பாகிஸ்தானின் கபட நாடகம்


பாகிஸ்தானின் கபட நாடகம்
x
தினத்தந்தி 23 Sep 2018 10:30 PM GMT (Updated: 23 Sep 2018 11:49 AM GMT)

காஷ்மீரில் அமைதி நிலவக்கூடாது என்பதையே தன் முழு முயற்சியாகக் கொண்டு பாகிஸ்தான் செயல்படுகிறது.

காஷ்மீரில் அமைதி நிலவக்கூடாது என்பதையே தன் முழு முயற்சியாகக் கொண்டு பாகிஸ்தான் செயல்படுகிறது. பாகிஸ்தானில் என்னதான் தேர்தல் நடந்து ஜனநாயக முறைப்படி ஆட்சி அமைக்கப்பட்டாலும், உண்மையிலேயே அங்கு ஆட்சி நடத்துவது ராணுவம்தான். கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பதவியேற்றார். இவருக்கு பாகிஸ்தான் ராணுவம் முழு ஆதரவு அளித்து வருகிறது. 

இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு, இம்ரான்கான் கடந்த 17–ந் தேதி ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா.சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் இந்திய வெளிவிவகாரங்கள் துறை மந்திரி சுஷ்மா சுவராஜும், பாகிஸ்தான் வெளிவிவகாரங்கள் துறை மந்திரி மகதூம் ஷா முகமது குரேஷியும் சந்தித்து பேச வேண்டும்’ என்று தன் விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதேநேரம் இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவரை படுகொலை செய்து அவரது உடல் சிதைக்கப்பட்டநிலையில், பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டாலும் பேச்சுவார்த்தைக்கு இந்தியா சம்மதம் தெரிவித்தது. இரு வெளிவிவகாரங்கள் துறை மந்திரியும் சந்திக்கலாம் என்று சொல்லி ஒரு நாளுக்குள், பாகிஸ்தானின் தீவிர ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு, காஷ்மீரில் சிறப்பு போலீஸ்படை அதிகாரி பிர்தோஸ் அகமது, குல்வந்த் சிங் மற்றும் போலீஸ்காரர் நிசார் அகமது ஆகியோரை கடத்திச் சென்று சுட்டுக்கொன்று இருக்கிறது. 

அதேபோல, இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானி என்பவரை கவுரவப்படுத்தும் வகையில் பாகிஸ்தானில் சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தானோடு எந்த பேச்சுவார்த்தை நடத்துவதும் அர்த்தமில்லாதது. எனவே, அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துவிட்டது. நிச்சயமாக இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இந்த ஆண்டு மட்டும் இதுவரையில் இந்திய எல்லைப்பகுதியில் 13 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இதே காலக்கட்டத்தில் காஷ்மீர் மாநில போலீஸ்படையை சேர்ந்த 20 போலீஸ்காரர்கள், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் சிந்திய ரத்தத்துக்கு பாகிஸ்தான் பதில் சொல்லவேண்டிய நிலையில், பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை. உண்மையிலேயே இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவவேண்டும் என்று விரும்பினால் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் ஒரு கையில் துப்பாக்கியை வைத்து காஷ்மீரில் அமைதிக்குலைவை ஏற்படுத்த முயற்சி செய்துகொண்டு, மறு கையை நட்புறவுக்காக நீட்டுவதில் பாகிஸ்தானின் கபட நாடகம் தெரிகிறது. இம்ரான்கானின் உண்மையான முகம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. உடனடியாக இந்திய அரசாங்கம் தன் முழுபலத்தை பயன்படுத்தி, காஷ்மீரில் பயங்கரவாதத்தை அடியோடு நசுக்க வேண்டும். காஷ்மீர் போலீசில் 30 ஆயிரம் உள்ளூர்வாசிகள் சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இப்போது ஒரு போலீஸ்காரருக்கு அளிக்கப்படும் பயிற்சி போன்று அளிக்கப்படுவதில்லை. இந்தநிலையை தவிர்த்து, அவர்களுக்கு முழுமையான பயிற்சியை அளித்து, பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை அடியோடு நொறுக்க வேண்டும். ஒருபக்கம் இந்த நடவடிக்கையை எடுத்தாலும், மறுபக்கம் ஐ.நா. சபையின் கதவுகளை தட்டி, பாகிஸ்தானின் கொடூரச்செயலை உலகநாடுகள் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story