அரசுத்துறைகளில் ஒருங்கிணைப்பு தேவை


அரசுத்துறைகளில் ஒருங்கிணைப்பு தேவை
x
தினத்தந்தி 22 Oct 2018 10:00 PM GMT (Updated: 22 Oct 2018 5:01 PM GMT)

கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ராவணனை வதம்செய்யும் நிகழ்ச்சிக்காக அந்த சிறிய மைதானத்தில் ராவணனின் உருவப்பொம்மை பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலிருந்து 50 அடி தூரத்தில் ரெயில்வே தண்டவாளங்கள் இருக்கின்றன. ராவணனின் உருவப்பொம்மையை தீயிட்டு கொளுத்தும் நிகழ்ச்சியைக்காண ஏராளமான மக்கள் ஆரவாரத்துடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது ஒலிபெருக்கியில் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ஏறத்தாழ 5 ஆயிரம் மக்கள் ரெயில்வே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருக்கின்றனர் என்பதை பெருமையாக கூறியிருக்கிறார்கள். இந்த தண்டவாளம் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் செல்லுமே என்ற அச்சம் யாருக்கும் இல்லை. அந்தநேரத்தில் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் ரெயில் வேகமாக வந்து அவர்கள்மீது மோதியதால், 59 பேர் உயிரிழந்தனர். 57 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்துக்கு ரெயில்வே டிரைவர் காரணம் அல்ல. கூட்டத்தை கண்டவுடன் வேகத்தை குறைத்திருக்கிறார். ஆனால் நிறுத்த முடியவில்லை என்று ரெயில்வே தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அரசுத்துறைகளின் கவனக்குறைவுதான் விபத்துக்கு முழுகாரணம். ஏனெனில், இந்த நிகழ்ச்சிக்காக போலீஸ் அனுமதிதான் பெறப்பட்டிருந்ததே தவிர, மாநகராட்சி, சுகாதாரத்துறை மற்றும் தீயணைக்கும்படை அனுமதி பெறப்படவில்லை. அப்படி அனுமதி பெறப்பட்டிருந்தால், மாநகராட்சி சார்பில் ரெயில்வேதுறைக்கு தகவல் தெரிவித்திருக்க முடியும். அனுமதிபெறாமல் நடத்தும் இந்த நிகழ்ச்சியை தடை செய்யவேண்டிய பொறுப்பு அந்தத்துறைகளுக்கு இருந்திருக்கிறது. இந்தநிகழ்ச்சிக்கு பஞ்சாப் மாநில மந்திரி நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத்கவுர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டிருக்கிறார். இதுபோன்ற விழாக்களில் தலைமை தாங்குபவர்கள் விழாவிற்கான எல்லா அனுமதியும் பெறப்பட்டிருக்கிறதா?, பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டிருக்கிறதா? என்று உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். 

ஏற்கனவே 1986–ம் ஆண்டு கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் வாணவேடிக்கையை காண ரெயில்வே தண்டவாளத்தின் அருகே நின்றுகொண்டிருந்த கூட்டத்தின்மீது ரெயில் மோதியதில் இதேபோல் பலர் உயிர் இழந்திருக்கிறார்கள். ஆக, இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது அது செய்தியாகிவிடுகிறதே தவிர, அதன்பின் தொடர் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படுவதில்லை. எனவே, அனைத்து மாநிலங்களும் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இதுபோன்று பெரிய கூட்டங்கள் சேரும் நிகழ்ச்சிகளில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவேண்டும். அரசுத்துறைகளும் அனுமதி கொடுக்கும்போதும், எந்தவித ஆபத்தும் நேரிடாதவகையில் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தபின்பே அனுமதி வழங்கவேண்டும். 1989–ம் ஆண்டு இந்திய ரெயில்வே சட்டம் பிரிவு 147–ன் கீழ் தண்டவாளத்தை கடப்பதோ?, தவறாக பயன்படுத்துவதோ? குற்றமாகும். அதற்கு ஜெயில் தண்டனை விதிப்பதற்கும் இடமிருக்கிறது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு தண்டவாளத்தில் யாரும் நிற்காத தூரத்தில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இதுபோன்ற பெரும் கூட்டங்கள் சேரும் நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை தெளிவாக வகுத்துள்ளது. அந்தவழிமுறைகள் அனைத்தும் இனி எதிர்காலத்தில் எல்லாக்கூட்டங்களிலும் பின்பற்றப்படவேண்டும். மொத்தத்தில், அரசு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு மிக மிக முக்கியம்.

Next Story