நிரபராதிகள் துன்பத்துக்கு என்ன பதில்?


நிரபராதிகள் துன்பத்துக்கு என்ன பதில்?
x
தினத்தந்தி 21 Sep 2018 10:30 PM GMT (Updated: 2018-09-21T18:56:03+05:30)

கடந்த 24 ஆண்டுகளாக நீண்ட சட்டபோராட்டத்தில் ஈடுபட்டு, தனது 76–வது வயதில் நல்ல தீர்ப்பை பெற்றுள்ளார் விஞ்ஞானி நம்பி நாராயணன்.

டந்த 24 ஆண்டுகளாக நீண்ட சட்டபோராட்டத்தில் ஈடுபட்டு, தனது 76–வது வயதில் நல்ல தீர்ப்பை பெற்றுள்ளார் விஞ்ஞானி நம்பி நாராயணன். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ நிறுவனத்தில் ‘கிரையோஜெனிக் என்ஜின்’ தொடர்பான ஆராய்ச்சியில் திட்ட இயக்குனராக திருவனந்தபுரத்தில் பணியாற்றியவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். அவருக்கு அடுத்த பதவியில் இருந்தவர் 

கே.சந்திரசேகர். இந்தநிலையில், ‘கிரையோஜெனிக்’ ராக்கெட் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிறுவனத்துக்கு விற்றதாக நம்பி நாராயணன், சந்திரசேகர், 2 மாலத்தீவு பெண்கள் உள்பட 6 பேரை 1994–ம் ஆண்டு கேரள போலீஸ் கைது செய்தது. அடுத்த சிலநாட்களில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

சி.பி.ஐ. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கூறப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணன் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. கேரள காவல்துறை உயர்அதிகாரிகள் சிலரால் ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில், அனைவரையும் 1998–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்து, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து சட்டபோராட்டம் நீடித்தது. 

தனக்கு எதிராக பொய்வழக்கு தொடுத்து, மனஉளைச்சலை ஏற்படுத்தி துன்புறுத்திய கேரள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் நம்பி நாராயணன் தொடர்ந்த வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து கடந்த 14–ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில், விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டது அவசியமற்றது, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கொடூரமான முறையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் கேரள அரசு வழங்கவேண்டும். ‘கேரள போலீசார் எதற்காக இந்த வழக்கை தொடர்ந்தனர்? என்ற பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று தீர்ப்பில் உத்தரவிடப் பட்டுள்ளது. அவருடன் சேர்த்து குற்றஞ்சாட்டப்பட்ட விஞ்ஞானி சந்திரசேகர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் கோமா நிலைக்குசென்று 16–ந்தேதி காலமாகி விட்டார். விஞ்ஞானி நம்பி நாராயணனை இப்போது நிரபராதி என்று சொல்லிவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்ட நாளில் இருந்து கடந்த 24 ஆண்டுகளாக அவர் அடைந்த துன்பத்துக்கும், போலீஸ் காவலிலும், சிறையிலுமாக 50 நாட்கள் அவதிப்பட்ட நிலைக்கும் யார் பதில் சொல்வது?. ‘கிரையோஜெனிக்’ தொழில் நுட்பத்தில் அவரது கண்டுபிடிப்புகள் நாட்டுக்கு கிடைக்காமல் போய்விட்டது. நம்பி நாராயணன் வழக்குபோல பல வழக்குகளில் பல்வேறு   அப்பாவியான பல அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது பல்வேறு வகையான வழக்குகள் தொடரப்பட்டு, இறுதியில் பல வழக்குகளில் அவர்கள் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் அப்பழுக்கற்ற அந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சமுதாயத்தின் ஏளன பார்வையில் சிக்கி அல்லல்படும் நிலையிலும், பாதிக்கப்பட்டதற்கு யார் பதில் சொல்வது?. இந்த கேள்விகளுக்கு சமுதாயம் நிச்சயமாக விடை தந்தாக வேண்டும். 

Next Story