புகார் கொடுக்க தயக்கம் ஏன்?


புகார் கொடுக்க தயக்கம் ஏன்?
x
தினத்தந்தி 21 Oct 2018 10:00 PM GMT (Updated: 2018-10-21T21:14:49+05:30)

சமீபகாலமாக ‘வாட்ஸ்–அப்’, ‘டுவிட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்களைப் போல, ஸ்மார்ட் போன்களில் ‘மீ டூ’ என்ற சமூக வலைதளமும் ஏராளமானவர்களால் பார்க்கப்படுகிறது. இதில் பல பெண்கள் பிரபலமான பலர் மீது பாலியல் புகார்களை கூறிவருகிறார்கள்.

சமீபகாலமாக ‘வாட்ஸ்–அப்’, ‘டுவிட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்களைப் போல, ஸ்மார்ட் போன்களில் ‘மீ டூ’ என்ற சமூக வலைதளமும் ஏராளமானவர்களால் பார்க்கப்படுகிறது. இதில் பல பெண்கள் பிரபலமான பலர் மீது பாலியல் புகார்களை கூறிவருகிறார்கள். அனேகமாக எல்லா சம்பவங்களிலுமே எனக்கு பாலியல் துன்புறுத்தல் இன்று நடந்தது, நேற்று நடந்தது என்று கூறுவதில்லை. 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று கடந்த காலங்களைப்பற்றியே புகார்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த புகார்களெல்லாம் பெரும்பாலும் சினிமா துறையினர், ஊடகத்துறையினர், பத்திரிகை துறையினர் மீதே கூறப்படுகிறது. இதைத்தாண்டி, வேறெந்த பிரிவிலும் இருந்து இதுவரை எந்தவித புகார்களும் வந்ததில்லை. மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரியாக இருந்து இந்த பிரச்சினையில் ராஜினாமாவை செய்துள்ள எம்.ஜே.அக்பர் பத்திரிகை உலகில் மிகபிரபலமான ஆசிரியராக இருந்தார். இவர் மீது இந்த ‘மீ டூ’ சமூக வலைத்தளத்தில் பிரியா ரமணி என்ற பெண் பத்திரிகையாளர் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்தநேரத்தில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்ததாக புகார் தெரிவித்திருக்கிறார். இதுபோல, இந்திபட உலகில் பிரபலமான நடிகர் அலோக்நாத் மீது பெண் டைரக்டர் மிண்டா நந்தா பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கற்பழித்ததாக புகார் கூறியிருக்கிறார். இதுபோல, தமிழக சினிமா துறையிலும் சில பிரபலங்கள் மீது புகார்கள் கூறப்பட்டுள்ளன.

இப்போது எம்.ஜே.அக்பர் தன்மீது புகார் கூறிய பிரியா ரமணி மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். பெண் டைரக்டர் மிண்டா நந்தா மீது நடிகர் அலோக்நாத் ஒரு ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்தநிலையில், ஏற்கனவே தேசிய பெண்கள் ஆணையம், பாலியல் துன்புறுத்தல் கொடுமைகளில் ஆட்பட்டதாக இதுபோல புகார் கூறும் பெண்கள், ஆணையத்தில் புகாராக கொடுத்தால், அனைத்து சட்டப்பூர்வ உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால், இத்தனை நாட்கள் ஆகியும், எந்தப்பெண்ணும் தங்களை அணுகவில்லை என்று தேசிய பெண்கள் ஆணையத்தலைவர் ரேகா சர்மா கூறியிருக்கிறார். எங்களை யாரும் அணுகாவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க அந்த பெண்கள் விரும்புகிறார்களா? என்று எங்களுக்கு தெரியாதநிலை ஏற்பட்டுவிடும். நாங்களாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில், நடவடிக்கைகளை எடுக்க பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் கடிதம்வேண்டும் என்று ஆணைய தரப்பில் கூறப்படுகிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, புகார் கூறும் பெண்கள் பிரபலமானவர்களை பெயரிட்டு அவமானப்படுத்துவதோடு நின்று விடுகிறார்கள். எந்தவொரு புகார் என்றாலும் கண்டிப்பாக நிரூபிக்கப்பட்டே ஆகவேண்டும். காற்றோடு கலந்த கீதமாக மாறிவிட்டால், அதனால் சமுதாயத்தில் அவமானப்படுகிறவர்களுக்கு என்ன பரிகாரம் இருக்கிறது?. மத்திய மந்திரியாக இருந்த அக்பர் போல, நடிகர் அலோக்நாத் போல பாதிக்கப்பட்டவர்களே நீதிமன்றத்துக்கு சென்று தங்கள் மீதுள்ள கறையைத் துடைக்க முயற்சி செய்யவேண்டும் என்பது சரியாக இருக்காது. ‘நான் பாதிக்கப்பட்டேன்’ என்று கூறுபவர்களே சமூக வலைத்தளத்தோடு தங்கள் பதிவை நிறுத்திவிடாமல், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தங்களிடம் உள்ள ஆதாரங்களை தாக்கல் செய்து அதை நிரூபிக்கவேண்டும். அதுதான் சரியான நியதியாகும்.

Next Story