குழப்பம் தீரவேண்டும்


குழப்பம் தீரவேண்டும்
x
தினத்தந்தி 17 Sep 2018 10:00 PM GMT (Updated: 17 Sep 2018 6:03 PM GMT)

பிளஸ்-2 தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் ஒவ்வொருவரின் எதிர்காலத்தையுமே நிர்ணயிக்கிறது.

கோத்தாரி கல்விக்குழு பரிந்துரையை ஏற்று, தமிழக அரசு 1978-1979 முதல் 10-வது வகுப்புவரை உயர்நிலைக்கல்வி என்றும், 11, 12-ம் வகுப்புகள் மேல்நிலைக்கல்வி என்றும், அதற்குமேல் கல்லூரிகளில் 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு என்றும் முறையை கொண்டுவந்தது. 1980-ல் முதல்முறையாக பிளஸ்-2 தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரம்தான். ஆனால், கடந்த ஆண்டு 8 லட்சத்து 60 ஆயிரத்து 434 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் பங்கெடுத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டுக்கு முன்பு வரை 11-ம் வகுப்பு தேர்வு மாவட்ட அளவில் நடந்தது. பிளஸ்-2 தேர்வுதான் பொதுத்தேர்வாக நடந்தது. இதனால் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் 11-ம் வகுப்பின்போதே 12-வது வகுப்பிற்கான பாடங்களை நடத்தினார்கள். மாணவர்களும் 11-ம் வகுப்பு பாடத்திற்கு பொதுத்தேர்வு இல்லை என்பதால், 12-ம் வகுப்பு பாடத்தை மட்டும் படித்தார்கள். ஆனால் பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு 11-வது வகுப்பு பாடத்தின் அடிப்படையிலேயே பாடத்திட்டங்கள் இருந்ததால் நிறையபேர் முதலாம் ஆண்டு தேர்வு பெறமுடியாமல் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. போட்டித் தேர்வுகளில் கூட முதலாம் ஆண்டு பாடத்தில் இருந்துதான் 50 சதவீத வினாக்கள் கேட்கப்படுகின்றன. எனவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையிலான மூத்த கல்வியாளர்கள் அடங்கிய வல்லுனர்களின் குழுவின் பரிந்துரைக்கேற்ப, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு என 2 வகுப்புகளுக்கும் மாநில அளவில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இரு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் கூட்டல் மதிப்பெண் கட்டாயம் என்றும், முதலாம் ஆண்டில் சிலபாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள் 12-ம் வகுப்பு படிக்கும்போதே அந்த பாடங்களுக்காக ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் உடனடி சிறப்புத்தேர்விலோ, அல்லது பிளஸ்-2 இறுதி தேர்வின்போதோ தேர்வு எழுதலாம் என்று இருந்தது.

ஓராண்டுதான் இந்தமுறை நடைமுறையில் இருந்தது. இப்போது திடீரென்று தமிழக அரசு, 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்கும். ஆனால் உயர்கல்வியில் சேர பிளஸ்-2 பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே போதும் என்று அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக 10, 11, 12-ம் வகுப்பு என்று தொடர்ச்சியாக 3 ஆண்டுகளும் பொதுத்தேர்வு எழுதவேண்டிய கட்டாயம் இருப்பதால் மாணவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது புதியமுறையிலும் சில குழப்பங்கள் நிலவுகின்றன. ஏற்கனவே எடுத்தமுடிவு கல்வியாளர்கள் அடங்கிய வல்லுனர்கள் எடுத்த முடிவு. இப்போது அரசு அப்படி எந்த வல்லுனர்கள் குழு அறிக்கையையும் பெறவில்லை. மேலும் 11-வது வகுப்பிலும் பொதுத்தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விலும் வெற்றி பெற்றவர்களால் மட்டுமே உயர்கல்விக்கு செல்ல முடியும். உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே எடுக்கப்படும் என்று ஒரு பக்கம் கூறிவிட்டு, மற்றொரு பக்கம் 11-வது வகுப்பு பொதுதேர்விலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களே, உயர்கல்வி பயில தகுதியானவர்கள் என்று ஆணைப்பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆக, இதில் ஒரு தெளிவான கண்ணோட்டம் வரவேண்டுமென்றால், கடந்த ஆண்டைப்போல கல்வியாளர்கள் கொண்ட ஒருகுழுவை அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுப்பதே சாலச்சிறந்ததாகும்.

Next Story