வருமான வரி கட்டுபவர்களுக்கு சலுகைகள்


வருமான வரி கட்டுபவர்களுக்கு சலுகைகள்
x
தினத்தந்தி 28 Oct 2018 11:00 PM GMT (Updated: 28 Oct 2018 11:46 AM GMT)

இந்தியாவில் கடந்த 158 ஆண்டுகளாக வருமானவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

2017–18–ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கலை பொறுத்தமட்டில் சமீபத்திய நிலவரப்படி, இந்த ஆண்டு 6 கோடியே 85 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 26–ந் தேதி கணக்குப்படி, இந்திய நாட்டின் ஜனத்தொகை 135 கோடியே 87 லட்சத்து 11 ஆயிரத்து 6 ஆகும். இவ்வளவு மக்கள்தொகை உள்ள நாட்டில் வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கை இவ்வளவு குறைவாக இருக்கிறது என்றால் நிச்சயமாக அது ஏற்புடையதல்ல, மாதசம்பளம் பெறுபவர்கள் மட்டுமே வரியை ஏய்க்க முடியாது என்ற நிலைமை இப்போது இருக்கிறது. இதுதவிர, தொழில் அதிபர்கள், வர்த்தகம் செய்பவர்கள் மற்றும் மாதவருமானம் இல்லாமல், பல்வேறு தொழில்களை செய்பவர்களில் அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டும் என்ற நேர்மையோடு எண்ணுபவர்கள்தான் வருமானவரி கட்டுகிறார்கள். 

முறையாக வருமானவரி கட்டுபவர்களுக்கு ஒரு பெரிய குறை இருக்கிறது. நாம் வருமானவரியை ஆண்டுதோறும் முறையாக கட்டுகிறோம். ஆனால் நமது வருமானவரி கணக்கைத்தான் வருமான வரித்துறை துருவி, துருவி ஆராய்ந்து கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு தேடி, அந்த வருமானம் என்ன?, இந்த சேமிப்புக்கான வட்டி எங்கே?, இந்த பொருளை வாங்கி இருக்கிறீர்களே?, அதன் கணக்கு என்ன? என்பதுபோல, பல விவரங்களை கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் வீட்டில் திருமணம், கல்வி செலவு போன்றவற்றுக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை கொண்டுபோய் வங்கியில் டெபாசிட் செய்தால், அதற்கு கணக்குகேட்டு இப்போது நோட்டீஸ் வருகிறது. இவ்வாறு பல குறைகள் இருக்கும் நேரத்தில், கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி நேர்மையாக வருமானவரி கட்டுபவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கூறியதற்கு ஏற்ப, தற்போது அரசு ஒரு திட்டத்தை பரிசீலித்து கொண்டிருக்கிறது. 

நேர்மையாக வருமான வரி கட்டுபவர்களுக்கு விமான நிலையம், ரெயில்வே நிலையங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் முன்னுரிமை அளிக்கலாமா? என்று ஒரு பரிசீலனை நடந்து வருகிறது. இதுதவிர, மேலும் பல பரிசுகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், தொடர்ந்து வருமானவரி கட்டுபவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு அரசு விழாக்களில் உரிய மரியாதை வழங்கப்பட்டு, அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு தெரிவிக்கவும் ஒரு பரிசீலனை இருக்கிறது. விரைவில் நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் கொடுத்த பிறகு, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு பிரதமர் ஒப்புதல் பெற்றபிறகு, அமைச்சரவை இதுகுறித்து முடிவு மேற்கொண்டு அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. நிச்சயமாக இதுபோன்ற கவுரவங்கள் வருமானவரி கட்டுபவர்களுக்கு ஊக்கமளிக்கும். மேலும் இத்தகைய சலுகைகள் அளிப்பதன் மூலம், இதுவரை வருமானவரி கட்டாதவர்களையும் தாங்களாகவே வருமான வரி வளையத்துக்குள் நுழைவதற்கு வழிசெய்யும். ஆனால், இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்ற பெயரில் வருமானவரி கட்டும் அளவுக்கு வருமான வரி கட்டாதவர்களுக்கு இதுபோன்ற சேவைகளில் பாதிப்பு இருக்கக்கூடாது. அவர்களையும் விட்டுவிடக்கூடாது.

Next Story