தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டாம்


தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டாம்
x
தினத்தந்தி 31 Oct 2018 10:30 PM GMT (Updated: 2018-10-31T20:10:07+05:30)

ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஓய்வுபெற்ற ஆசிரியர் அப்பாவு பல சமூகபிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவது வழக்கம்.

ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஓய்வுபெற்ற ஆசிரியர் அப்பாவு பல சமூகபிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவது வழக்கம். இதுவரை இயற்கை பேரழிவினால் விவசாயிகள் விளைவித்த பயிர் பாதிக்கப்பட்ட நிலையில், தனிநபர் விவசாயிக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் இன்சூரன்ஸ் வழங்கவேண்டும். கங்கை–காவிரி இணைப்புத்திட்டத்தை வைகை, தாமிரபரணி, நம்பியாறு, பழையாறு வரை நீட்டிக்கவேண்டும். ஆற்றில் மணல் எடுப்பதை தடை செய்யவேண்டும் என்பது போன்ற இன்னும் பல பிரச்சினைகளுக்காக சமூகநல வழக்குகளை தொடர்ந்த அவர், இப்போது எதிர்கால மாணவச்செல்வங்களின் நல்வாழ்வுக்காக ஒரு வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் தமிழை பாடமொழியாக கொண்டு படிக்கும் மாணவர்களுக்கு 2–ம் வகுப்பு முதல் 12–ம்வகுப்பு வரை சரளமாக ஆங்கிலத்தில் பேசும் பயிற்சிகளை அளிக்கவேண்டும் என்று அந்தவழக்கில் முக்கிய சாரம்சமாக குறிப்பிட்டுள்ளார். தற்போது தமிழ்நாட்டில் 37,211 அரசு பள்ளிக்கூடங்கள், 8,403 அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள், 12,419 தனியார் பள்ளிக்கூடங்கள் இருக்கிறது. அதில் ஒருகோடியே 25 லட்சம் மாணவர்கள் படித்துவருகிறார்கள். 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் இருமொழிக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முதல்மொழி பாடமாக தமிழ் மொழியும், 2–வது மொழிபாடமாக ஆங்கிலமும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. தமிழை பாடமொழியாக கொண்டு கல்வி கற்கும் மாணவர்களால் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் முடியவில்லை. ஆனால், பள்ளிக்கூடத்தில் தமிழ்மொழியில் கல்வி கற்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு செல்லும்போது, அங்கு ஆங்கில மொழிதான் பாடமொழியாகிறது. அதனால் முழுக்கமுழுக்க தமிழில் படித்து உயர்கல்விகளில் ஆங்கிலத்தில் கற்றுக்கொடுக்கும்போது திணறிப்போய்விடுகிறார்கள். சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக்குலே‌ஷன் போன்ற பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டும் எளிதாக உயர்கல்வியை கற்றுவிடுகிறார்கள். தமிழை பாடமொழியாக படித்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசமுடியாததால் அவர்களால் சிறந்து விளங்கமுடியவில்லை. உயர்கல்வி படிக்கும்போது மட்டுமல்லாமல், வேலைக்கு செல்லும்போதும் இதேநிலைதான் நீடிக்கிறது. பொறியியல் படித்துமுடித்த ஏராளமான மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை இல்லாததால், வேலைகிடைக்காமல் வாடுகிறார்கள் என்பதுபோன்ற கருத்துகளை மையமாக வைத்து அந்தவழக்கை அப்பாவு தொடர்ந்திருக்கிறார். இந்தவழக்கு விசாரணை வருகிற 8–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய காலக்கட்டங்களில் தாய்மொழி கல்வித்தான் சிறந்தது என்று ஒருபக்கம் வாதிட்டாலும், ஆங்கில மொழியில் பெறும் புலமைதான் எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. உயர்கல்வியில் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை தேடிச்செல்லும்போது நேர்முகத்தேர்வு பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. அந்த நிறுவனங்களும் வெளிமாநில அல்லது வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், நிறுவனங்களோடு தொடர்புகொள்ளும்போது, அவர்களோடு பேசுவதற்கும், தகவல் பரிமாற்றங்களுக்கும் ஆங்கிலத்தையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள். ஆக, ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் முடியவில்லை என்றால், நமது இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயமாக ஒளிமிகுந்ததாக இருக்கமுடியாது. அரசு பணிகளில் வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் புலமை அதிகமாக தேவையில்லாமல் இருக்கலாம். இன்னும் ஐகோர்ட்டில் ஆங்கிலத்தில்தான் வழக்கு விசாரணைகள், தீர்ப்புகள் இருக்கிறது. எனவே, தமிழக அரசின் கல்வித்துறை, கோர்ட்டு தீர்ப்புவரை காத்திருக்காமல், உடனடியாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் தமிழை பாடமொழியாக கொண்ட மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் பயிற்சிகளை அளிக்கவேண்டும்.

Next Story