குறைத்தது நல்லது; இன்னும் குறைக்க முடியுமா?


குறைத்தது நல்லது; இன்னும் குறைக்க முடியுமா?
x
தினத்தந்தி 5 Oct 2018 10:30 PM GMT (Updated: 2018-10-05T20:06:00+05:30)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டு வருவதாலும், ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிந்து வந்துகொண்டிருந்ததாலும், பெட்ரோல்–டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்துகொண்டேபோனது.

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டு வருவதாலும், ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிந்து வந்துகொண்டிருந்ததாலும், பெட்ரோல்–டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்துகொண்டேபோனது. கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.59–ம், டீசல் ரூ.6.37–ம் உயர்ந்து இருந்திருக்கிறது. பெட்ரோல்–டீசல் விலையின் உயர்வு, விலைவாசியை ஏற்றிக்கொண்டேபோனது. எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டேபோனது. தனியார் பஸ், ஷேர் ஆட்டோ, ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற போக்குவரத்துக்கட்டணமும் உயர்த்தப்பட்டது. லாரி கட்டணமும் கணிசமாக அதிகரித்தது. பெரும்பாலான சாதாரண ஏழை–எளிய மக்களின் வாழ்வில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 

86 அமெரிக்க டாலராக உயர்ந்தும், ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 73.58 ஆக சரிந்தும் இருந்த நிலையில், பங்குச்சந்தையும் பெரிய அளவில் வீழ்ச்சிக்கண்டது. 

மத்திய–மாநில அரசாங்கங்கள் பெட்ரோல்–டீசல் மீதான வரிகளை குறைக்கவேண்டும் என்று குக்கிராமத்தில் உள்ள சாதாரண குடிமகனும் கோரிக்கைவிட தொடங்கினான். மத்திய அரசு பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.19.48–ம், டீசலுக்கு ரூ.15.33–ம் கலால்வரி விதித்திருந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெட்ரோல்–டீசல் மீதான கலால்வரி ரூ.1.50 குறைத்து மத்திய அரசாங்கம் உத்தரவிட்டது. எண்ணெய் கம்பெனிகளும் ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. ஆக, மத்திய அரசாங்கத்தின் சார்பிலும், எண்ணெய் கம்பெனிகள் சார்பிலும் இப்போது லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசாங்கங்களும் இதற்கு இணையாக தாங்கள் வசூலிக்கும் மதிப்புக்கூட்டுவரியில் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கவேண்டும் என்று மத்திய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் உள்பட 12 மாநிலங்களில் லிட்டருக்கு ரூ.2.50 மதிப்புக்கூட்டுவரி உடனடியாக குறைக்கப்பட்டது. 

பா.ஜ.க. ஆட்சி வந்ததிலிருந்து அதாவது 2014–ம் ஆண்டு நவம்பர் முதல் 2016 ஜனவரி மாதம் வரையில் மட்டும் கலால்வரி பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.11.77–ம், டீசலுக்கு ரூ.13.47–ம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு கலால் வரியை குறைக்கவேண்டும் என்று கோரிக்கைகள் விடப்படுகின்றன. நிச்சயமாக அந்தளவுக்கு வரியை குறைக்கமுடியாது என்றாலும், இன்னும் சற்று கூடுதல் தொகையை கலால்வரி யிலிருந்து குறைக்க மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்யலாம். இதுபோல, தமிழக அரசும் தற்போது பெட்ரோல்மீது விதிக்கும் 32.25 சதவீதம் மற்றும் டீசல்மீது விதிக்கும் 24.31 சதவீத மதிப்புக்கூட்டு வரியிலிருந்து, மத்திய அரசாங்கம் குறைத்த லிட்டருக்கு ரூ.2.50 அளவிலாவது குறைக்க பரிசீலிக்கவேண்டும். பொதுமக்களை பொறுத்தமட்டில், தமிழகஅரசும் ரூ.2.50–ஐ குறைத்தால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 

5 ரூபாய் குறையும். அந்தநிலை வரவேற்கத்தகுந்தது என்றாலும், அதுபோதாது இன்னும் கொஞ்சம் குறைக்கப்படவேண்டும். அப்படியானால்தான் விலைவாசி குறையும் என்பதுதான் கோரிக்கையாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய அரசாங்கம் கலால்வரி மற்றும் மாநில அரசாங்கங்களின் மதிப்புக்கூட்டுவரிகளுக்கு பதிலாக, பெட்ரோல்–டீசல் மீதான வரிகளையும் சரக்கு சேவைவரிக்குள் கொண்டு வருவது குறித்து சரக்கு சேவைவரி கவுன்சில் ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த வேண்டுகோளாக இருக்கிறது. 

Next Story