மணல் இறக்குமதி போதாது


மணல் இறக்குமதி போதாது
x
தினத்தந்தி 20 Sep 2018 10:30 PM GMT (Updated: 20 Sep 2018 12:26 PM GMT)

தமிழ்நாட்டில் ஆறுகளிலுள்ள மணலை ஒட்டுமொத்தமாக சுரண்டி, இனிமேல் சுரண்டுவதற்கு மணலே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

மிழ்நாட்டில் ஆறுகளிலுள்ள மணலை ஒட்டுமொத்தமாக சுரண்டி, இனிமேல் சுரண்டுவதற்கு மணலே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். அண்டை மாநிலங்களில் எல்லாம் ஆற்று மணல் எடுக்க தடைவிதித்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மணல் கொள்ளையர்களால் பெரும்பாலான ஆறுகள் கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. ஆற்றுபடுகைகளில் 3 அடி ஆழத்திற்கு மட்டும் மணல் எடுக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான ஆறுகளில் 25 அடி முதல் 30 அடி ஆழம்வரை மணலை தோண்டி எடுத்து, மணலே இல்லாத வகையில் ஆக்கிவிட்டார்கள். 

ஆற்று வளத்தை காக்க மணல் வளம் தேவை என்று எல்லோரும் கோரிக்கை விட்டநிலையில், கடந்த ஆண்டு மே மாதம் மதுரையில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘‘இன்னும் 3 ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளுவது முற்றிலும் நிறுத்தப்படும். மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டால் நிலத்தடிநீர் உயரும்’’ என்று அறிவித்தார். முதல்–அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டு 5 மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் 1½ ஆண்டுகள்தானே இருக்கிறது. அதற்குள் எப்படி ஆற்றில் மணல் அள்ளுவதை முழுமையாக நிறுத்தப்போகிறார் என்று எல்லோரும் ஏங்கிக்கொண்டிருந்த நிலையில், சொன்னதை நிச்சயம் செய்யப்போகிறார் என்ற வகையில் மலேசியாவில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு கப்பல் வருகிறது. 

வெளிநாட்டிலிருந்து 30 லட்சம் டன் மணலை ஏறத்தாழ ரூ.540 கோடி செலவில் தமிழக அரசு இறக்குமதி செய்வதற்காக விடப்பட்ட உலகளாவிய டெண்டரை ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் எடுத்துள்ளது. மாதத்திற்கு 5 லட்சம் டன் என்ற விகிதத்தில், 6 மாதங்களில் 30 லட்சம் டன் மணலை மலேசியாவிலிருந்து இந்த நிறுவனம் இறக்குமதி செய்கிறது. சென்னை காட்டுப்பள்ளி, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் இறக்குமதி செய்து தமிழக அரசிடம் அந்த மணலை ஒப்படைக்கவேண்டும். அரசுதான் அதை எடுத்து விற்பனை செய்யும். தரமான மணலாக இருக்கிறதா? என்று ஆய்வுசெய்த பிறகுதான் விற்பதற்கு அனுமதிக்கப்படும் என்று முதல்–அமைச்சர் கூறியிருக்கிறார். மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்யப்படுவது ஒரு நல்லதொடக்கம். ஆனால், தமிழ்நாட்டில் தினமும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் லோடுவரை மணல் தேவைப்படுகிற நிலையில், இந்த 5 லட்சம் டன் மணல் நிச்சயம்போதாது. மலேசியா போன்று இன்னும் பல நாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே, வெளிநாடுகளிலிருந்து இன்னும் அதிகமாக மணலை இறக்குமதி செய்ய தனியாரை ஊக்குவிக்கும் வகையில் ‘டெண்டர்’ கோரப்படவேண்டும். நமது தேவையை பூர்த்தி செய்யவேண்டுமென்றால், இப்போது ஏறத்தாழ 12 ஆயிரம் லோடு ‘எம்சாண்ட்’ சப்ளைபோக, மீதம் எவ்வளவு தேவையோ அந்தளவிற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய இன்னும் தீவிரமான நடவடிக்கை எடுக்கவேண்டும். வெளிநாடுகளிலிருந்து மட்டுமல்லாமல், நம்நாட்டிலேயே பிற மாநிலங்களிலிருந்து தரமான மணலை இறக்குமதி செய்யமுடியுமா? என்பதையும் அரசு தீவிரமாக ஆராயவேண்டும். சொன்ன வாக்கை காப்பாற்ற இன்னும் 1½ ஆண்டுகள்தான் இருக்கிறது என்பதை கருத்தில்கொண்டு, இப்போதே கூடுதலாக பல நாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடவேண்டும்.

Next Story