நல்ல திட்டத்துக்கு இவ்வளவு வரைமுறைகளா?


நல்ல திட்டத்துக்கு இவ்வளவு வரைமுறைகளா?
x
தினத்தந்தி 15 Oct 2018 10:00 PM GMT (Updated: 2018-10-15T17:31:42+05:30)

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் மனித நேயமிக்க ஒரு நல்ல திட்டம் என்றால், ‘ஆயுஷ்மன் பாரத்’ என்று சொல்லப்படும் ‘தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டமாகும்’.

நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களை சேர்ந்த ஏறத்தாழ 50 கோடி மக்களுக்கு 1,347 நோய் களுக்கு சிகிச்சை அளிக்கும் மகத்தான திட்டம் இது. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவிலான இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம்வரை மருத்துவ காப்பீடு பெறமுடியும். சமீபத்தில் இந்தத்திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ளார். அரசு மருத்துவமனைகள் மற்றும் இந்தத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் ஏழைகள் இந்த சிகிச்சையை பெறமுடியும். தமிழ்நாட்டில் ஏற்கனவே நிறைவேற்றப் பட்டுவரும் முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டமும், இந்தத்திட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகளுக்கு மத்திய அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

மாதம் ரூ.10 ஆயிரத்துக்குமேல் வருமானம் ஈட்டும் குடும்பத்தினரோ, ரெப்ரிஜிரேட்டர், இருசக்கர வாகனங்கள், மீன்பிடி படகுகள், 3 சக்கர அல்லது 
4 சக்கர விவசாய கருவிகள், வீட்டில் டெலிபோன் வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர் குடும்பத்தினர், வருமானவரி கட்டுபவர்கள், தொழில்வரி கட்டுபவர்கள் போன்றவர்கள் இந்தத் திட்டத்தில் பயனடைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைமுறைகள் நிச்சயமாக பல ஏழைகள் இந்தத்திட்டத்தின்கீழ் பயனடைவதை தடுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் ரூ.10 ஆயிரம் ஒரு குடும்பத்தில் மாதவருமானம் என்பது ஒரு பெரிய தொகை அல்ல, சாதாரண கூலி வேலைக்கு போகிறவர்கள்கூட ஒரு நாளைக்கு ரூ.400 கூலி வாங்கினாலும், மாதம் ரூ.12 ஆயிரம் வந்துவிடும். சாதாரண பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி பணிக்கு சென்றுகொண்டிருப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் மருத்துவ காப்பீடு கிடையாது என்றால், நிச்சயமாக இந்தத்திட்டம் அறிவிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாது. 

ஏற்கனவே 2011–ம் ஆண்டில் சமூக பொருளாதார மற்றும் சாதி ரீதியிலான மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி, 10 கோடியே 74 லட்சம் குடும்பங்கள் பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த குடும்பங்கள் என்று கண்டறியப்பட்டு, அந்த குடும்பங்கள் எல்லாம் இந்தத் திட்டத்தின் பலனை அடைவார்கள் என்று அறிவிக்கப் பட்டநிலையில், இப்போதைய கட்டுப்பாடுகளால் நிச்சயமாக எதிர்பார்த்த பலன் கிடைக்காது. இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் அடிப்படையில் 1½ கோடி மக்கள் மருத்துவ காப்பீட்டு பலன்களை பெற்றுவருகிறார்கள். இப்போது தேசிய காப்பீட்டு திட்டம் இணைக்கப்பட்டபிறகு, அந்த வரை முறையின்படி 1½ கோடி பேரில் 77 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தேவையான பிரிமியம் தொகையில் மத்திய அரசாங்கம் 60 சதவீத தொகையை ஏற்றுக்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது இந்த புதிய வரைமுறையை பார்த்தால் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்து, மத்தியஅரசு பங்கு தொகையில் பெரிய துண்டு விழுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற வரைமுறைகளெல்லாம் தேவையில்லை. ஏழைகள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கவேண்டும்.

Next Story