரா என்ற ஊருக்கு அருகில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ஒரு அணையைக் கட்ட முடிவு செய்யப்பட்டது.

மேகதாது என்ற கன்னட சொல்லுக்கு தமிழில் ஆடுதாண்டி என்று ஒரு பொருள் உண்டு. அதாவது ஒரு ஆடு தாண்டும் அளவுக்கு அகலமுள்ள குறுகலான இடம்வழியாகத்தான் காவிரி ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் அதன்குறுக்கே ஒரு அணையைக்கட்ட எடுக்கப்பட்ட முயற்சிதான் இது. இந்த அணை கட்டுவதன் மூலம் 66 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைப்பதோடு மட்டுமல்லாமல், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் புனல் மின்சார நிலையம் தொடங்கவும் கர்நாடக அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. மேகதாது அணையைக் கட்டும் இந்த முயற்சி இப்போது புதிதாக தொடங்கவில்லை. 37 ஆண்டுகளுக்கு முன்பு 1981–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி கர்நாடக முதல்–மந்திரி குண்டுராவ் இதுதொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘‘மேகதாதுவில் புதிதாக ஒரு அணை கட்டப்போகிறேன், கன்னட மக்களுக்கு எனது புத்தாண்டு பரிசு இது’’ என்று அறிவித்தார். அப்போது ஜனாதிபதியாக இருந்த சஞ்சீவரெட்டியை அழைத்து, பிப்ரவரி மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்போவதாகவும் கூறினார். பழ.நெடுமாறன் இதை உடனே எம்.ஜி.ஆர். கவனத்துக்கு கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர். உடனடியாக அனைத்துகட்சி கூட்டத்தைக்கூட்டி, பழ.நெடுமாறனையே மேகதாது அணைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டுவரச்செய்து நிறைவேற்றினார். தொடர்ந்து சட்டசபையில் பழ.நெடுமாறனை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர செய்து, அந்த தீர்மானத்தையும் அரசாங்கத்தின் ஆதரவோடு நிறைவேற்றினார். மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்ட ஜனாதிபதி கர்நாடகம் செல்லக்கூடாது என்று ஒரு கடிதமும் எழுதினார். இதை ஏற்று, ஜனாதிபதி கர்நாடகம் செல்லவில்லை. அதிலிருந்து அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

தற்போது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பிவிட்டது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த திட்டம் தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மிகவிளக்கமாக கூறியிருக்கிறார். மேகதாது அணை கட்டப்பட்டால், நிச்சயமாக மேட்டூர் அணைக்கு வரவேண்டிய தண்ணீர் வருவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, கடிதத்தோடு விட்டுவிடாமல், உடனடியாக தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆரைப்போல, சட்டசபையைக் கூட்டி மேகதாது அணையைக் கட்ட அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும். தேவைப்பட்டால் சட்டசபை தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு பிரதமரை சந்தித்து முளையிலேயே இந்த முயற்சியை கிள்ளிவிடவேண்டும்.

Next Story