இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதா?


இளைஞர்களின் வேலைவாய்ப்பை  பறிப்பதா?
x
தினத்தந்தி 10 Oct 2018 10:00 PM GMT (Updated: 2018-10-10T22:31:25+05:30)

தென்னக ரெயில்வேயில் காலியிடங்களை ஓய்வு பெற்ற ஊழியர்களைக் கொண்டு நிரப்பும் முயற்சிகளில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இந்திய ரெயில்வே 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சென்னையை தலைமையிடமாக கொண்ட தென்னக ரெயில்வே ஆகும். தென்னக ரெயில்வேக்குட்பட்டு சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு ஆகிய கோட்டங்கள் இருக்கின்றன. இந்திய ரெயில்வேயில் மொத்தம் 12 லட்சத்து 65 ஆயிரத்து 599 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் ஸ்டே‌ஷன் மாஸ்டர், கார்டு, லோகோ பைலட், பாய்ண்ட்ஸ் மேன், டிராக் மேன், கி மேன், பிரிவு கட்டுப்பாட்டாளர், ‌ஷண்டிங் மாஸ்டர் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு பிரிவை உள்ளடக்கிய பாதுகாப்பு பிரிவில் 6 லட்சத்து 41 ஆயிரத்து 733 பேர் பணியாற்றுகிறார்கள். பாதுகாப்பு பிரிவுகளில் மட்டும் 18.3 சதவீத பணியிடங்கள் காலியாக இருக்கிறது. தென்னக ரெயில்வேயில் மொத்த பணியிடங்கள் 1 லட்சத்து 2 ஆயிரம் ஆகும். ஆனால், இப்போது 87 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. வெகுகாலமாகவே ரெயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்ற கோரிக்கை வெகுவாக வலுத்து வருகிறது. ரெயில்வேயில் பணியாற்றுவது என்பது இன்றைய இளைஞர்களின் முதல் தேர்வாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு 90 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப, 2 கோடியே 30 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். 

இந்தநிலையில், தென்னக ரெயில்வேயில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, ஓய்வு பெற்ற ஊழியர்களைக் கொண்டு நிரப்புவதற்கு முயற்சிகளில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மொத்தமுள்ள 15 ஆயிரம் காலியிடங்களில், 5 ஆயிரம் காலியிடங்களை ஓய்வுபெற்று 65 வயதுக்குட்பட்ட ஊழியர்களைக்கொண்டு நிரப்புவதற்கான ஆயத்த பணிகளை ரெயில்வே நிர்வாகம் தொடங்கிவிட்டது. ரெயில்வே ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60. எல்லா கோட்டங்களிலும் இவ்வாறு ஆள் எடுக்கும் பணிகள் தொடங்கிவிட்டாலும், சென்னை கோட்டத்தில் 1,279 பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு நிரப்பும் முயற்சி வேகமாக நடக்கிறது. 75 கார்டுகள், 55 ஸ்டே‌ஷன் மாஸ்டர்கள், 26 ‌ஷண்டிங் மாஸ்டர்கள், 134 பாய்ண்ட்ஸ் மேன்கள், 238 தண்டவாள பராமரிப்பாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவில் 390 பேர் என்பது போல ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்தும் வேலைகள் தொடங்கி விட்டன. 

இந்த ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அவர்கள் பணியின்போது கடைசியாக வாங்கிய சம்பளத்திலிருந்து பென்‌ஷன் தொகையை கழித்து, மீதித்தொகை மாதச்சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேல் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றுபவர்கள் மிகவும் கவனமாக வேலைபார்க்க இவர்களது முதிர்வயது ஒத்துக்கொள்ளுமா? என்று விமர்சனம் எழுந்துள்ளது. இரவும், பகலும் வேலைபார்க்கவேண்டிய பணிகளில் வயதானவர்களை ஈடுபடுத்துவது பயணிகளின் பாதுகாப்பில் விளையாடுவதுபோல் ஆகும். ஆரம்ப காலத்தில் குறைந்த சம்பளம்தான் வழங்கவேண்டிய நிலையில், இந்த வேலைவாய்ப்பு எல்லாம் இளைஞர்களுக்கு கொடுப்பதன் மூலம் வேலையில்லா திண்டாட்டத்தையும் போக்க முடியும், பணித்திறமையும் சிறப்பாக இருக்கும். ரெயில்வே நிர்வாகத்துக்கும் செலவு அதிகம் ஆகாது. கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்படும் நேரத்தில், அவர்களுக்கு வேலைகொடுப்பதற்கு பதிலாக, இவ்வாறு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநியமனம் கொடுப்பது சரியான தார்மீகம் அல்ல என்று இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.

Next Story