அரசியலில் தூய்மை மக்களின் கையில்


அரசியலில் தூய்மை மக்களின் கையில்
x
தினத்தந்தி 26 Sep 2018 10:30 PM GMT (Updated: 2018-09-26T22:42:32+05:30)

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அக்டோபர் 2–ந்தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில், அவர் அளித்துக்கொண்டிருக்கும் தீர்ப்புகள் சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளாக விளங்குகிறது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அக்டோபர் 2–ந்தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில், அவர் அளித்துக்கொண்டிருக்கும் தீர்ப்புகள் சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளாக விளங்குகிறது. குற்றப்பின்னணி உள்ளவர்கள், அதாவது கிரிமினல் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்ட நிலையில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சு விசாரித்து, 100 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வெளியிட்டுள்ளது. ‘‘குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிற்க நீதிமன்றம் தடைவிதிக்கமுடியாது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாலேயே அவர்களை தகுதிநீக்கம் செய்வதற்குரிய நிலையில் நாங்கள் இல்லை. ஆனால் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தன்மீது ஏதாவது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா? என்பதை வேட்புமனுவில் பெரிய எழுத்தில் எழுதிக்கொடுக்கவேண்டும். எந்தக்கட்சியில் வேட்பாளராக போட்டியிடுகிறாரோ, அந்தக்கட்சிக்கும் இதுக்குறித்த தகவலை எழுதிக்கொடுக்கவேண்டும். அந்தக்கட்சியும் வேட்பாளரின் மீது நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்குகளை தனது இணையதளத்தில் வெளியிடுவதோடு இல்லாமல், உள்ளூர் பத்திரிகைகளிலும், டெலிவி‌ஷன்களிலும் 3 முறை விளம்பரம் செய்யவேண்டும்’’ என்று தீர்ப்பளித்துள்ளது.

அரசியலில் தூய்மையை கொண்டு வர ஒரு கடுமையான சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றவேண்டும். குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்வதாலே மட்டும் அரசியல் குற்றமயமாகிவிடுவதை தடுத்து நிறுத்திவிடமுடியாது. அரசியல் கட்சிகளை தூய்மைப்படுத்துவதிலிருந்து அது தொடங்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் கற்பழிப்பு, கொலை, கடத்தல் போன்ற கொடூர குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குள்ளான தலைவர்களை நீக்க வேண்டும். குற்றவாளிகள் நாடாளுமன்ற தேர்தலிலோ, சட்டசபை தேர்தலிலோ நிற்பதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது. தேசம் அப்படிப்பட்ட ஒரு சட்டத்தை வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறப்பட்ட இந்தத்தீர்ப்பு வரவேற்புக்குரியது. அரசியல்வாதிகள் என்றாலும் சரி, அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் என்றாலும் சரி, அவர்கள் மீது குற்றம் சாட்டுவதாலேயே குற்றவாளியாக ஆகிவிட முடியாது. தனிப்பட்ட பகை காரணமாக பொத்தாம் போக்கில் எவ்வளவோ குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அரசியலில் ஒரு கட்சி ஆளும் கட்சியாக பொறுப்பேற்றபிறகு, அதுவரை ஆளும்கட்சியாக இருந்து எதிர்க்கட்சியாக மாறியுள்ள அரசியல் கட்சிகள் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை கூறுவது நடைமுறையில் சர்வசாதாரணமாகிவிட்டது. 

இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட உடனேயே அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிப்பயணம் தொடங்கிவிடுகிறது. இது உடனடியாக முடிந்துவிடுவதில்லை. பல வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நீடித்துக்கொண்டேபோகிறது. சில வழக்குகள் தொடரப்பட்டவர்களாலேயே வாபஸ் பெறப்படுகிறது. பல வழக்குகள் இறுதியில் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்படுகின்றன. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட காலத்திலிருந்து தீர்ப்பு வரும்வரையில் அவர்கள் அடையும் மனஉளைச்சலுக்கும், நீதிமன்றங்களில் நீண்ட நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கும், சமுதாயத்தின் ஏளனப்பார்வைக்கும் அளவே இல்லை. அரசு என்னதான் சட்டம் கொண்டு வந்தாலும், நீதிமன்றம் என்னதான் தீர்ப்புகள் வழங்கினாலும், நல்லவர்களை, வல்லவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வாக்காளர்களிடம்தான் இருக்கிறது. எனவே, வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை பணத்திற்காக விற்றுவிடாமல், இலவசங்கள் பக்கம் சாயாமல், நாட்டின் முன்னேற்றத்திற்கு, தன் தொகுதியின் முன்னேற்றத்திற்கு யார் பாடுபடுவார்கள் என்பதை மனத்தராசில் போட்டுப்பார்த்து, அதற்கேற்ற வகையில் வாக்களிப்பதுதான் ஜனநாயகத்தின் கடமையை நிறைவேற்றுவதாகும். அரசியலில் தூய்மை என்பது மக்களின் கைகளில்தான் இருக்கிறது.

Next Story