மீனவர்கள் விடுதலை எப்போது?


மீனவர்கள் விடுதலை எப்போது?
x
தினத்தந்தி 23 Oct 2018 10:00 PM GMT (Updated: 23 Oct 2018 5:33 PM GMT)

2009–க்குப்பிறகு அவ்வப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்தார்கள் என்று இலங்கை கடற்படை கைது செய்வதும், இந்தியா வேண்டுகோள் விடுப்பதையேற்று விடுதலை செய்வதும் வாடிக்கையாகும். ஆனால் இப்போது இலங்கையின் பார்வை மாறிவிட்டது.

சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசாங்கம் ஒரு கடுமையான சட்டத்திருத்தத்தை பிறப்பித்தது. இதன்மூலம் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.26 லட்சம் அபராதமும், அதை கட்டத்தவறினால் 3 மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கமுடியும். இதுமட்டுமல்லாமல், இப்போதெல்லாம் இந்திய–இலங்கை எல்லைப்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதோடு, அவர்களது வலைகளை அறுத்தெறிந்து, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்துகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 21–ந்தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தில் தலா ரூ.26 லட்சம் அபராதம் விதித்து, அதை கட்டத்தவறியதால் 3 மாதம் சிறைத்தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஏற்கனவே கடந்த 17–ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். அதில், தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் உள்பட தற்போது சிறையில்வாடும் 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருந்தார். இதுமட்டுமல்லாமல், இலங்கை நீதிமன்றங்களில் அவர்களை விடுதலை செய்ய வலுவான வாதங்களை வைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 18–ந் தேதி டெல்லி வந்த இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, 20–ந் தேதி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், வெளிவிவகாரத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துவிட்டு, பிரதமர் நரேந்திரமோடியுடன் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இலங்கையில், மத்திய அரசாங்கம் நிறைவேற்ற திட்டமிட்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல காலதாமதமாகின்றன என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் குறித்து பேசப்பட்டதா? என்பதுகுறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை என்றாலும் நிச்சயமாக நமது பிரதமர், தமிழக மீனவர்கள் பிரச்சினையை இலங்கை பிரதமரிடம் எடுத்துக் கூறியிருப்பார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

ஆனால், ரனில் விக்கிரமசிங்கே இலங்கைக்கு திரும்பி 4 நாட்கள் ஆகியும், தமிழக மீனவர்களின் விடுதலைக்குறித்து எந்தவித நடவடிக்கையையும் காணவில்லை. உடனடியாக மத்திய அரசாங்கம் தூத்துக்குடி மீனவர்கள் உள்பட 16 மீனவர்கள் விடுதலைக்கு இலங்கை அரசாங்கமே நடவடிக்கை எடுக்க அவர்கள் சட்டத்தில் இடம் இருக்கிறதா? அல்லது பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக இலங்கை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துதான் நிவாரணம் கோரவேண்டுமா? என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்பீல் செய்யவேண்டுமென்றால், உடனடியாக அதற்கான உரிய நடவடிக்கையை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தொடங்கவேண்டும். இதுமட்டுமல்லாமல் இனி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்தால் பிடிபடுவதும் சிறையில் அடைக்கப்படுவதும் நிச்சயம். எனவே மீன்பிடி படகுகளில் செல்பவர்கள் அனைவருக்கும் எல்லையை துல்லியமாக காட்டும் வகையிலான டிரான்ஸ்பாண்டர் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவியை மானியமாக தாமதம் இல்லாமல் கொடுப்பதே சாலச்சிறந்ததாகும். மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான ஏற்பாடுகளையும் மத்திய–மாநில அரசுகள் செய்யவேண்டும்.

Next Story