பரபரப்பு ஏற்படுத்திய சந்திப்பு


பரபரப்பு ஏற்படுத்திய சந்திப்பு
x
தினத்தந்தி 9 Oct 2018 10:00 PM GMT (Updated: 2018-10-09T22:54:15+05:30)

பிரதமர் நரேந்திரமோடியை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது, அரசின் கோரிக்கைகளுக்காகவும், அரசியல் வி‌ஷயங்களுக்காகவும் என்று பரவலாக பேசப்படுகிறது.

கிராமத்தில் சிறு குழந்தைகளுக்கு தோசை அம்மா தோசை, அம்மா சுட்ட தோசை!, அரிசி மாவும், உளுந்து மாவும் கலந்துசுட்ட தோசை என்ற கதையை பாடலாக சொல்வார்கள். அதுபோலத்தான் பிரதமர் நரேந்திரமோடியை ஒரு ஆண்டுக்குப்பிறகு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சந்தித்த சந்திப்பு, அரிசி மாவும், உளுந்து மாவும் கலந்துசுட்ட தோசை என்பதுபோல, அரசின் கோரிக்கைகளுக்காகவும், அரசியல் வி‌ஷயங்களுக்காகவும் கலந்துவிட்ட சந்திப்பு என்று பரவலாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க செல்லும்போது, முதல்–அமைச்சருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடன் சென்றிருக்கிறார்கள். மொத்தம் 35 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.

அரசு ரீதியாக பேசும்போது, தலைமைச்செயலாளர் கூட இருந்திருக்கிறார். சற்றுநேரம் கழித்து அதைதாண்டி அரசியல்பக்கம் பேச்சு போகவேண்டிய நிலையில், தலைமைச் செயலாளர் வெளியே வந்துவிட்டார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோருடன் தமிழக அரசியல் குறித்து பிரதமர் பேசியபிறகு, அதையும்தாண்டி முதல்–அமைச்சரும், பிரதமரும் தனியாக பேசவேண்டிய நிலையில், ஜெயக்குமாரும் வெளியே வந்துவிட, முதல்–அமைச்சரும், பிரதமரும் மட்டும் மனம்விட்டு சற்றுநேரம் பேசியிருக்கிறார்கள். அரசு ரீதியான சந்திப்பில் முதல்–அமைச்சர் 20 தலைப்பில், 43 பக்க கோரிக்கைமனு ஒன்றை பிரதமரிடம் கொடுத்து பல வேண்டுகோள்களை விடுத்திருக்கிறார். முதல் 3 முக்கிய கோரிக்கைகளாக, மறைந்த முதல்–அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் ‘பாரத ரத்னா’ விருது வழங்கவேண்டும். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு, புரட்சித்தலைவர் ‘டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் ரெயில்நிலையம்’ என பெயர்சூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவிட்டு, அதன்பிறகு தமிழக மக்களுக்கு பயன் விளைவிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிலுவைதொகையும், மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையும் விரைவில் வரவேண்டும். மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கக்கூடாது போன்ற பல கோரிக்கைகளை கொடுத்துள்ளார். 

இதுபோன்ற கோரிக்கைகள் பல முதல்–அமைச்சர்களால், பிரதமருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறியதில்லை. ஏராளமான கோரிக்கைகள் ஏட்டளவில்தான் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. எனவே, முதல்–அமைச்சர் கொடுத்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களாலும், துறை செயலாளர்களாலும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். 20 கோரிக்கைகளும் நிறைவேறிவிட்டால் நிச்சயமாக தமிழகத்திற்கு பெரும்நன்மை பயக்கும். அரசியல் ரீதியாக பேசப்பட்ட கருத்துகள் அனைத்தும் அரசியல் நோக்கர்களால் இது 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைப்பதற்கான பிள்ளையார் சுழி என்று வர்ணிக்கப்படுகிறது. அரசியல் ரீதியாக என்ன பேசினார்கள் என்பது பிரதமருக்கும், முதல்–அமைச்சருக்கும் மட்டுமே தெரியும் என்றாலும், அரசியல் உலகில் பேசப்படுவது நிச்சயமாக பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி வைக்கப்போகிறது என்பதுதான். முதல்–அமைச்சரிடம் இதுதொடர்பான கேள்வி நிருபர்களால் கேட்டபோது, இல்லை என்று மறுக்கவில்லை. தேர்தலே அறிவிக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்தபிறகு, யார்–யாருடன் கூட்டணி என்பதை அதற்கு தக்கவாறு எங்களுடைய கட்சி முடிவுசெய்யும் என்று சாதுர்யமாக சொன்னார் என்பதிலிருந்தே, இதுதான் நடக்கப்போகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Next Story