5 மாநில சட்டசபை தேர்தல்கள்


5 மாநில சட்டசபை தேர்தல்கள்
x
தினத்தந்தி 8 Oct 2018 10:00 PM GMT (Updated: 2018-10-08T22:43:27+05:30)

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் அடுத்த மே மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த 2014–ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. அபரிமிதமான வெற்றியைபெற்று பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. மீண்டும் 2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க., ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளுமா? அல்லது பா.ஜ.க. அல்லாத கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்குமா? என்பது தான் இப்போது நாடு முழுவதும் பரபரப்பாக இருக்கிறது. அனைத்து கட்சிகள் மட்டத்திலுமே பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தபணிகள் தொடங்கிவிட்டன. இந்தநிலையில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் 12–ந்தேதி முதல் டிசம்பர் 7–ந்தேதி வரை நடக்கும் என்று கடந்த சனிக்கிழமை அன்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

5 மாநில சட்டசபை தொகுதிகளிலும் டிசம்பர் 11–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். இதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் தொடர்ந்து 3 முறை பா.ஜ.க. வெற்றி பெற்று 4–வது முறையாக ஆட்சியை தக்க வைக்கமுடியுமா? என்ற கேள்விக்கு விடைகாணும் வகையில் தேர்தலை சந்திக்க இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தமட்டில் எப்போதும் ஆளும் கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. வடகிழக்கு மாநிலங்கள் மொத்தம் 8. இதில் 6 மாநிலங்களில் பா.ஜ.க. தான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் இதுவரை 2 முறை வெற்றிபெற்று இப்போது 3–வது முறையும் நாமே வெற்றி பெறுவோமா? என்ற நிலையில் இருக்கிறது.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்ட பிறகு இப்போது தான் முதல்முறையாக தேர்தல் நடக்கிறது. எதிர்க்கட்சிகள் பலமாக இல்லை என்ற எண்ணத்தில் தெலுங்கானா மாநில சட்டசபையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் கலைத்து விட்டு இப்போது தேர்தலை சந்திக்க இருக்கிறார். இந்த 5 மாநிலங்களிலும் 83 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2014–ம் ஆண்டு தேர்தலில் 53 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தேர்தல் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் முக்கியமான தேர்தல். ஏனெனில் இருவரில் யார்பக்கம் அலைவீசுகிறது? என்று ஓரளவிற்கு இந்த தேர்தல்முடிவுகள் மூலம் கணித்துவிட முடியும். காங்கிரசை பொறுத்தமட்டில் பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து தேர்தலில் போட்டியிட நினைக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் விரும்பினால் நான் பிரதமராவேன் என்று ராகுல்காந்தி அறிவித்த நிலையிலேயே 2 விக்கெட்டுகள் வீழ்ந்து விட்டது. பகுஜன்சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்த நிலையில், இன்னும் எத்தனை கட்சிகள் 2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசோடு நிற்கும் என்பதையும் கணித்துவிட முடியும். ஆக, பா.ஜ.க., காங்கிரஸ் இருகட்சிகளுக்குமே இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் 2019 தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும்.

Next Story