தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு


தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு
x
தினத்தந்தி 4 Oct 2018 10:30 PM GMT (Updated: 2018-10-04T17:45:30+05:30)

இலங்கைத் தீவின் பூகோள அமைப்பானது, இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளை தாங்களாகவே முன்வந்து உதவிகளை செய்ய ஓடோடி வரவழைத்துள்ளது.

லங்கைத் தீவின் பூகோள அமைப்பானது, இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளை தாங்களாகவே முன்வந்து உதவிகளை செய்ய ஓடோடி வரவழைத்துள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள இந்த தீவு, இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிறது. தற்போது சீனா, இலங்கையில் காலூன்றும்வகையில் நிறைய உதவிகளை தானாகவே முன்வந்து செய்கிறது. ஏற்கனவே ஹம்பன்தோட்டா துறைமுக நவீனமயமாக்கல் பணிகளில் ஈடுபட்ட சீனா, இப்போது ஒரு விமான நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் கொழும்பு நகரில் தாமரை கோபுரம் அருகே பலமாடி கட்டிடங்களை கட்டிவருகிறது. இலங்கை முழுவதும் சாலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு தொழில் நுட்ப கல்லூரியை கட்டுகிறது. இப்படி பல பணிகளை சீனா செய்து வருவதால், எங்கு பார்த்தாலும் சீனர்களின் நடமாட்டம் வெகுவாக தெரிகிறது. 

500 ஆண்டுகளுக்கு முன்பு விலை உயர்ந்த பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு சீன கப்பல் அல்லைப்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. இப்போது அந்த கப்பல் தொடர்பான அகழ்வாராய்ச்சி பணிகளில் கடலிலும் சரி, கடற்கரையிலும் சரி, சீனாவின் தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த ஆய்வை விரிவுபடுத்துவதற்காக கூடுதல் இடங்களை கடல் பகுதியில் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுவருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த ஆய்வுக்காக ஓரிரு கப்பல்கள் வடமாகாண பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆக, மிக சமீபத்தில் சீனா வந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வி‌ஷயத்தில் இந்தியா மிக எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ஏற்கனவே வடக்கே காஷ்மீர் மற்றும் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் பிரச்சினை செய்துகொண்டிருக்கிறது. டோக்லாம் பகுதியில் சீனா தன் படைகளை நிறுத்தி வைத்துக் கொண்டு அங்கும் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறது. இப்போது தென்மாவட்டங்களுக்கு மிக அருகில் இருக்கும் இலங்கைக்குள் சீனா வந்துவிட்டது. வடக்கே அண்டை நாடுகள் வி‌ஷயத்தில் இந்தியா எவ்வளவு கவனமாக இருக்கிறதோ, அதுபோல தெற்கேயும் கவனமாக இருக்க வேண்டும். 

தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம், புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் முப்படை தளங்கள் அமைக்கப்படவேண்டும். இலங்கையுடன் ராஜ்ய உறவுகள் இன்னும் வலுப்படுத்தப்படவேண்டும். இந்தியாவின் உதவிகளை பல வி‌ஷயங்களில் பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், சீனாவின் உதவியையும் இலங்கை ஏன் நாடுகிறது?, அதற்கு என்ன அவசியம்? என்பதில் எல்லாம் அக்கறை செலுத்தவேண்டிய நிலை வந்துள்ளது. உடனடியாக தமிழகஅரசும், மத்திய அரசின் கவனத்துக்கு இதையெல்லாம் கொண்டு வர வேண்டும். சமீபத்தில் நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவில், இந்தியா, வங்காளதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மாநாடு நடந்த நேரத்தில் பிரதமர் நரேந்திரமோடியும், இலங்கை அதிபர் சிறிசேனாவும் நடத்திய பேச்சுவார்த்தையின் போது கூட இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்துள்ளார். ஆனால் இவ்வளவு உதவிகளை முன்வந்து செய்ய இந்தியா தயாராக இருக்கும் நேரத்திலும், அதை மட்டும் பெறாமல் எல்லா இடங்களிலும் சீனா முத்திரை பதிக்கும்வகையில் சீனாவின் உதவியை பெற்று வருகிறது என்றால், இதன் உட்பொருள் என்ன? என்பது குறித்தும் ஆராய வேண்டும்.

Next Story