திருமண பரிசான பெட்ரோல்


திருமண பரிசான பெட்ரோல்
x
தினத்தந்தி 27 Sep 2018 10:45 PM GMT (Updated: 27 Sep 2018 12:01 PM GMT)

பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாதவகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பணமதிப்பு சரிவு, மற்றொருபக்கம் பெட்ரோல்–டீசல் விலை உயர்வு ஆகியவற்றின் தாக்கத்தால் பொருட்களின் விலையும் தினமும் ஏறிக்கொண்டே போகிறது.

நல்லவேளையாக தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் டீசல் விலையால் தினமும் கூடுதலாக நஷ்டத்தை சந்தித்துக்கொண்டிருந்தாலும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பஸ் கட்டணத்தை உயர்த்தவேண்டாம் என்று கூறிவிட்டார். பஸ் கட்டணம், மின்சார கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயராமல் அரசு பார்த்துக்கொண்டால், இந்த துன்பத்திலும் அது ஒரு ஆறுதலாக இருக்கும். கடந்த 50 நாட்களுக்கு மேலாக பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இந்தநிலையில், அவை இரண்டும் மிக அரிய பொருட்களாக, விலை மதிப்பில்லாத பொருட்களாக மாறிவிட்டன.

சிதம்பரம், கடலூர் போன்ற இடங்களில் நடந்த திருமணங்களில் நண்பர்கள் திருமணபரிசு கொடுக்கும்போது ஒரு கேனில் பெட்ரோல் நிரப்பி அதை திருமண பரிசாக அளித்தனர். மணமக்களும் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு தாங்கள் புதிதாக வாங்கியுள்ள மோட்டார் சைக்கிளில் வெளியிடங்களுக்கு செல்ல இது பயனுள்ளதாக இருக்கும் என்று நன்றி தெரிவித்திருக்கிறார்கள். இது கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இப்படியொரு நிலை வந்துவிட்டதே என்று சலிப்பு ஏற்படவேண்டியநிலை எல்லோருக்கும் வந்துவிட்டது. இந்தியாவில் பெட்ரோல்–டீசல் உற்பத்தியை வைத்து நமது சுயதேவையை பூர்த்தி செய்யமுடியாது. நம் தேவைகளில் 80 சதவீதத்திற்குமேல் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். ஆக, சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில்தான் அன்றாட பெட்ரோல்–டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றாலும், இதைவிட கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தநேரத்திலும், இந்தியாவில் பெட்ரோல்–டீசல் விலை இவ்வளவு உயரவில்லை. இந்தநேரத்தில் உடனடியாக பெட்ரோல்–டீசல் விலை குறையவேண்டும் என்றால் 3 கோரிக்கைகளை மத்திய–மாநில அரசுகள் பரிசீலிக்கவேண்டும் என்று மக்கள் கோருகிறார்கள்.

முதலாவதாக பெட்ரோல்–டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வழங்கப்படாமல், முன்புபோல் அரசுக்கே வழங்கப்படவேண்டும். 2–வதாக மத்திய அரசாங்கம் ஒருலிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48–ம், டீசலுக்கு ரூ.15.33–ம் வசூலித்துக் கொண்டிருக்கும் நிலைமையை மாற்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு இருந்ததோ, அதேவிலையில் இருக்கும்படி மத்திய கலால் வரியை குறைக்கவேண்டும். அதுபோல, தமிழக அரசும் பெட்ரோலுக்கு 34.11 சதவீத மதிப்புக்கூட்டுவரியும், டீசலுக்கு 24.04 சதவீதமும், வரிவிதிப்பதற்கு பதிலாக, நிரந்தரமாக ஒரு தொகையை மத்திய கலால் வரியைப்போல மதிப்புக்கூட்டு வரியில் நிர்ணயிக்கவேண்டும் என்று பெட்ரோல்–டீசல் விற்பனையாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஏனெனில், சதவீத அடிப்படையில் வரி விதித்தால் பெட்ரோல் விலை உயரும்போது தானாக உயரும். பெட்ரோல் விலை குறையும்போதும் தானாக வரி குறையும். ஆக, அரசுக்கும் பாதகம் இல்லாமல், பொதுமக்களுக்கும் பாதகம் இல்லாமல் ஒரு நிரந்தரமான வரியை இருசாராருக்கும் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு பரிசீலித்தால் நிச்சயமாக பலன் கொடுக்கும். இந்தமுறையை தமிழகஅரசு பின்பற்றுவதற்கான முடிவை எடுத்தால் உடனடியாக சாதாரண ஏழை–எளிய மக்களுக்கு பலனளிக்கும் வகையில் பெட்ரோல்–டீசல் விலை குறையும். அரசுக்கும் நிரந்தரமான ஒரு வருவாய் எந்த காலத்திலும் கிடைக்கும். போதும் பெட்ரோல்–டீசல் விலை உயர்வு.

Next Story