எட்டாக்கனியாகும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை


எட்டாக்கனியாகும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை
x
தினத்தந்தி 14 Oct 2018 10:30 PM GMT (Updated: 14 Oct 2018 12:03 PM GMT)

உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பார்கள். அதுபோன்ற நிலையில் சாதாரண ஏழை–எளிய மக்கள் இப்போது பெட்ரோல்– டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது சமையல் கியாஸ் சிலிண்டரும் எட்டாக்கனியாகி விட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், ரூபாய்நோட்டு மதிப்பு சரிவு மட்டும் பெட்ரோல்–டீசல் விலையை உயர்த்தி விடவில்லை. மத்திய அரசின் கலால்வரியும், மாநில அரசின் மதிப்புக்கூட்டுவரியும் சேர்த்துதான் மக்களை பெரும் சுமையில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சாதாரண ஏழை–எளிய மக்கள் பயன் படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. ஆண்டுக்கு 12 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப் படுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்களுக்கு அரசு வழங்கும் மானியம் கிடையாது. 

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2 கோடி சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையிலான சிலிண்டருக்கு ரூ.491–ம், மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ.896 ஆகவும் உயர்ந் துள்ளது. எல்லோருமே சிலிண்டர்கள் வாங்கும்போது ரூ.896 கொடுத்துத்தான் வாங்க வேண்டியதுள்ளது. மானியத்தொகை ரூ.405 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். மானியவிலை சிலிண்டரோ அல்லது மானியமற்ற சிலிண்டரோ டெலிவரி செய்யும் போது ரூ.30–லிருந்து ரூ.50 வரை கூடுதலாக கேட்பதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக புகார் கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே சென்னையில் மானியவிலை சிலிண்டர் ரூ.76.24–ம், மானியம் இல்லா சிலிண்டர் ரூ.397–ம் உயர்ந்துள்ளது. போன மாதத்திலிருந்து மட்டும் விலையில் ரூ.57.50 உயர்ந்துள்ளது. 

ஏழைகளுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்குவதற்கு விரும்புபவர்கள் தங்களுக்கு வழங்கும் மானியத் தொகையை விட்டுக்கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்ற திட்டத்தை பிரதமர் கடந்த 2016–ம் ஆண்டு மே மாதத்தில் அறிவித்தார். பிரதமர் தொடங்கிவைத்த ‘உஜ்வாலா’ திட்டத்தின்கீழ் ஒரு கோடி பேருக்கும் அதிகமானவர்கள் தங்களுக்கு ‘மானியம் வேண்டாம்’ என்று விட்டுக்கொடுத்துள்ளனர். இப்போது ஏற்பட்டுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் பலர் தங்களது மானியத்தை திரும்ப பெற கியாஸ் சிலிண்டர் வினியோக நிலையத்தை அணுகிக்கொண்டிருக்கிறார்கள். கிராமப் புறங்களில் உள்ள ஏழை–எளிய மக்கள் இவ்வளவு சமையல் கியாஸ் சிலிண்டர் உயர்வை தாங்க முடியாமல், பழைய காலங்களில் விறகு கொண்டு அடுப்பு எரிப்பதுபோல அருகிலுள்ள இடங்களில் சுள்ளிகளை பொறுக்கி வெந்நீர் போடுவது போன்ற வேலைகளுக்கு பயன் படுத்தத் தொடங்கி விட்டார்கள். எப்படி பெட்ரோல்–டீசல் விலையை குறைக்க மத்திய அரசு கலால் வரியில் லிட்டருக்கு 1.50–ம், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு ரூபாயும் குறைத்து நடவடிக்கை எடுத்தபிறகு, தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களை தவிர, பல மாநிலங்கள் மதிப்புக்கூட்டுவரியை குறைத்து, ஏறத்தாழ 5 ரூபாய் அளவுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டதோ அதுபோல, சமையல் கியாஸ் சிலிண்டருக்கும் முன்பு பல மாநிலங்களில் வரிவிலக்கு அளித்ததுபோல, இப்போதும் சரக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளித்தோ, மானியத்தொகையை அதிகரித்தோ அல்லது அடக்கவிலையை குறைத்தோ மக்களை இந்த விலை உயர்வு சுமையிலிருந்து மீட்கவேண்டும்.  


Next Story