சர்ச்சைக்குரிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்


சர்ச்சைக்குரிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
x
தினத்தந்தி 28 Sep 2018 10:30 PM GMT (Updated: 28 Sep 2018 5:06 PM GMT)

பொதுவாகவே ஜனநாயகத்தின் நான்கு தூண்களான பாராளுமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், பத்திரிகை ஆகியவற்றில், நீதிமன்றங்கள் அடுத்தவர் அதிகார எல்லையில் தலையிடுகிறது என்று பரவலான பேச்சு இருக்கிறது.

பொதுவாகவே ஜனநாயகத்தின் நான்கு தூண்களான பாராளுமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், பத்திரிகை ஆகியவற்றில், நீதிமன்றங்கள் அடுத்தவர் அதிகார எல்லையில் தலையிடுகிறது என்று பரவலான பேச்சு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக் கின்றன. 2 நாட்களுக்கு முன்பு அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்று தீர்ப்பு அளித்துவிட்டு, பான்கார்டுடன் இணைக்கவும், வருமானவரி கணக்கை தாக்கல்செய்யவும், அரசின் மானிய–நலத்திட்டங்களை பெறவும் மட்டுமே ஆதார் கட்டாயம். வங்கிக்கணக்கை தொடங்குவதற்கும், செல்போன்களில் சிம் கார்டுகளை வாங்குவதற்கும், கல்லூரி, பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கைக்கும் தேவையில்லை என்று தீர்ப்பு கூறியிருக்கிறது. 5 நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய்.சந்திரசூட் ஆதார் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பண மசோதாவாக நிறைவேற்றியதே அரசியல் சட்டத்துக்கு எதிரான மோசடி. இது ஒன்றே இந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். ஆனால், மற்ற 

4 நீதிபதிகள் தீர்ப்பே மெஜாரிட்டி என்ற வகையில் அதுவே தீர்ப்பாக இருந்தது. இதில் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி என்று சொல்லமுடியாது. ஆதார் வேண்டும் என்பவர்கள் தங்களுக்கு வெற்றி என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்கிறவர்களும் தங்களுக்கு வெற்றி என்கிறார்கள். 

இதுதான் பரபரப்பை ஏற்படுத்தியது என்றால், அடுத்தநாளே ஆண்–பெண்ணுக்கு இடையேயான தகாத உறவு குற்றமல்ல, அதை குற்றம் என்று சொல்லும் இந்திய தண்டனை சட்டத்தின் 497–வதுபிரிவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் 497–வது பிரிவுப்படி, யார் ஒருவர் திருமணமான மற்றொருவரின் மனைவியுடன், அவரது கணவரின் சம்மதமோ, ஒத்துழைப்போ இல்லாமல் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் அது கற்பழிப்பாக கருதப்பட்டு தகாத உறவு என்ற அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றத்துக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ அந்த ஆணுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பெண்ணுக்கு வழங்கப்படுவதில்லை. இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அவ்வாறு தண்டனை எதுவும் வழங்கப்பட முடியாது. ஆனால் இதை காரணமாக வைத்து விவாகரத்து கோரலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையும் வரவேற்பவர்களும் இருக்கிறார்கள். நமது கலாசாரத்தையே சீரழித்துவிட்டது என்று எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். 

இதுமட்டுமல்லாமல், நேற்று சபரிமலைக்கு பெண்களை வழிபாடு செய்ய அனுமதிக்காதது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. வழிபாடு என்பது அனைவருக்கும் சமமான உரிமை என்று மற்றொரு அதிர்ச்சியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருசாரார் இதை வரவேற்றாலும், பெரும்பாலான பக்தர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராகவே இருக்கிறார்கள். மதரீதியான வழிபாட்டு உரிமையில் சுப்ரீம் கோர்ட்டு தேவை யில்லாமல் தலையிடுகிறது. அய்யப்பன் ஒரு கடும் பிரமச்சாரி. அதனால்தான் பெண்கள் அங்குசெல்ல ஆண்டாண்டுகாலமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இப்போது எல்லா பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பு நிச்சயமாக பெரும்பாலான இந்துக்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றாகும். ஏற்கனவே ஓரினசேர்க்கைக்கு தண்டனை கிடையாது என்று தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டின் அடுத்தடுத்த இந்த 3 தீர்ப்புகளும் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story