கல்விக்கடன் தரும் ‘நெருக்கடி’


கல்விக்கடன் தரும் ‘நெருக்கடி’
x
தினத்தந்தி 12 Sep 2018 10:30 PM GMT (Updated: 12 Sep 2018 5:13 PM GMT)

அமெரிக்காவின் நிர்மாணத்தந்தை என்று அழைக்கப்படும் பெஞ்சமின் பிராங்ளின் கல்விபற்றி 18–ம் நூற்றாண்டிலேயே, ‘‘அறிவாற்றலுக்காக செய்யப்படும் முதலீடு, நல்ல வட்டியை தரும்’’ என்று ஒரு பழமொழி கூறியிருக்கிறார்.

மெரிக்காவின் நிர்மாணத்தந்தை என்று அழைக்கப்படும் பெஞ்சமின் பிராங்ளின் கல்விபற்றி 18–ம் நூற்றாண்டிலேயே, ‘‘அறிவாற்றலுக்காக செய்யப்படும் முதலீடு, நல்ல வட்டியை தரும்’’ என்று ஒரு பழமொழி கூறியிருக்கிறார். ஆனால், அறிவாற்றலான கல்விக்காக வங்கியில் வாங்கியுள்ள கல்விக்கடனுக்காக, வேலைகிடைக்கும் முன்பே வட்டியைக்கேட்டு நச்சரிக்கும் நிலைமை இப்போது நாட்டில் மாணவர்களுக்கு பெரியநெருக்கடியை தருகிறது. அருந்தமிழ் புலமை வாய்ந்த அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட நறுந்தொகையில்,

‘‘கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே’’  என்று கூறப்பட்டுள்ளது. 

பிச்சை எடுத்தாலும் கல்வி கற்பது நல்லது என்பது அதன் பொருள். ஆனால், இந்தக்காலத்தில் உயர்கல்விக்காக மாணவர்கள் யாரிடமும் பிச்சைகேட்க வேண்டியதில்லை. வங்கிகளில் கடன் வாங்கி படிக்கமுடியும். கல்லூரி கல்விக்கு வங்கிகளில் ரூ.4 லட்சம்வரை பெறும் கடன்களுக்கு எந்தவிதமான அடமானமும் தேவையில்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.7½ லட்சம்வரை வாங்கும் கடன்களுக்கு யாராவது ஒருவர் ஜாமீன் கொடுக்கவேண்டும். ரூ.7½ லட்சத்திற்குமேல் வாங்கும் கல்விக்கடன்களுக்கு அடமானம் தேவை. 

இந்த கல்விக்கடன்களை அதிகமாக பொறியியல் படிப்பு படிப்பவர்கள்தான் வங்கிகளில் வாங்கியிருக்கிறார்கள். இப்போது வேலைவாய்ப்பு உடனடியாக கிடைப்பதில்லை. ஆனால் படித்து முடித்தவுடன் ஓராண்டு முடிந்தபிறகோ, அல்லது வேலை கிடைத்தவுடனோ கல்விக்கடனை கட்டும் தவணை தொடங்கிவிடுகிறது. இப்போதெல்லாம் பெரும்பாலான மாணவர்களுக்கு உடனடியாகவோ, ஓராண்டுக்குள்ளோ வேலைகிடைப்பதில்லை. மேலும் கல்விக்கடன்களுக்கு 8.6 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 11 சதவீதம்வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளில் மாதத்தவணைகளில் கல்விக்கடனை திரும்ப செலுத்தலாம். கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 8 லட்சத்து 98 ஆயிரத்து 545 மாணவர்கள், ரூ.14,734 கோடி கல்விக்கடனாக பெற்றிருக்கிறார்கள். நிறைய மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலைகிடைக்காத காரணத்தால் அவர்களால் கல்விக்கடனை திரும்பக்கட்டமுடியாத நிலையில், வாராக்கடன்களின் அளவும் உயர்ந்துகொண்டே போகிறது. 

கடந்த ஆண்டு கணக்குப்படி ரூ.6,434 கோடி வாராக்கடனாக கருதப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 3 லட்சத்து 44 ஆயிரம் மாணவர்கள் கல்விக்கடனை கட்டமுடியாமல் கடன்பாக்கி வைத்திருக்கிறார்கள். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வழங்கிய கணக்கின்படி, கடந்த சில ஆண்டுகளாக 33 முதல் 34 சதவீதம்வரை உள்ள மாணவர்களுக்கே கல்லூரியில் படித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைத்துவிடுகிறது. தனியார் கல்லூரிகளில் 25 லட்சம் மாணவர்கள் சேர்ந்து படிக்கிறார்கள். இதில் 5 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்கிறது. இது ஒரு சாதாரண பிரச்சினை இல்லை. ஒருபக்கம் மாணவர்களின் வேலையில்லா திண்டாட்டம். அதேநேரத்தில் ஓராண்டில் கடனை திருப்பிக் கட்டவேண்டும் என்ற நிர்ப்பந்தம். இதையெல்லாம் மாணவர்களை வேறுபாதைக்கு இழுத்துச்செல்ல வழி வகுத்துவிடுகிறது. எனவே, மத்திய–மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எல்லாம் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான முயற்சிகளில் அதிக முனைப்புகாட்டவேண்டும். வங்கிகளை பொருத்தமட்டில், படித்து முடித்தவுடன் 6 மாதங்களில் கடனை திருப்பிக்கட்டு, ஓராண்டில் கடனை திருப்பிக்கட்டு என்று நெருக்கடி கொடுப்பதற்கு பதிலாக, வேலை கிடைத்தவுடன் திரும்பக்கட்டலாம் என்ற வகையில் விதிகளை தளர்த்தவேண்டும். கல்விக்காக வாங்கிய கடனுக்கு வட்டியையும் இன்னும் கொஞ்சம் குறைக்கலாம்.

Next Story