கோரப்படாத வங்கி ‘டெபாசிட்’கள்


கோரப்படாத வங்கி ‘டெபாசிட்’கள்
x
தினத்தந்தி 7 Oct 2018 10:30 PM GMT (Updated: 7 Oct 2018 11:56 AM GMT)

‘‘சிக்கனமாக வாழணும், சேர்த்து வைக்கப்பழகணும்’’ என்பது காலம்காலமாக பெரியவர்கள், இளைய சமுதாயத்தினருக்கு கூறும் அறிவுரையாகும்.

‘‘சிக்கனமாக வாழணும், சேர்த்து வைக்கப்பழகணும்’’ என்பது காலம்காலமாக பெரியவர்கள், இளைய சமுதாயத்தினருக்கு கூறும் அறிவுரையாகும். அந்த வகையில், சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வு எல்லோரிடத்திலும் வந்துவிட்டது. வயதுமுதிர்ந்த காலத்திற்கு எனவும், மருத்துவச் செலவு, வீடு வாங்க, குழந்தைகளின் கல்வி, திருமணம், எதிர்பாராத செலவு என பல செலவுகளை சந்திக்க பொதுமக்கள் பரவலாக சேமித்து வைக்கிறார்கள். இதில், வங்கி ‘டெபாசிட்’களில் பணம்போட்டு சேமித்து வைப்பதில் எல்லோரும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இதுபோல, எல்.ஐ.சி. உள்பட பல்வேறு ஆயுள்காப்பீட்டு நிறுவனங்களிலும் பாலிசி எடுத்து சேமிக்கிறார்கள்.

வங்கி சேமிப்புக்கணக்கில் ஒரு ஆண்டாக எந்தவொரு பரிமாற்றமும் இல்லையென்றால், அதை செயல்படாத கணக்கு என்றும், 2 ஆண்டுகளென்றால் செயலற்ற கணக்கு என்றும், 10 ஆண்டுகள் ஆகிவிட்டால் கோரப்படாத ‘டெபாசிட்’ என்றும் வங்கிகளால் கருதப்பட்டுவிடுகிறது. இது சேமிப்புக்கணக்கில் மட்டுமல்லாமல், நிரந்தர ‘டெபாசிட்’ உள்பட அனைத்துவகையான ‘டெபாசிட்’களும் 10 ஆண்டுகளுக்குமேல் கோரப்படாமல் இருந்தால் இந்த கணக்கில்தான் சேர்ந்துவிடுகிறது. இவ்வாறு கோரப்படாத கணக்குகளெல்லாம் முன்பு வங்கிகளின் வசமே இருந்துவந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதை ரிசர்வ் வங்கி கணக்குகளுக்கு மாற்றிவிடுகிறார்கள். வங்கியில் உள்ள அந்த ‘டெபாசிட்’களுக்கான வட்டியும் சேர்த்துதான் அனுப்பப்படுகிறது. ரிசர்வ் வங்கிக்கு எந்தவித முதலீடும் இல்லாமல் கிடைக்கும் இந்த பணம் ‘டெபாசிட்’தாரர்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி என்ற பெயரில் வரவு வைக்கப்படுகிறது. 

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், இவ்வாறு 64 வங்கிகளில் கோரப்படாத வகையில் இருக்கும் பணம் ரூ.11 ஆயிரத்து 302 கோடியாகும். இதுபோல, எல்.ஐ.சி. மற்றும் 22 தனியார் இன்சூரன்சு நிறுவனங்களில் பாலிசிதாரர்கள் முதலீடு செய்த ரூ.15 ஆயிரத்து 166 கோடியே 47 லட்சம் யாராலும் கோரப்படாமல் இருக்கிறது. வங்கிகளிலும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்த இந்த மக்கள் திடீரென மரணம் அடைந்திருக்கலாம், தாங்கள் பணம் போட்டிருப்பதை குடும்பத்தினரிடம் சொல்லாமல் இருந்திருக்கலாம், சொற்ப தொகையாக இருந்தால் வெளியூருக்கு மாறுதலாகி செல்லும் நேரத்தில் அதை மறந்து சென்று இருக்கலாம். இவ்வாறு எந்த காரணத்திற்காக வங்கியில் அல்லது ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் போட்ட பணம் கோரப்படாமல் இருந்தாலும், அது ரிசர்வ் வங்கிக்கு செல்வது நியாயமே இல்லை. கடன்கள் வாங்கினால் மட்டும், திரும்ப கட்டவில்லையென்றால் பெயரை போட்டு விளம்பரம் போடுகிறார்கள். வாங்கியவர்கள் இறந்தாலும் அவருக்காக ஜாமீன் கொடுத்தவரை தேடிப்பிடித்து வசூலித்து விடுகிறார்கள். அதேபோல, வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களாலோ, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பாலிசி எடுத்து பணம் கட்டியவர்களாலோ கோரப்படாத தொகை என்றாலும் அவரையோ, அவரது குடும்பத்தினரையோ தேடிப்பிடிக்க எத்தனையோ வழி இருக்கிறது. இணையதளத்தில் வெளியிடலாம் அல்லது வங்கிகள், அந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கும் அந்தந்த பகுதிகளில் உள்ள பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட்டு உரியவர்களை கண்டுபிடிக்கலாம். என்னதான் இருந்தாலும், உரியவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினரை தேடிப்பிடித்து இந்த கோரப்படாத ‘டெபாசிட்’களை, பாலிசிகளை கொடுப்பதுதான் தார்மீக நீதியாகும்.

Next Story