குறிப்பிட்ட காலக்கெடு, நிச்சயம் தேவை


குறிப்பிட்ட  காலக்கெடு, நிச்சயம்  தேவை
x
தினத்தந்தி 18 Sep 2018 10:30 PM GMT (Updated: 18 Sep 2018 1:20 PM GMT)

எந்தவொரு பிரச்சினை என்றாலும் அரசு அதை அமைதிப்படுத்தவேண்டும், ஆறப்போடவேண்டும் அல்லது தாமதப்படுத்தவேண்டும் என்று நினைத்தால், உடனேயே ஒரு கமி‌ஷனை போடுவது என்பது காலம்காலமாக கூறப்படும் ஒன்றாகும்.

ந்தவொரு பிரச்சினை என்றாலும் அரசு அதை அமைதிப்படுத்தவேண்டும், ஆறப்போடவேண்டும் அல்லது தாமதப்படுத்தவேண்டும் என்று நினைத்தால், உடனேயே ஒரு கமி‌ஷனை போடுவது என்பது காலம்காலமாக கூறப்படும் ஒன்றாகும். இந்த கமி‌ஷன்கள் எல்லாம் நியமிக்கப்படும்போது, 3 மாதத்தில் அறிக்கை தரவேண்டும், 6 மாதங்களில் அறிக்கை தரவேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு காலக்கெடு முடியும்போதும், அதை நீட்டிக்க உத்தரவு போட்டு கமி‌ஷனின் காலம் ஆண்டுக்கணக்கில் போய்க்கொண்டே இருக்கும். இப்போது அதற்கு ஒரு முடிவுகட்ட உயர்நீதிமன்றம் ஒரு தெளிவான முடிவை எடுத்துள்ளது. 

கடந்த 2011–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றவுடன், சென்னை அண்ணாசாலையில் தி.மு.க. தலைமையிலான அரசு கட்டிய புதிய தலைமை செயலக கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றிவிட்டு, அந்த கட்டிடம் கட்டியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றுகூறி, ஓய்வுபெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் 22–6–2011 அன்று விசாரணை கமி‌ஷன் அமைத்தது. 2015–ல் இந்த கமி‌ஷனை எதிர்த்தும், கமி‌ஷன் அனுப்பிய சம்மனை எதிர்த்தும், மறைந்த கலைஞர் கருணாநிதி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த ஆணையத்தின் செயல்பாடுக்கு தடைவிதித்து 2015–ல் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிலநாட்களுக்கு முன்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விசாரணை கமி‌ஷன்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். வெறும் கண்துடைப்புக்காகவே விசாரணை கமி‌ஷன்கள் அமைக்கப்படுகிறது என்று தெரிவித்துவிட்டு, இதுவரை அமைக்கப்பட்ட விசாரணை கமி‌ஷன்கள், அவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, விசாரணை கமி‌ஷன்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சொன்னார். 

இதைத்தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.ராஜேசுவரன், ஏ.ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் கமி‌ஷன்கள் நியமிக்கப்பட்ட தேதி, அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்ட விவரம், பணியாளர் எண்ணிக்கை, ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பட்டியலை அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 2015–ல் உயர்நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட ஒரு விசாரணை கமி‌ஷனுக்கு அரசு ஏன் தொடர்ந்து நிதி ஒதுக்கிவருகிறது. அரசும் இந்த விசாரணை கமி‌ஷனை கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கூறி, உடனடியாக விசாரணை கமி‌ஷனை சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார். இதுமட்டுமல்லாமல், தேவையில்லை என்று கருதும் விசாரணை கமி‌ஷன்களை கலைக்கவேண்டும் அல்லது அந்த கமி‌ஷன்கள் தாக்கல் செய்யவேண்டிய அறிக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து நீதிபதி ரெகுபதி விசாரணை ஆணைய பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். எதிர்காலத்திலும் விசாரணை கமி‌ஷன்களை அமைப்பது தேவையா? என்று நன்கு உறுதி செய்துவிட்டே அமைப்பதோடு மட்டுமல்லாமல், சமீபத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிட்டு, 4 மாதங்களுக்குள் புலன் விசாரணையை முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டதுபோல, விசாரணை கமி‌ஷன்களும் முதலில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். எந்த காரணங்களை கொண்டும் காலக்கெடுவை நீட்டிக்கக்கூடாது.

Next Story